கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டது.

0
595

EUSL_logo2கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்புவிழா -2017 பிற்போடப்பட்டுள்ளதாகவும் அடுத்த திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் இன்று வியாழக்கிழமை (06) மாலை அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைகழகத்தின் நல்லையா மண்டபத்தில் எதிர்வரும் 08.04.2017 திகதி சனிக்கிழமையன்று பொதுப் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பதிவாளர் அலுவலகம் தொ.பே.இல- 065-2240533மற்றும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் கல்வி விவகாரம் தொ.பே.இல- 065-2240584உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, கல்லடி, வந்தாறுமூலை, திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களே பட்டம் பெறவிருந்தனர்.

நான்கு அமர்வுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்த இப்பட்டமளிப்பில் கலை, கலாசாரப்பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடம், சித்த மருத்துவ கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவப்பீடம், விவசாயபீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானபீடம், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கே பட்டங்கள் வழங்கப்படவிருந்தது.

இதில் கலை, கலாசாரத்துறையில் 450 பேரும் வைத்தியத்துறையில் 50 பேரும் விவசாயத்துறையில் 11 பேரும் சித்த மருத்துவத்துறையில் 10 பேரும் உட்பட மொத்தமாக 852 பேர் பட்டம் பெறவருந்தமை குறிப்பிடத்தக்கது.