வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முற்றிலும் முரணானது.

நாட்டில் கொவிட்-19 தொற்று மிக உக்கிரமாக பரவும் சூழலில், தேர்தல்கள் ஆணையாளர் பொதுத் தேர்தலுக்கு திகதி குறிப்பிட்டு அனுப்பியுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முற்றிலும் முரணான வகையில் அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று (21) பிற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் ஆணைக்குழுவைச் சந்தித்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் முன்வைத்த அரசியல் கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை முழுமையாகப் புறக்கணித்து இவ்வாறானதொரு தான்தோன்றித்தனமாக முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் வன்மையான கண்டனத்தை நீண்டதொரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோய் பரவல் உக்கிரமடைந்து, ஊரடங்குச் சட்டத்தினால் நாடு முடக்கப்பட்டு, மக்கள் அச்சத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காலத்தில், முறைகேடான தேர்தலொன்றை நடாத்துவதற்கு வழிகோலியிருப்பது ஜனநாயக விழுமியங்களை மீறும் செயலாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் புதிய சுற்றுநிருபத்தை சான்றாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், இன்னும் பல காரணங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மிகவும் விரிவான தர்க்க நியாங்களுடன், காட்டமாக தமது அதிருப்தியை இவ்வறிக்கை வாயிலாகவும், நேரில் நடந்த கலந்துரையாடலின்போதும் முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் மற்றும் கட்சியின் பிரதி தவிசாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம். நயீமுல்லாஹ் ஆகியோரும் இன்று (21) தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டனர்.
– ஊடகப் பிரிவு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் –