தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடு

0
506

judge Batticaloa Ganesarajahமட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்; ஏனைய தினங்களில் அதிகாலை மற்றும் மாலையில் 6 மணிக்குப் பின்னர் வகுப்புகள் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராசா பணித்துள்ளார்.
தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றில் இரவு வேளைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றமை தொடர்பில் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராசா ஆகியோரின் கவனத்துக்கு செவ்வாய்க்கிழமை (4) பெற்றோர் கொண்டுவந்தனர். இதனை அடுத்தே, இப்பணிப்புரையை நீதவான் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட சமூகமட்ட விழிப்புணர்வுக் குழுவிற்கு பொது மக்களாலும் சமூக ஆர்வலர்களாலும் பிரத்தியேக வகுப்புக்களால் மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
காலை 6 மணிக்கு முன்னரும் மாலை 6 மணிக்கு பின்னரும் வகுப்புக்கள் நடாத்தக்கூடாது. ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புக்கள் முற்றாக தடை செய்யப்படவேண்டும். வகுப்பு நிலையங்கள் சுகாதாரமான முறையில் காணப்படவேண்டும்.
பிரத்தியேக வகுப்புகளை நடத்துவோர் மேற்குறிப்பிட்ட விடயங்களை கவனத்திற்கொண்டு செயற்படுமாறும் இவைகளை மீறி செயற்படுவோர் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமிடத்து அவை பாலியல் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடுகளாக கருதப்பட்டு பொலிசார் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் இணைந்து நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறியத்தருகின்றோம்.
இதற்கு சமுதாய சீர்திருத்த திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகத்தர், மனித உரிமை அமைப்புகள், சட்ட வல்லுனர்கள் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.