சான்றுகளுக்கிடையில் உங்கள் இராணுவ வீரர்கள் குற்றம் செய்யாதவர்கள் என்று உங்களால் நிரூபிக்க முடியாது

0
328

thurairajasingam-aசர்வதே விசாரணை என்கின்ற விடயம் வெறுமனே சொல்லப்பட்டதல்ல. இது தொடர்பான ஆதாரங்களை எல்லாம் சர்வதேச நிபுனர்கள் எற்கனவே சேகரித்து வைத்திருக்கின்றார்கள். முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் புதைக்கவும் முடியாது புண்ணுக்கு புழுகு பூசி அதன் துர்நாற்றத்தை இல்லாமல் செய்திடவும் முடியாது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்..
மட்ஃ தாழங்குடா றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டினுடைய பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். இது தொடர்பில் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிடுகையில் எக்காரணம் கொண்டும் இந்த நாட்டினுடைய படை வீரர்களை நான் குற்றவாளிகளாக ஆக்கமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். எங்களைப் பொருத்தவரையில் இது அல்ல கேள்வி வழக்கமாக குற்றவியல் வழக்குகளில் ஒருவர் அவருடைய சட்டத்தரணியை அணுகுகின்ற போது அந்த சட்டத்தரணி குற்றம் சாட்டப்பட்டவரை முதலில் விசாரிப்பார் அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் அனைத்து விடயங்களையும் சொல்லுவார். வுழக்கறிஞர் இவற்றையெல்லாம் கேட்கும் போது அவருக்குத் தெரியும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்திருப்பார் என்பது. எனவே அவரை இந்த சட்டத்தினுடைய ஓட்டைகளுக்குள்ளே சென்று எவ்வாறு காப்பாற்றலாம் என்று முயற்சிப்பார். குற்றவியல் வழக்குகளில் திர்ப்பு வழங்கப்படுகின்ற போது அவர் குற்றவாளி அல்ல என்று திர்ப்பு வழங்குவது கிடையாது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தான் திர்ப்பு வழங்கப்படும்.
எனவே அதிஉத்தம ஜனாதிபதியாக இருக்கட்டும், அல்லது அரசியற் தலைவர்களாக இருக்கட்டும். முதலில் உங்கள் இராணுவ வீரர்கள் சர்வதேச சட்ட நியமங்களுக்கு உட்பட்டு போர் செய்திருக்கின்றார்களா என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
ஜவர்கலால் நேருவின் உலக சரித்திரத்தினுடைய ஒரு பார்வை என்ற புத்தகத்திலே சொல்லுகின்ற போது போர் செய்கின்ற எல்லோரும் தங்களுடைய தலைகளை இழந்துவிடுகின்றார்கள், அவர்கள் அதுவரையில் கடைப்பிடித்து வந்த நாகரீகங்களை இழந்து விடுகின்றார்கள், காட்டுமிராண்டிகளாக மாறிவிடுகின்றார்கள். எனவே போர்களை யாருமே நியாயப்படுத்தி விட முடியாது என்று குறிப்பட்டிருக்கின்றார்.
எனவே இந்த அரசியற் தலைவர்கள் ஒன்றை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுடைய வீரர்கள் ஒரு விதத்திலே சர்வேத நியமங்களுக்கு மாறாக நடந்திருக்கின்றார்கள் ஆனால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமை உங்களுக்கு இருக்கின்றது என்று நிங்கள் உணருகின்றீர்கள் என்றால் முதலில் நிங்கள் உண்மையை ஒத்துக் கொள்ளக் கூடிய மனநிலைக்கு வர வேண்டும். உங்களுடைய போர் வீரர்களை உங்களுடைய புத்த குருமாருக்கு முன்னிலையிலோ அல்லது உங்களது அதியுயர்ந்த பிரஜைகளுக்கு முன்னிலையிலோ ஒரு மிக இரகசியமான இடத்திற்கு அழையுங்கள். அவர்கள் என்ன என்ன செய்தார்கள் என்பதை அவர்களைச் சொல்லச் செய்யுங்கள் அவ்வாறு செய்கின்ற போது அவர்கள் என்ன என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஏனெனில் சர்வதே விசாரணை என்கின்ற விடயம் வெறுமனே சொல்லப்பட்டதல்ல. இது தொடர்பான ஆதாரங்களை எல்லாம் சர்வதேச நிபுனர்கள் எற்கனவே சேகரித்து வைத்திருக்கின்றார்கள். குழந்தைகள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள், பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநியாயங்கள், இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அக்கிரமமான வதைகள் என்பவற்றுக்கெல்லாம் சான்றுகள் உண்டு. இந்த சான்றுகளுக்கிடையில் உங்கள் இராணுவ வீரர்கள் குற்றம் செய்யாதவர்கள் என்று உங்களால் நிரூபிக்க முடியாது. எனவே இவர்கள் இவ்வாறெல்லாம்  குற்றம் செய்திருந்தால் அது அவ்வாறு ஏற்பட்ட சூழலுக்கு இயைய நடைபெற்றிருக்கின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு அதன் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை எவ்வாறு வழங்குவது, இவ்வாறெல்லாம் செய்தவர்களை அடுத்த நிலைமைக்கு எவ்வாறு கொண்டு வருவது என்பதை ஆராய வேண்டுமே அல்லாமல் முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் புதைக்கவும் முடியாது புண்ணுக்கு புழுகு பூசி அதன் துர்நாற்றத்தை இல்லாமல் செய்திடவும் முடியாது.

நல்லிணக்கம் என்பதைத் தேடிக் கொண்டிருக்கின்ற இந்த நாடு நடைபெற்ற அநியாயங்கள் அக்கிரமங்களையெல்லாம் கண்டறிந்து அவ்வாறு இனிமேல் நடைபெறாத வகையிலேயான ஏற்பாடுகளைச் செய்வதோடு சர்வதேச நியமத்தின் அடிப்படையில் பரிகாரம் வழங்குவதற்கு தயாராக வேண்டும் அவ்வாறானதொரு செய்தியை நான் அரசியற் தலைவர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க விரும்பகின்றேன். அவ்வாறு இந்த உண்மைகளைக் கண்டறிந்த பிறகு தான் இந்த நாட்டிலே நல்லிணக்கம் என்ற ஒன்று எற்படும். அதனை விடுத்து வேண்டாத பிரயத்தனங்களில் ஈடபடுவதன் காரணமாக எந்தவித நல்லிணக்கத்தையும் நாம் அடைய முடியாது.
இந்த நாட்டின் சொந்தக்காரர்களான இந்த மக்களை இந்த நாட்டு இராணுவமே கொன்றது. இந்த நாட்டிலே ஆயுதம் தூக்கியவர்கள் எல்வோரும் ஒருவரை ஒருவர் கொன்றிருக்கின்றார்கள், கொள்ளை அடித்திருக்கின்றார்கள் சொத்துக்களை தீக்கிரையாக்கி இருக்கின்றார்கள். இந்த உண்மைகள் எல்லாம் அறிகின்ற இந்த செயற்பாடுகளுக்கு வரவேண்டும்.

நாங்கள் தமிழர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுடைய எதிர்காலம் நோக்கி நாங்கள் உறுதியான எண்ணப்பாட்டோடு செயற்பட வேண்டும். எமக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதி கிடைப்பதற்கான பொறிமுறைகள் தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பொறிமுறைகள் சரியான முறையில் செயற்படுத்தப்பட்டு எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கின்ற உறுதிப்பாட்டோடு நாங்கள் செல்ல வேண்டும். அந்த நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.