நீதியை வழங்காத எப்பொறிமுறையும் ஏமாற்றுவித்தையே – பா.உ. ஸ்ரீநேசன்

0
624

srinesan-aaபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காத எப்பொறிமுறையும் ஏமாற்றுவித்தையாகவே அமையும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.உ. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மலும் தெரிவித்துள்ளதாவது,

குற்றச்செயற்பாடுகள் தொடர்பாக முக்கியமாக இருவகையினர் காணப்படுகின்றனர். ஒரு வகையினர் பாதிக்கப்பட்டவர்கள், மறுவகையினர் பாதிப்புக்களை விளைவித்தவர்கள். இவற்றை விட இன்னும் இருவகையினர் உள்ளனர். ஒருவகையினர் பாதிப்புக்களை விளைவித்தவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்க வேண்டும், என வலியுறுத்துகின்றவர்கள். மறுவகையினர் குற்றவாளிகளைப் பாதுகாக்க விரும்புகின்றவர்கள்.
இப்படியான நிலையில் யுத்தக்காலத்தின் போது யுத்தக்குற்றங்களை விளைவித்தவர்களை தண்டிக்க வேண்டும், என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளை யுத்தம் புரிந்த படையினரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தமாட்டேன், என்று நாட்டின் தலைவர் ஜனாதிபதி கூறிவருகின்றார். நாம் கேட்பதெல்லாம் யுத்தக்குற்றம் புரிந்த, மக்களை வதைத்த, காணமல் ஆக்கிய குற்றவாளிகளைப் பற்றியவையாகும்.
‘சட்டத்தின் முன்பாக யாவரும் சமன்” என்ற அடிப்படையுரிமை வாசகம் இந்நாட்டில் அடிக்கடி பொய்பிக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, ஆயுதம் தரித்த படையினர் குற்றமிழைத்தாலும், கண்டுகொள்ளாத பாரபட்சமான நிலைப்பாடு காணப்படுகின்றது. இதனால்தான் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் உள்நாட்டு பொறிமுறை மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ரவிராஜ்(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) படுகொலை, குமாரபுரம் படுகொலைத் தீர்ப்புகள் தமிழர்களை நம்பிக்கை இழக்க வைத்துள்ளது. இதனால்தான் தமிழ்மக்கள் சர்வதேச நீதிப்பொறிமுறை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.
குற்றம் புரிந்த படையினர், குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைக்கின்றவர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் வலிகள், வடுக்களை உணர மறுக்கின்றனர். இவர்கள் பேரினவாதிகளாகவே தம்மை இனங்காட்டிக்கொள்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வதைக்கப்பட்டவர்கள், பாலியல் பலாத்காரத்துக்குள்ளானவர்கள் யாவரும்; இந்நாட்டு மக்கள் என்பதை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்தாக வேண்டும். பெரும்பான்மை இனத்தவர்கள் என்பதற்காக குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்கக்கூடாது. குற்றவாளிகள் பாதுகாக்கப்படும் வரை இந்நாட்டில் எப்பொறிமுறையினையும் பாதிக்கப்பட்டவர்கள் நம்பமாட்டார்கள்.
“மாமியார் உடைத்தால் மட்குடம், மருமகள் உடைத்தால் பொற்குடம்” என்பதாக இரட்டைத்தன்மையான நீதி இந்நாட்டில் இருப்பதனால்தான் தமிழ்மக்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையினை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்முறையான நீதி, முறையான தலைவர்கள் இந்நாட்டில் இருந்திருந்தால், இந்நிலைமை ஏற்பட்டிருக்கவே மாட்டாது. பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது நிலையான போராட்டங்களையும், கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் நீதியான, நியாயமான தலைவர்களாக இருக்க முடியாது.