மக்களை வாக்களிக்கச் செல்லுங்கள் என்று கேட்கமுடியாத நிலையிலே இருக்கின்றோம்

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்)

ஜுன் 02ன் பின்னர் ஜனாதிபதியின் அறிவிப்பு மாத்திரமல்லாது, தற்போதுள்ள காபந்து அமைச்சரவையும் எமது அரசியலமைப்பின் பிரகாரம் சட்டவலுவற்றதாகவே இருக்கும். கௌரவப் பிரச்சினைகளை அப்பால் தள்ளி விட்டு நாட்டை சரியான முறையிலே நெறிப்படுத்தக் கூடிய விதத்திலே 2018 ஒக்டோபர் 26 அரசியற் குழப்பத்தின் போதான நீதிமன்றத் தீர்ப்பினைப் படிப்பினையாகக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் பாராளுமன்றத் தேர்தலின் சாத்திய நிலைப்பாடு தொடர்பில் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோணா இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. மற்றைய நாடுகளில் இது ஒரு இயல்பான சிக்கலாக இருந்தாலும் இலங்கையைப் பொறுத்தவரையிலே ஒரு செயற்கைத் தன்மையான களநிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் கொரோணா தொடர்பான எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத் தொற்றுநோய் எச்சரிக்கை இருக்கையில் இவ்வாறு பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது என்று வேட்புமனுத் தாக்கலின் போது எங்கள் கருத்துக்களை நாங்கள் வெளியிட்டிருந்தோம்.

இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் பற்றிக் குறிப்பிடுவதில் உச்ச நிலையில் இருப்பது எமது அரசியலமைப்புச் சட்டம். அரசியலமைப்புச் சட்டத்தில் 70(5)(அ,ஆ,இ) ஆகிய உறுப்புரைகளில் பாராளுமன்றம் தேர்தலுக்காக ஆகக் குறைந்தது 03 மாத காலம்வரை கலைக்கப்பட்ட நிலையிலே இருக்கலாம். அதற்கிடையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். அவ்வப்போது ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு ஏற்ப தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குச் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை தேர்தல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிரயோகிக்கலாம். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் தேர்தல் ஆணையாளராக இருந்தாலும் சரி ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அரசியலமைப்பின் 70(5) உறுப்புரைக்கமைவாகவே நடத்தல் வேண்டும்.

இவ்வாறிருக்கையில் தற்போதையை நிலையில் 03 மாதகாலத்திற்குள் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தி பாராளுமன்றத்தைக் கூட்டுகின்ற விடயம் அசாத்தியமானதாகவே இருக்கின்றது. ஜுன் 02 உடன் மூன்று மாதங்கள் முடிகின்றது. ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஜுன் 20 வரை ஒத்தி வைத்திருக்கின்றது. இவ்வாறு ஜுன் 20 வரை ஒத்தி வைப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எங்கிருந்து அதிகாரத்தைப் பெறுகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

இதற்கும் மேலதிகமாக ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பிரகடணமும் ஜுன் 02ம் திகதியுடன் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் சட்டவலுவை இழக்கின்றது. இவ்வாறு ஜனாதிபதியின் பிரகடணம் மூன்று மாதங்களின் பின்னர் வலிதிழக்கின்றது என்றால் ஏற்கனவே இருந்த பழைய நிலைமைக்கு நாடு செல்ல வேண்டும். அவ்வாறு நாடு செல்வதென்றால் பழைய பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் படியான நிலைமை. இதற்கான ஏது நிலைமைகளும் இருக்கின்றன. ஏனெனில் பாராளுமன்றத்தின் ஆட்சிக் காலம் 05 வருடங்கள் என்ற வகையிலே செப்டெம்பர் 21 வரை ஆட்சிக் காலம் இருக்கின்றது. எனவே தற்போதிருக்கின்ற நிலைமையை அனுசரித்துத் தேர்தலை முடித்துக் கொள்ள முடியாத நிலையிலே மீளவும் பாராளுமன்றம் அழைக்கப்படலாம். ஏனெனில் இது தற்போது தேவைப்பாடானதாக இருக்கின்றது.

ஏனெனில் தற்போது ஏற்படுத்தப்படுகின்ற சட்டங்கள் உண்மையில் சவாலுக்குட்படுத்தப்படுகின்ற சட்டங்களாக இல்லை. அவசரகாலச் சட்டம் என்பது சகல நாடுகளிலும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தான் பிரகடணப்படுத்தப்படுகின்றது. ஆனால் தற்போது இலங்கையில் அமுல்ப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகின்ற அவசரகாலச் சட்டம் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடணப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் அல்ல. அதற்கு மாறாக தண்டனைச் சட்டக் கோவையின் 262,263,264 வது பிரிவுகளில் உள்ள விதிகளைச் சொல்லுகின்றார்கள் அரசாங்க தரப்பினர். இப்பிரிவுகள் ஒரு தொற்றுநோய் கட்டுப்படுத்தல் தொடர்பாக பொலீஸாருக்கு உள்ள அதிகாரங்களைக் கூறுகின்றன. உண்iயிலேயே தற்போது சொல்லப்படுகின்ற அவசரகாலச் சட்டத்தைப் பொலிஸார் மேற்கூறப்பட்ட தண்டனைச் சட்டக் கோவையின் விதிகளுக்கு அமையத் தான் செயற்படுத்துகின்றார்கள். சொல்லப்படுகின்றது அவசரகாலச் சட்டத்தின் கீழ் செயற்படுவதாக ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் விடயத்திலும் இந்நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் அவசரகாலச் சட்டம் என்று சொல்லப்படுவதும் ஒரு வலிதற்ற சட்டமாகவே இருக்கின்றது. அதே வேளை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் பிரகடணமும் 03 மாதத்தின் பின் வலுவற்றதாக மாறும்.

இதேவேளை பிரதமர் மற்றும் ஆளுந்தரப்புப் பிரதிநிதிகள் 1981ம் ஆண்டின் 01ம் இலக்க இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தைச் சுட்டிக் காட்டி அதன் 24(3), (113) ஆகிய பிரிவுகளுக்கு இணங்க தேர்தல்கள் ஆணைக்குழுத் தவிசாளருக்கு சில அதிகாரங்கள் இருக்கின்றன. அந்தவகையில் அவர் மாவட்ட ரீதியில் தேர்தல்களை நடத்தலாம் என்ற விதத்திலே பிழையான ஒரு சட்டப் பொருள் கோடலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பிரிவுகள் எல்லாம் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டதன் பிறகு ஏற்படுகின்ற சுமூகமற்ற நிலைமைகளைச் சமாளிப்பதற்குத் தேர்தல்கள் ஆணையாளருக்கு உள்ள அதிகாரங்களை மட்டும் குறிப்பிடுகின்றதே தவிர தேர்தல் தொடங்குவதற்கு முன்னராக அதிகாரங்கள் பற்றி அவை குறிப்பிடவில்லை.

இவ்வாறு அரசினால் பல சட்ட விலிதற்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கொரோணாவின் கொடூரம் அனைவரையும் மௌனம் காக்க வைத்திருக்கின்றது. அரசினுடைய செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தாத ஒரு மன்னிப்பு நிலைமையைக் கொடுத்திருக்கின்றது. ஆனால் அரசு இந்த நிலைமையைத் தொடர்ச்சியாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதென்பது ஜனநாயக வழியில் இருந்து வழுவிச் செல்கின்றது என்பதையே காட்டுகின்றது.

தற்போது வெளிவருகின்ற ஒவ்வொரு அறிவித்தல்களும் ஒவ்வொரு துறைகளிலும் ஜனாதிபதியால் நியமிக்கபபட்ட இராணுவ அதிகாரிகளினால் தான் வெளிவருகின்றது. சுகாதாரம் உட்பட பல அறிவித்தல்களை முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகளே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஜனநாயக நடைறைக்கு மிகவும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியுடன் இருக்கின்ற சட்டவல்லுனர்கள் மற்றும் வியத்கம செயற்குழுவில் உள்ளவர்களும் தற்போதைய நிலையில் ஜனாதிபதிக்கு முறையான சட்ட ஆலோசனையை வழங்க முடியாதவர்களாக இருக்கின்றார்களோ தெரியவில்லை. சுகாதார அமைச்சர் அவர்கள் பொறுப்பற்ற விதத்திலே சொல்லுகின்றாரா அல்லது அவரும் ஒரு அரசியல்வாதி என்ற ரீதியிலே கதைக்கின்றாரா என்பது தொடர்பில் தெரியவில்லை. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார். எனவே அதிகாரத்தில் உள்ளவர்கள், பொறுப்பு வாய்ந்தவர்கள் இவ்வாறு அடிக்கடி கருத்துக்களை மாற்றிக் கொள்ளக் கூடாது.

கொரோணா தொடர்பில் இராணுவ அதிகாரிகளோ, தேர்தல்கள் ஆணைக்குழுவோ தீர்மானங்களை எடுக்க முடியாது நிபுனர்களே இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார். ஒட்டு மொத்தமாக எல்லா இடங்களிலும் இராணுவ உயர் அதிகாரிகளை வத்துக் கொண்டே இந்த அரசு செல்லக் கூடிய நிலை ஏற்பட்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

எது எவ்வாறு இருப்பினும் வர இருக்கின்ற சட்டம் தொடர்பான வெற்றிடம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. தேர்தல் காலங்களில் காபந்து அமைச்சரவை செயற்படுவதற்கு எமது அரசியலமைப்புச் சட்த்தில் இடம் இருக்கின்றன. இந்த மூன்று மாதம் முடிந்ததன் பிறகு இந்த காபந்து அமைச்சரவை கூட சட்டவலுவற்றதாக இருக்கப் போகின்றது. இந்த மூன்று மாதத்திற்குப் பிறகு அமைச்சரவை எந்தவித சட்டபூர்வமான தீர்மானத்தையும் எடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை உருவாகப் போகின்றது. எனவே இதில் கௌரவப் பிரச்சினைகளை அப்பால் தள்ளி விட்டு நாட்டை சரியான முறையிலே நெறிப்படுத்தக் கூடிய விதத்திலே 2018 ஒக்டோபர் 26 அரசியற் குழப்பத்தின் போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைப் படிப்பினையாகக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிடின் இந்த நாடு தொடச்சியாக அரசியலமைப்புச் சட்டத்தை உதாசீனப்படுத்தியதன் மூலம் நாட்டை ஒரு குழப்பத்திற்குள்ளாக்கிய வரலாறுகளின் தொடர்ச்சியாகத் தான் இதுவும் அமையும்.

அரசிலமைப்புச் சட்டத்தை மீறியே சிங்கள மட்டும் சட்டம் மற்றும் குடியுரிமைச்சட்டம் என்பன உருவாக்கப்பட்டன. 2018இலும் அரசிலமைப்பினை உதாசீனப்படுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. 2018ல் நீதிமன்றம் வலுவாக இருந்தமையால் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடிந்தது. அவைகளைப் போன்று அரசியலமைப்பினை அலட்சியம் செய்யும் நிலைமையே தற்போதும் துளிர்விடுகின்றது.

பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் வேட்பாளர்களாக்கி விட்டு அவர்கள் தொடர்ச்சியாக தேர்தல் பணிகளைச் செய்ய முடியாமல் இந்த நாடு ஒரு திரிசங்கு நிலையிலே இருக்கின்றது. இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். பாராளுமன்றத்தைக் கூட்டுவது செலவு மிகுந்த செயல் என்று கூட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சொல்லத் தெடங்கியிருக்கின்றார்கள். செலவு இல்லாமல் ஒரு விடயம் செய்யப்பட வேண்டும் என்றால் பாராளுமன்றமே இல்லாமல் கூட நாட்டை ஆளமுடியும் என்ற அளவுக்குக் கூட வரக்கூடும். எனவே இவ்விதமான அற்பமான விளக்கங்களை விடுத்து உடனடியாக இவ்விடயத்திற்கு விடை காண வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கைகள் பல இருந்தும் அரசின் அலட்சியம் காரணமாக பெரியதொரு துன்பியல் நிகழ்வினை அடைந்தோம். அதேபோல் கொரோணா வைரஸ் தொடர்பாகவும் ஏற்கனவே சீனாவில் எச்சரிக்கை இருந்தது. இதனை அலட்சியம் செய்ததன் காரணமாக தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு மக்களின் பாதுகாப்பை மிக முக்கியமாதனதாகக் கொண்டு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரால் ஜனாதிபதிக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதனை ஜனாதிபதி அலட்சியம் செய்து விட்டார். ஆனால் தற்போது அந்த நிலைமை வந்திருக்கின்றது. இதனை மேலும் அலட்சியம் செய்யாமல் ஜனாதிபதியின் அதிகாரத்தின் அடிப்படையில் இது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் பொருள்கோடலைக் கேட்டு நமது நாட்டை ஒரு சிறந்த நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும்.

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புள்ள கட்சி என்ற வகையில் தற்போதுள்ள சூழ்நிலையிலே மக்களை வாக்களிக்கச் செல்லுங்கள் என்று கேட்கமுடியாத நிலையிலே இருக்கின்றோம் என்ற விடயத்தைப் பகிரங்கமாகச் சொல்லி வைக்கின்றோம் என்று தெரிவித்தார்.