எதிர்காலத்தை கட்டியெழுப்ப மிகவும் போராட வேண்டியவர்களாக உறுகாமம் மக்கள்

0
239

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 30கிலோ மீற்றர் தொலைவில் ஏறாவூர்பற்று செயலகப்பிரிவில் உறுகாமம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வாழும் மக்கள், 30 வருட யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு, இறுதியுத்த காலத்தில் முற்றாக வெளியேறி, இடம் பெயர்ந்து, நலன்புரி நிலையங்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்திருந்து, போர் முடிவுற்ற நிலையில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஓரளவு வசதி படைத்த மக்கள் நகர்ப்புறங்களிலே தங்களுக்கான வாழ்விடங்களை அமைத்திக் கொண்டு வாழ்க்கையைத் தொடர, வசதி வாய்ப்புக்கள் அற்ற வறிய மக்களே உறுகாமம் கிராமத்தில் தங்களது வாழ்க்கையை மீள ஆம்பித்தனர். இவர்கள், வாழ்ந்திருந்த குடியிருப்புக்கள் முற்றாகவும் பகுதியாகவும் அழிக்கப்பட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக, வளர்த்துப் பேணிப்பாதுகாத்த, மா, தென்னை, பலா போன்ற, பயன்தரு மரங்கள் அனைத்தும் போரினால் மட்டுமல்லாது, காட்டு யானைகளினாலும் வேறு மிருகங்களினாலும் அழிக்கப்பட்டும் அழிந்தும் போயிருந்ததாகவும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.

ஏக்கத்தோடும் வேதனையோடும் நம்பிக்கையின்மையோடும், அரசினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் அரைகுறை உதவிகளோடும் வாழ்க்கையை ஆம்பித்த மக்கள் மீண்டும் எழுந்து நிற்க முயற்சிப்பதாகவும், ஒரு சில குடும்பங்கள் ஏதோ ஒருவகையில் வாழ்வாதார நடவடிக்கைகளை ஆம்பித்து தங்கள் தங்கள் குடும்பங்களை இயலுமான வரையில் நிர்வகித்து வருகின்றார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை உற்றார் உறவினர்களின் உதவியோடு நகர்ப்புற பாடசாலைகளில் கற்பித்து வகின்றார்கள். அதே வேளை கூலித் தொழில் செய்து பிழைப்போரும் போரினால் உழைப்பாளிகளையோ கணவனையோ இழந்தோரும் தங்கள் குடும்ப வாழ்வை அன்றாடம் நிர்வகித்துக் கொள்வதிலும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலும் மிகவும் போராடவேண்டியவர்களாக உள்ளனர். எனவும் மேலும் அம்மக்கள் தெரிவித்தனர்.