களுத்துறையில் காவியமான காரைதீவு தர்மிகன்!

0
1012
களுத்துறைச் சிறைச்சாலை பஸ்மீதான தாக்குதல் சம்பவத்தில் உயிர்நீத்த காரைதீவைச்சேர்ந்த  சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவானந்தன்  தர்மிகனின்41வது நாள் சடங்கு இன்றாகும். .
 
கடந்த பெப்ருவரி  மாதம் 27ஆம் திகதி 9மணியளவில் களுத்துறைச்சிறைச்சாலையிலிருந்து பாதாள உலககோஸ்டியினரை நீதிமன்றுக்கு சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு சென்றவேளை துப்பாக்கிச்சமரில் பலியானார் தர்மிகன் என்ற  சிறைச்சாலை இளம் உத்தியோகத்தர்.
 
அச்சம்பவத்தில் 5கைதிகளும் 2 சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டமை தெரிந்ததே. ஏனைய இரு உத்தியோகத்தர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கைதுசெய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒருபுறம்.
 
அந்தக்காலப்பகுதியில் தர்மிகன் சகல ஊடகங்களிலும் ஒரு பேசுபொருளாகஇருந்தார். 24வயதுடைய தர்மிகனின் அகால மரணம் என்பது அனைவரது  மனங்களையும் நெகிழச்செய்தது.
 
 
காரைதீவு சோகமயம்!
 
அச்சம்பவத்தில் தர்மிகன் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்வியுற்றநாள் தொடக்கம் 2ஆம் திகதி பிரேத அடக்கம் வரை 4தினங்கள் காரைதீவு சோகமயமாகியது. இயற்கையும் அந்த 3தினங்களும் அழுதது.
 
அவர் பிறந்த விபுலானந்த வீதி முதல் கண்ணகை அம்மன் ஆலயம் வரை தொடர்ந்து வெண்ணிறக்கொடிகளும் பதாதைகளும் கட்;டப்பட்டன. ஒவ்வொரு கம்பங்களிலும் வாழைமரங்கள் கட்டப்பட்டன. வீதியெங்கும் இனமதபேதம் பாராத சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவர்களைக்கொணர்ந்த பஸ்கள்.
 
கடந்த 02ஆம் திகதி மாலை 4மணியளவில் காரைதீவு மண்ணில் இடம்பெற்ற அவரது இறுதியாத்திரை ஒரு சரித்திரமாகியது.
ஆம். காரைதீவு வரலாற்றில் ஜனாதிபதியின் கௌரவத்தோடு சிறைச்சாலை திணைக்களத்தினரின் மரியாதை அணிவகுப்போடு சார்ஜன்ட் பதவியுவர்வோடு இடம்பெற்ற ஓர் இறுதி யாத்திரை  இதுவே. 
 
இலங்கை சிறைச்சாலை உத்தியோகத்தர் வரிசையில் இவர் 100வது அணியைச்சேர்ந்தவர். இவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டு ஆயுதமும் வழங்கப்பட்டது. இவரது அணியில் சுமார் 500பேர் தெரிவானார்கள்.அவர்களில் 95பேர் தமிழ்உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தர்மிகன் அடுத்தவருடம் நியுசிலாந்து செல்லவிருந்தவர். 10ஆம் திகதி வருவேன் என்று சொன்னவரைத் தான்கண்டது களுத்துறை வைத்தியசாலையில் பிரேதமாக என்றுகூறி அழுதார் அவரது தந்தையார் ப.சிவானந்தம்.
 
தர்மிகனின் குடும்பம்!
வித்தகன் விபுலானந்தன் பிறந்த காரைதீவு மண்ணில் அவரது விபுலானந்த வீதியில் வதியும் ஓய்வுநிலை நிருவாக உத்தியோகத்தர் ப.சிவானந்தம் முகாமைத்துவ உதவியாளர் சிவயோகம் தம்பதியினரின் மூத்தபுதல்வன் தர்மிகன். தர்மிகனுக்குவயது 24 .இவருக்கு இரு சகோதரர்கள். சகோதரன் சமிந்தன்(வயது 21 ) சகோதரி மிதுர்ஜா (வயது 19).
 
 
அப்படி என்னதான் நடந்தது?
சம்பவம்!
சிறைச்சாலை உத்தியோகத்தராக பணிக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள்தான்.
வெலிக்கடைஇ மாத்தறை போன்ற பெரிய சிறைச்சாலைகளில் பயிற்சிப் பணிகளை முடித்து களுத்துறை சிறைச்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தான்.
 
சொந்த ஊர் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு.
2017.02.27 அன்று அவனுக்கு பிரபல பாதாள உலக குழு உறுப்பினர்களை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் விசேட வழிக்காவல் கடமை வழங்கப்படுகிறது.
 
அந்தக் கடமையின் நிமித்தம் துப்பாக்கியேந்திய பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமைக்கு தயாராகிஇ சிறைச்சாலைப் பேருந்தில் சக உத்தியோகத்தர்களுடன் பயணமாகிறான்.
அது அவனது பயணத்தின் இறுதிநாள் என்பதை நினைத்தும் பார்க்காதவனாக.
 
களுத்துறை சிறைச்சாலையிலிருந்து இரண்டு பேருந்துகளில் கைதிகளை ஏற்றிக்கொண்டு ஐநூறு மீற்றர்கள் தூரம் பயணமாவதற்கு முன்பாகவே சிறைச்சாலைப் பேருந்துகள் மீது சரமாரியான துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன.
 
மூன்று பகிதிகளாகப் பிரிந்து நின்று சிறைச்சாலைப் பேருந்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
நிலை எடுப்பதற்கான அவகாசமில்லாமல் தொடர்ந்த தாக்குதலால் நிலை குலைந்தனர்.
 
தனது கைத்துப்பாக்கியை எடுத்து தயார் செய்த அதிகாரிதுயடைழச மீது சூடு விழுந்தது.
இன்னும் சில உத்தியோகத்தர்களுக்கும் சூடு விழுந்து கதறிக்கொண்டிருந்தனர்.
 
இவ்வாறு ரணகளமாகிக்கொண்டிருந்த பொழுது சற்றும் பயமின்றி தனது துப்பாக்கியை எடுத்து சிறைச்சாலைப் பேருந்து மீது தாக்குதல் நடத்தியவாறு முன்னேறியவர்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்துகிறான் ஒரு இருபத்தினான்கு வயது இளம் உத்தியோகத்தன்.
அவன்தான் தர்மிகன் என்ற தமிழன்.
எதிர்ப்பே இல்லாமல் முன்னேறிவந்த துப்பாக்கிதாரிகள் அதிர்ச்சியடைகின்றனர்.
 
இருவர் சூடுபட்டு விழுகின்றனர்.
அந்த நேரத்தில் தர்மிகனின் ரி56-2 ரக துப்பாக்கி இயங்க மறுக்கிறது.
நீண்ட காலமாக சூட்டுப்பிரயோகம் பண்ணப்படாத நிலையிலிருந்தமையால் அவ்வாறு நிகழ்ந்துவிடுகிறது.
 
துப்பாக்கியை மீளியக்க நிலைக்கு கொண்டுவர தர்மிகன் முயற்சித்த வேளையில் மறு பக்கத்தில் இருந்த ஒரு துப்பாக்கிதாரியின் தாக்குதலால் அந்த இடத்திலேயே வீரமரணமடைகிறான்.
அதன் பின்னர் எதிர்ப்புகளின்றி தங்கள் வேலையை முடித்துவிட்டு காயமடைந்த துப்பாக்கிதாரிகளையும் தூக்கிகொண்டு 
அவர்கள் வெளியேறுகின்றனர்.
 
ஆறுக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அந்தப் பேருந்துகளில் இருந்தபோதிலும் துணிச்சலாக தனியொருவனாக நின்று எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளான் தர்மிகன்.
சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கே மீண்டும் ஒரு முறை தமிழனின் வீரத்தைப் பறைசாற்றிச் சென்றுள்ளான்.
 
அவனது துணிச்சலான செயற்பாட்டுக்காக சிறைச்சாலைத் திணைக்களம் சார்ஜன் பதவி வழங்கி கௌரவித்துள்ளது.
 
இந்தத் தகவல்கள் களுத்துறைச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கூறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
வரலாற்றுரீதியிலான  இறுதி யாத்திரை!
 
அன்று மார்ச் 2ஆம் திகதி சுமார் 5ஆயிரம் பேர் காரைதீவு இந்து மயானத்தில்கூடியிருந்தனர்.சோகமே உருவாக அனைவரும் காட்சியளித்தனர்.வானமும் இடையிடையே அழுதது. மழை பொழிந்தது.
 
வீட்டிலிருந்து தர்மிகனின் பூதவுடல் தாங்கிய பேழைக்கு சிறைச்சாலைக்கொடி போர்த்தப்பட்டு திணைக்களத்தினரால் தாங்கிவரப்பட்டு பின்னர் பிரதேசசபை பிரேதஊர்தியில் ஏற்றப்பட்டு முன்னே வர்ணவிளக்குகளுடன்கூடிய பொலிஸ் கார் கௌரவமளித்தவாறு முன்னேவர இறுதியாத்திரை மயானத்தைநோக்கி நகர்ந்து.பின்னே ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்தனர்.
 
சுமார் 2கிலோமீற்றர் தொலைவிலுள்ள காரைதீவு இந்து மயானத்திற்கு அனைவரும் நடந்து வந்தார்கள்.அங்கு அணிவகுப்புமரியாதை வழங்கப்பட்டு சிறைச்சாலை ஆணையாளர் ஜெயசிங்க தலைமையில் இறுதிநிகழ்வு நடைபெற்றது.
 
சிறைச்சாலைத்திணைக்களத்தின் பத்திரம் ஒலிவாங்கியில் வாசிக்கப்பட்டது. அதில் அவர் தொடர்பாக பாராட்டி குறிப்பிடப்பட்டுள்ளதோடு அவரர் சார்ஜன்டாகப் பதவியுயர்த்தப்பட்ட செய்தியும் வாசிக்கப்பட்டது. பின்னர் அந்தபத்திரம் ஒரு தங்கநிற பேழையில் வைக்கப்பட்டு தர்மிகனின் தொப்பியோடு தட்டில் வைத்து ஆணையாளர் ஜெயசிங்க தர்மிகனின் தந்தையார் சிவானந்தத்திடம் கையளித்தார். அவரது குடும்பஉறுப்பினர்களும்வந்திருந்தனர்.
 
அவர்கள் ஜெயசிங்கவின் பாதத்தில்வீழந்துவணங்கி அழுதகாட்சி பலரைது மனதையும் நெகிழச்செய்தது.
பின்பு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு   மயானத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் ஞா.ஸ்ரீநேசன் ஏ.கே.கோடீஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் சிவாஜிலிங்கம் சிறைச்சாலை ஆணையாளர் ஜெயசிங்க களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகர் பல்லேகபம உள்ளிட்ட பலபிரமுகர்களும் கலந்தகொண்டிருந்தனர்.
அஞ்சலி உரைகள்!
 
 
புகழ்பூத்த வீரமண்ணான காரைதீவில் பிறந்த தர்மீகன்  சமரிலே நேருக்குநேர் மோதி வீரமரணம் அடைந்திருக்கிறார்.அன்னாரது இழப்பு பேரிழப்பு.அது ஈடுசெய்யமுடியாதது. அந்தவீரப்புதல்வனை ஈன்ற பெற்றோரும் இந்த மண்ணும் பெருமையடையவேண்டும். அன்னாருக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
 
அன்னாரது வீட்டில் இறுதிக்கிரியைகளுடன்கூடிய இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக ஜனாதிபதியின் மலர்வளையத்தை அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் சாத்தினார். ஜனாதிபதியின் மலர்ச்செண்டை காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தர்மிகனின் தாயார் திருமதி சிவயோகம் சிவானந்தத்திடம் வழங்கிவைத்தார்.
 
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்:
கல்வியிலும் வீரத்திலும் சிறந்துவிளங்கும் வித்தகன் விபுலானந்தன் பிறந்த காரைதீவு மண்ணில் பிறந்த தம்பி தர்மிகன் வீரச்சாவை அடைந்திருப்பது பெருமையாகவிருந்தாலும் அது ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். பெற்றார் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைச் செலுத்துகின்றேன். 
 
சிறைச்சாலை ஆணையாளர் ஜெயசிங்க:
எமது திணைக்களம் வீரதீரமிக்க ஒரு அலுவலரை துரதிஸ்டமாக இழந்திருக்கிறது.இந்தச்சின்னவயதில் தர்மிகன் என்ற வீரப்புதல்வனை இழந்தது சிறைச்சாலைத்திணைக்களத்திற்கு பேரிழப்பு. அவர் அந்தசண்டையிலே இறுதிவரை போராடியிருக்கின்றார். எமது திணைக்களம் தர்மிகனது குடும்பத்தைக்கைவிட்டுவிடாது.அவருக்கான அத்தனை உதவிகளையும் செய்வோம்.சிறைச்சாலைத் திணைக்களத்தின் சார்பில் எமது வீரவணக்கத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.
 
களுத்துறை சிறை அத்தியட்சகர் பல்லேகம:
எமது சிறைச்சாலையிலுள்ள உத்தியோகத்தர்களில் கண்pயமான பயமில்லாத ஒழுக்கமான ஒரு அலுவலர் தர்மிகன். அவர் ஒருவருடகால சேவையைத்தாண்டிய நிலையில் அகாலமரணமடைந்திருப்பது மிகவும் கவலைக்குரியது. நல்லதொரு வீரத்திருமகனை நாம் இழந்திருக்கின்றோம்.எமது களுத்துறை சிறைச்சாலை சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அதிபர் வி.கமலநாதன் அதிபர் செ.மணிமாறன் ஆலயதலைவர் சி.நந்தேஸ்வரன் ஆசிரியர் செ.சிவராஜா ஆகியோரும் அஞ்சலி உரையாற்றினார்கள்.
 
மொத்தத்தில் காரைதீவில் பிறந்த தர்மிகன் களுத்துறையில் காவியமானான் என்ற வரலாற்றுப்பதிவு எஞ்சியிருக்கிறது.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
 tharmikan-a tharmikan-b