நாமும் கொரோனாவும்

கொரோனா கொரோனா கொரோனா யார் இது? ஏன் உலகளவில் பேசப்படுகின்றது? பிஞ்சுக் குழந்தை தொடக்கம் முதியோர் வரை பேசிக்கொள்ளும் ஒரே வார்த்தை கொரோனா. இது ஆயுதம் இல்லாத வல்லரசு நாடுகளுக்கிடையே நடைபெறும் மூன்றாம் உலகப் போரா? எப்படி கணிப்பிடுவது? யாராலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயிரைக் காவு கொள்கின்ற ஒரு கொடிய நோய் என்பது எல்லோருடைய மனதில் ஆழமாக பதிந்த உண்மையாக கருதப்படுகின்றது. ஏனெனில் அந்தளவிற்கு இலட்சக் கணக்கில் வயது எல்லையின்றி உயிரைப் பறித்துக் கொண்டு இருக்கின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் நாம் எதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம்? பணம்,சுகபோக வாழ்க்கை, தான் என்ற அகந்தை போட்டி, பொறாமை, மன்னிப்பின்மை அன்பில்லாப் போலியான உறவு என்ற ஒரு நிகர் இல்லாத வாழ்க்கை சொல்லப்போனால் ஒரு குப்பை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மனிதா நாம் இனியாது திருந்துவோமா உன்னை நீயே திருத்து இந்த கொடிய நோயும் தன்னை அழித்துக் கொள்ளும். நாம் ஒன்றை மட்டும் ஊகித்துக் கொள்ளுவோம். நாளை நம் வீட்டிலும் ஒரு உயிர் போகலாம். நீ முடிவெடு மனிதா நம்மை எவ்வாறு கொரோனாவில் இருந்து காத்துக் கொள்வது என்று. நீ நீயாக வாழ்வதை விட நீ நாமாக வாழ்ந்து பார் இந்த கொரோனா என்ற கொடிய நோயும் அழிந்து விடும்.

இப்பூமியானது கடவுளின் பூரிப்பு அதை நாம் புனிதமா பாவிப்போம். பூமி மட்டும் இல்லை ஒவ்வொரு உயிரையும் புனிதமாக பாவிப்போம். நாம் ஏன் வாழ்ந்தோம் என்பதை மறந்து எதற்கு வாழ வேண்டும் என்பதை சிந்திப்போம். அப்பப்பா கடந்த நாட்களில் எத்தனை கொலை எத்தனை கடத்தல்கள், பெண்கள் வன்முறை, செய்வினை சூனியங்கள் என்று
எண்ணிப்பார்க்க முடியாத பெண்ணினம் ஆணினம் என்று நம்மால் (மனிதனால்) மனித இனமே அழிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆயுதங்களை தயாரித்தவன் கூட கொரோனா என்ற மூன்று சொல்லிற்கு அடங்கிப் போய்க் கிடக்கின்றான். நேற்று இன்னொருவனை அழித்த நாம் நாளை கொரோனா எம்மை அழித்திடுமோ என்று பூட்டிய வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றோம்.

பல நாடுகளில் மொழியால் மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். ஆனால் நாம் இப்போது மொழி இனம் பேதமின்றி கொரோனாவால் அழிந்து கொண்டிருக்கின்றோம். கருவில் வளர்ந்து உலகில் தோன்றி கண்ணை திறந்து தாயை பார்க்க தொடங்கா பிஞ்சுக்குழந்தை கூட பலியாகிக் கொண்டிருக்கின்றது காரணம் நாம் ஏற்கனவே கண்டுகொள்ளாமல் செய்த பாவ அக்கிரமங்களால்.

கூண்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பல விலங்குகளுக்கு கொரோனா விடுதலையைக் கொடுத்திருக்கின்றது காரணம் நம்மால். வீதிகள் தற்போதுதான் அமைதியாக தூங்குகின்றது. காடுகள் உல்லாசமாக உறவாடுகின்றன. பறவைகள் விலங்குகள் என சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. எவற்றால்? எம்மாலும் கொரோனாவாலும்.

கோயில் கோயில் என்று கடவுளை வணங்கச் செல்வோம். ஆனால் அங்க யார் என்ன ஆடை அணிகள் அணிந்துள்ளனர் என்று பார்க்கவே கடவுள் என்ற பெயரில் கோயிலுக்குச் சென்றோம். ஆனால் இப்போதும் நாம் கோவிலுக்கு செல்லத் தடை விதித்துள்ளது இந்த கொரோனா.

அதுமட்டுமா நாம் இறக்க முன்னரே நம்மில் பலர் இடம் பார்த்து நிலம் பிடித்து வைத்திருப்போம் என் உடல் இங்கதான் பிதைக்கப்பட வேண்டும் என்று. மனிதா இப்போது பார்த்தாயா மதம் வேறுபாடின்றி உறவுகள் அற்ற நிலையில் ஒரே இடத்தில் எரிக்கப்படுகிறாய்.

அது மட்டுமன்றி பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டிய நம்மை பெட்டி இல்லாமல், அடக்கம் செய்ய இடமுமின்றி, பொலித்தீனால் சுற்றி எரிகின்றார்கள். இவற்றிற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத சாதாரண கொரோனா என்ற வைரஸ் மட்டுமின்றி கண்ணுக்கு தெரிந்த மனிதர்கள் நாமும்.

சிந்திப்போம் விட்டுவிடுவோம் எளிய குணங்களை திருந்துவோம் புதுப்படைப்பாக மனித இனத்தை நாம் என்ற புதுப்பொலிவுடன்,
நம்மில் நாம் மாற்றத்தை கொண்டு வருவோம் நாம் நம் பூமியை அதில் வாழும் ஒவ்வொரு உயிரையும் புத்தாக்கம் செய்வோம். நாமும் கொரோனாவும் என்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கட்டான இச் சூழ்நிலையில் அன்பு உள்ள மனிதர்களா கொரோனாவை வெல்வோம்!…

யோ.மிரியம் டர்ஷிக்கா