நான் அமைச்சரல்ல நான் ஒரு போராளி: வேடிக்கை பார்ப்பவனல்ல: அடுத்த அமைச்சரவையில் பேசி தொழில் பெற்றுத்தருவேன்! காரைதீவில் பட்டதாரிகளிடம் அமைச்சர் மனோகணேசன் உறுதி!

0
545
– காரைதீவு  நிருபர் சகா – 
 
நான் வெறுமனேவந்து வேடிக்கை பார்த்துவிட்டுப்போக வரவில்லை .சுற்றுலா வந்து போகவும் வரவில்லை.. நான் மனோகணேசன் நான் அமைச்சரல்ல. ஒரு போராளி. அமைச்சரவையிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி போராடித்தான் காரியம்சாதிப்பேன். எனவே உங்களது பிரச்சனைகளையும் ரியநேரத்தில் உரியவர்களுடன் பேசி தொழில் பெற்றுத்தருவேன்.
 
இவ்வாறு காரைதீவில் 36வது நாளாக சாத்வீகப்போராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மத்தியில் உரையாற்றுகையில்  தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல்  அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
 
 திங்கட்கிழமை 11.3மணியளவில் திடிரென காரைதீவுக்கு வந்திறங்கிய அமைச்சர் மனோகணேசன் பட்டதாரிகளுடன் முதலில் அளவளாவினார்.அவருடன் மனிதஅபிவிருத்திதாபன இணைப்பாளர் பொ.ஸ்ரீகாந்தும் வருகைதந்திருந்தார்.
 
அப்போது அரசதொழில் இல்லாவிடில் சுயதொழில் தனியார்துறைகளில் தொழில் செய்யத் தயாரா என்றும் அமைச்சர் ;கேட்டார். 
 
பட்டதாரிகள் பதிலளிக்கையில் நாம் பட்டம் முடித்துவிட்டு தங்கப்பதக்கம் வாங்கிவிட்டு சுயதொழில் செய்யவா? அதற்காகவா நாம் படித்தோம்? அப்படியெனின் பல்கலைக்கழகங்களை மூடிவிடலாமே? என்று பதிலளித்தனர்.
 
இத்தருணத்தில் அமைச்சர் சற்று சூடாக படித்தவர்கள் சுயதொழில் செய்யக்கூடாதா? பெரிய பெரிய நிறுவனங்களை நடாத்துபவர்களே படித்தவர்கள்தான். படித்துவிட்டோம் என்பதற்காக சுயதொழில் செய்யமாட்டோம் தனியார்துறைகளில வேலைசெய்யமாட்டோம் என்று கூறுவது தவறு.அதற்காக நீங்கள் அதனைத்தான் செய்யுங்கள் என நான் திணிக்கமாட்டேன்.
 
 நான் உங்கள்விடயத்தை அமைச்சரவையில் அல்லது உரியவர்களிடம் எடுத்துச்சொல்லும்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில்சொல்லவேண்டுமே.அதற்காகவே கேட்டேன்.என்றார்.
 
பட்டதாரிகள் தலைவர்களோடு கலந்துரையாடிவிட்டு பின்னர் பேராட்டத்திலீடுபட்டுக்கொண்டிருக்கும் சகல பட்டதாரிகள் மத்தியிலும் உரையாற்றினார்.
 
அங்கு அமைச்சர் மனோகணேசன் மேலும் உரையாற்றுகையில்:
இலங்கையில் அரசதொழில்துறைகளில் 15லட்சம் பேர் தொழில் செய்கின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் சிங்களவர்களே. எனவே விகிதாசாரப்படி தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய 25வீத அரச தொழிலைத்தாருங்கள் என நாம் கேட்கலாம்.
 
அதைவிடுத்து எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனின் வீட்டுக்கு நிதி ஒதுக்கலாமா? அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு நிதி கோடிக்கணக்கில் ஒதுக்கலாமா? இராணுவம் பொலிசாரின் சம்ளம் கூட்டப்படுவதென்ன? என்று கேட்கக்கூடாது.
 
ஒரு அரசாங்கம் என்றால் அதெல்லாம் இருக்கும். பாவம் எதிர்க்கட்சித்தலைவர்.வயதானவர்.அவருக்கு வாசஸ்தலம் ஏன் வழங்கக்கூடாது? அது அவருக்குரிய கௌரவம். அவர் என்ன வீதியிலா நிற்பது?  எனவே அவற்றைத்தவிர்த்துவிட்டு எங்களுக்குரிய தொழிலைவாய்ப்புகளைத்தாருங்கள் என்று கேளுங்கள். அது நியாயம்.தர்க்கரீதியானது.நாமும் முயறசிப்போம்.
 
இனவிகிதாசாரம் பேணப்படவேண்டும்.!
 
அரசதுறையில் இனவிகிதாசாரம் பேணப்படவேண்டும். நான் விளையாட்டுக்காக இங்கு வரல்ல. உங்கள் பிரச்சனையைதைதீர்க்க வந்தள்ளேன். நான் உங்களிடம் வாக்கு கேட்கமாட்டேன். நான் கோடீஸ்வரனல்ல. நான் கொழும்பைச்சேர்ந்தவன். ஆனாலும் ஒரு அமைச்சர் நான் முழு நாட்டுக்கும்சொந்தம். அந்த வகையில் நீங்களெல்லாம் எனது சொந்தக்காரர்கள்.அதுதான் இங்குவந்தேன்.
திருமலையில் உயிர்நீத்த பட்டதாரி மாலதிக்கும் எனது அனுதாபங்கள். 
 
கடந்த ஆட்சியில் பகற்கொள்ளை!
 
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பகற்கொள்ளை காரணமாக நாடு கடன்காரராக மாறியுள்ளது. நாடு பாரிய கடன் தொல்லையிலுள்ளது. வெளிநாட்டில் பெற்றகடன்களை அடைக்கவேண்டும். வெளிநாடுகள் இங்குள்ள அரசாங்கம் பச்சையா? நீலமா? என்று பார்ப்பதில்லை. இலங்கை அரசாங்கம்தான் கடன் வாங்கியது. எனவே யார்வந்தாலும் கட்டியே தீரவேண்டும்.
 
 
நாட்டில் ஒருபக்கத்தில் தமது பிள்ளைகளைத்தாருங்கள் என்று போராட்டம் இன்னுமொரு பக்கம் காணியைத்தாருங்கள் என்றுபோராட்டம்.இங்கு தொழில் தாருங்கள் என்று பேராட்டம். பேராட்டங்கள் நியாயமாகவிருந்தாலும் அவற்றைத்தீர்க்க ஒரு பொறிமுறை அவசியம். அதன்படிதான் அதனைத்தீர்க்கவேண்டும்.
 
அமைச்சரவையில் எடுத்துரைப்பேன்!
 
நான் நிசச்யமாக அடுத்த அமைச்சரவையில் வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை நிச்சயமாக வலியுறுத்துவேன்.
அரசாங்கத்தில் தமிழ்மக்களுக்கு வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்டதனால்தான் அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அப்படியானால் இன்னுமொருமுறை நாம் அவர்களை ஆயுதம் ஏந்த வைக்கலாமா? 
தொழில்வாய்ப்புகளில் இனவிகிதாரசாரம் பேணப்படவேண்டும்.நாட்டில் சமாதானம் சகவாழ்வு நிலவவேண்டும்.
நான் பிரதமமந்திரியிடமும் ஜனாதிபதியிடமும் உங்கள் விடயத்தை எத்திவைப்பேன். தீர்வுகாண்பதற்கு என்னாலான முழுமுயற்சியையும் எடுப்பேன் என உறுதிகூறுகின்றேன்.
படித்துவிட்டு உண்ணாவிரதமிருப்பதை நான் விரும்பவில்லை. எனவே உரிய தீர்வு காணப்படும் என்றார்.
unnamed (4) unnamed (5) unnamed (6)