தேர்தல் திகதியை அறிவித்தது பாதகமான விளைவை ஏற்படுத்தும்: சுமந்திரன் எச்சரிக்கை

சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை இதுவரையில் ஏற்படவில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தேர்தலுக்கான திகதியை அறிவித்திருப்பதால், வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பிப்பார்கள். இது சுகாதாரத்துக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நாளை செவ்வாய்கிழமை நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்ததிலும் இதனைத்தான் தான் வலியுறுத்தவிருப்பதாகவும் சுமந்திரன் தினக்குரல் ஒன்லைனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

“ஜூன் 20 இல் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டால், வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முற்படுவார்கள். இது சுகாதாரத்துக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் தேர்தலுக்கான திகதியைக் குறிப்பிட வேண்டாம் என நாம் ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவை கடிதம் மூலமாகக் கேட்டிருந்தோம்.

நாளை செவ்வாய்கிழமை தேர்தல் ஆணைக்குழுவுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. அதிலும் இந்தக் கருத்தைத்தான் நான் முக்கியமாக வலியுறுத்தவிருக்கின்றேன். இப்போதும் தேர்தலுக்கான திகதியைக் குறிப்பிடுவதற்கான தருணம் வரவில்லை என்றுதான் நாம் கருதுகின்றோம்” எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.