மண்முனைப்பற்று கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (19) மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், ஆரையம்பதி பொது சுகாதார அதிகாரி வைத்தியர் கே.ரமேஸ் உள்ளிட்ட படை அதிகாரிகள், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச வர்த்த சங்கத்தினர் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
சமூக இடைவெளியை பின்பற்றிய வகையில் சுகாதார முறைப்படி இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது பிரதேச மக்கள் மற்றும் வியாபாரிகளது நலனினை கருத்திற்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கக் கூடிய வகையிலான பல்வேறுபட்ட முடிவுகள் இதன்போது எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.