மட்டக்களப்பில் மூன்று கசிப்பு தொழிற்சாலைகள் முற்றுகை.பிரதம பரிசோதகர் ரஞ்சனின் அதிரடி நடவடிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று கசிப்பு உற்பத்தி நிலையங்களும் கசிப்பு உற்பத்திக்கான மூலப்பொருள் விநியோக்கும் இரண்டு இடங்களும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் இன்று காலை முதல் முற்றுகையிடப்பட்டுள்ளன.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸ் ஊரடங்கினை பயன்படுத்தி சட்ட விரோத மதுபான உற்பத்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் இன்று காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலணியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது ஐந்து வீடுகள் இவ்வாறு முற்றுகையிடப்பட்டன.இதில் மூன்று வீடுகளில் கசிப்பு உற்பத்திகள் நடைபெற்றுவந்த நிலையில் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து கசிப்பு தயாரிக்கப்பயன்படும் உபகரணங்கள்,கசிப்பு உற்பத்திகான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.இதேபோன்று வேறு இரு வீடுகளில் இருந்து கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடாக்கள் மீட்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் சென்ற மதுவரித்திணைக்களக பரிசோதகர் என். சிறிகாந்தா மற்றும் கலால் உத்தியோகத்தர்களான ஜனானந்தா, சேவையர், அனுஷாந், சிவகாந்தா, ரஜனிகாந் ஆகியோர் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சுமார் 14கலன்களில் அடைக்கப்பட்டிருந்த 01இலட்சத்து 25ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு காய்ச்சுவதற்கான கோடாக்கள் மீட்கப்பட்டதாகவும் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.