தமிழர்களை ஒருபோதும் பிரிவினைவாதிகள் என்று நினைத்துவிடக் கூடாது

0
725

நாங்கள் ஒருவரை ஒருவர் கௌரவித்தால் இந்த நாட்டில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியும். அப்படி இல்லாமல் நாங்கள் கூடுதலானவர்கள் எமது விருபத்தின் படி தான் எல்லாம் நடக்க வேண்டும், மற்றவர்கள் எங்கள் விருப்பத்திற்கிணங்க தான் இருக்க வேண்டும். என்று நினைத்தால் ஒரு சுமூகமான நிலை ஏற்படாது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்..

திருகோணமலையில் இடம்பெற்ற யொவுன்புரய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிகழ்வின் போது கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இணைச் செயற்பாடாக மாவட்டத்தைச் சேர்ந்த 26 மின்பிடி சங்கங்களுக்கு தோணிகள் மற்றும் 45 மீன்பிடி சங்கங்களுக்கு வலைகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் அதிதியாகக் கலந்து கொண்டு மீன்பிடி சங்கத்தினருக்கு மேற்படி உபகரணங்கள் வழங்கி வைத்ததுடன் அதனைத் தொடந்து யொவுன்புரய நிகழ்வில் கலந்து கொண்ட சிங்கள இளைஞர் யுவதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அமைச்சர் மட்டக்களப்பில் இருந்து சென்ற இளைஞர் குழுவினரையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நடைபெறுகின்ற இந்த நிகழ்வுகளுக்கும் இதற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வுகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. இதற்கு முன்னர் அரசாங்கத்தின் கட்சி அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மாத்திரம் தான் கலந்து கொள்வார்கள். நல்லாட்சி என்கின்ற இந்த ஆட்சியில் இலங்கையில் இருக்கின்ற அநேகமான தமிழ், சிங்கள, முஸ்லீம் கட்சிகள் இணைந்து தற்போது ஒரு நல்ல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

முன்பெல்லாம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசியக் கொடி ஏற்றுவது, தேசிய கீதம் பாடப்படுவது என்பது கிடையாது அப்படி ஒரு நிகழ்வு இடம்பெறுமாயின் அது பாரியதொரு நிகழ்வாகத்தான் இருக்கும் அதுவும் பலத்த பாதுகாப்புடன் இடம்பெறுகின்ற நிகழ்வாகத்தான் இருக்கும். ஆனால் தற்போது அப்படி அல்ல ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்படுகின்றது, தேசியகீதம் பாடப்படுகின்றது. அதன் போது தலைவணங்கியும் நிற்கின்றோம். அது ஏனெனில் இப்போது இலங்கையிலுள்ள எல்லா மக்களையும் அவர்களது உரிமைகளையும் மதிக்கின்ற அரசாங்கம் ஆட்சி செய்கின்றமையே இதற்கான காரணம்.

இது எதனைக் காட்டுகின்றது என்றால் நாங்கள் ஒருவரை ஒருவர் கௌரவித்தால் இந்த நாட்டில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியும். அப்படி இல்லாமல் நாங்கள் கூடுதலானவர்கள் இருக்கின்றோம், எமது விருபத்தின் படி தான் எல்லாம் நடக்க வேண்டும், மற்றவர்கள் எங்கள் விருப்பத்திற்கிணங்க தான் இருக்க வேண்டும். நாங்கள் மரம் மற்றவர்கள் எங்கள் கொடி என்று நினைத்தால் ஒரு சுமுகமான சூழல் உருவாக மாட்டாது.தற்போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என்போர் மிக சுமுகமாக இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டு வருகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தமிழர்களை ஒருபோதும் பிரிவினைவாதிகள் என்று நினைத்துவிடக் கூடாது. பருமனான ஒருவரும் சிறிய ஒருவரும் ஒரு நாற்காலியில் சேர்ந்து இருக்கும் போது பெரியவர் சிறியவருக்கு இடம்கொடுக்காமல் காலை அகட்டி அகட்டி சிறியவரை ஒரு புறம் தள்ளிக் கொண்டு அவரை நசுக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் பொறுக்க முடியாத சிறியவர் எழும்பி நின்று சண்டை பிடிக்க வேண்டிதான் வரும். அதுதான் இத்தனை காலமும் நடைபெற்றது. பெரியவர் நினைக்க வேண்டும் சிறியவருக்கும் இடம் வேண்டும் நான் என்னுடைய அளவிற்குள் சிறியவரை தள்ளி நசுக்காமல் இருக்க வேண்டும் என்று. அப்படி இருந்திருந்தால் இந்த நாட்டில் எத்தனையோ வளங்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
நாம் அனைவரும் ஒரு இடத்தில் இருந்து வந்தவர்கள். இறந்த பின்னர் ஒரே இடத்திற்குத் தான் செல்லப் போகின்றோம். எனவே இங்கு இருக்கின்ற போது நாங்கள் எங்கள் மொழியைப் பேச வேண்டும், நீங்கள் உங்கள் மொழியைப் பேச வேண்டும். நீங்கள் உங்கள் கடவுளை வணங்க வேண்டும் நாங்கள் எங்கள் கடவுளை வணங்க வேண்டும். ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்யாமல் சகோதரர்களாக இருக்க வேண்டும்.
சாப்பாட்டை நீங்கள் அன்பாகத் தந்தால் தான் நாங்கள் சாப்பிடுவோம். சாப்பிடு என்கின்ற ஒரு அதட்டலோடு தந்தால் அது திரவியமாக இருந்தாலும் நாங்கள் சாப்பிட மாட்டோம் எனவே நாங்கள் அனைவரும் ஒற்றுமைய இருக்க வேண்டும் ஒருவரை ஒருவர் மதித்துக் கொண்டு. கௌரவித்துக் கொண்டு வாழ வேண்டும். சிங்கள மொழியை நாம் விரும்பாமல் இருந்தமைக்கு எம் மீதான திணிப்பே காரணம். அதனை படிக்க வேண்டும் என்று எமக்கு திணிக்கப்பட்டது. எங்கோ இருக்கின்ற ஆங்கிலத்தை பேச முடிந்த எம்மால் இங்கிருக்கின்ற சிங்களத்தை கற்க முடியாத அளவில் நிலைமை இருந்தது. எங்களை சேர்த்துப் பிடிக்கவில்லை, நாம் உதாசீனம் செய்யப்பட்டோம். அதன் காரணமாக இவ்வாறான நிலைமை வந்தது. இது மிகவும் துக்கப்பட வேண்டிய விடயம்.
நாங்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒன்றாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தேசிய கீதம் சொல்லுகின்றது. ஆனால் அது இதுவரையில் பின்பற்றப்படவில்லை. தற்போது அதற்கான ஒரு ஆரம்ப சூழல் உருவாகியிருக்கின்றது என்று தெரிவித்தார்.thurai-aa thurai-b thurai-c