தொலைகாட்சியூடாக கற்பித்தல் நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையால் தொலைகாட்சியூடாக கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதற்கமைய நாளை முதல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் Channel Eye மற்றும் Nethra TV ஆகிய இரு தொலைகாட்சி சேவைகளின் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ்வாறு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் இம் மாதம் 8 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டது.

அதற்கமைய இன்று தொடக்கம் எதிர்வரும் இரு வாரங்களுக்கு  (மே மாதம் 3 ஆம் திகதி வரை) தொலைகாட்சியூடான கற்பித்தலுக்கான நேர அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந் நேர அட்டவணைக்கு அமைய வாரத்தில் 7 நாட்களும் முழு நேரமும் கற்பித்தல் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதிகாலை 4 மணிக்கு இந்நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகி இரவு 11.55 வரை தொடரும். ஒவ்வொரு பாடவேளைக்கும் 55 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு ஒவ்வொரு 55 நிமிட இறுதியிலும் 5 நிமிடங்கள் இடைவெளிக்காக பொழுதுபோக்கு நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் மாலை 7 மணி தொடக்கம் 7.30 மணி வரை செய்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நேர அட்டவணையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம், சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் மாணவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கற்பித்தல் நடவடிக்கைகள் மாத்திரமின்றி பரீட்சைகளும் பரீட்சை வினாத்தாள் திருத்தம் என்பனவும் முன்னெடுக்கப்படவுள்ளன. தமிழ் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழி மூலமும் இந்த கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.