உயர்தர மாணவர்கள் வாய்ப்புக்களை விளக்கமின்மையால் இழக்கின்றனர்.

0
382
 கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு வெளியானதும், உயர்தரத்தில் மாணவர்கள் எவ்வாறான பாடங்களை தெரிவு செய்ய வேண்டுமென்ற விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் தமது உறவினர்கள் கற்ற பாடங்களையே தெரிவு செய்கின்றனர். வருடாந்தம் பல்கலைக்கழகங்களிலே புதிய புதிய கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவற்றினூடாக தமக்கான தொழில்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும், பல்கலைக்கழகங்களுக்கு இலகுவாக உள்நுழையக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன. அவ்வாறான வாய்ப்புக்களை விளக்கமின்மையினால் இழக்க நேரிடுகின்றன. என கிழக்கு பல்கலைக்கழக கலைத்துறை பீடாதிபதி எம்.ரவி தெரிவித்தார்.
அண்மையில் வெளியான கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், சித்தியடைந்து உயர்தரம் கற்கவுள்ள மாணவர்களுக்கான பாடத்தெரிவு தொடர்பான செயலமர்வு இன்று(04) செவ்வாய்க்கிழமை செங்கலடி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றபோதே இதனை குறிப்பிட்டார்.
இதன்போது, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பிரிவில் உள்ள பாடங்கள் தொடர்பிலும், அவற்றில் எவற்றினை தெரிவு செய்வதன் மூலம் தற்காலத்தில் வெற்றிபெறலாம் என்பது தொடர்பிலும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
பாடத்தெரிவு தொடர்பான விளக்கத்தினை,  ஒப்பீட்டு சமயம் மற்றும் சமூக விஞ்ஞான துறை, சிரேஸ்ட விரிவுரையாளர் ஆர்.சகாயசீலன் கலந்துகொண்டு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.