கொறோனா நோயினால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பலரும் பல்வேறு உதவிகளைப் புரிந்தவண்ணம் உள்ளனர். அதிலும் தமிழர் பிரதேசங்களில் ஏற்கனவே பட்ட அனுபவங்களை வைத்துக்கொண்டு உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாராட்டிற்கு உரியவர்கள்.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் இன்னும் மக்களுக்கு முழுமையாக சென்றடையாத நிலையில் ஆசிரியர்கள் தமது ஒருநாள் வேதனத்தை வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு கோரியுள்ளது. இது கல்வி அமைச்சரின் கோரிக்கை மட்டுமே. மாறாக பல அதிபர்களும், ஆசிரியர்களும், கல்வி சாரா ஊழியர்களும் ஏன் மாணவர்களும் இணைந்து பல உதவிகளைப் புரிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் ஒருநாள் வேதனத்தை அவர்களின் சம்மதம் இல்லாமல் பெறவேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வித் திணைக்கள அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களை வங்கிகள் அறிவுறுத்தல்களையும் மீறி சில இடங்களில் ஏப்ரல் மாதம் அறவீடு செய்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் சில திணைக்கள அதிகாரிகள் மௌனமாக இருந்தமையால் அதிபர்கள், ஆசிரியர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். அவர்களின் கழிப்பனவுகள் போக மிகுதியாக கிடைக்கும் தொகை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கே போதாமல் உள்ளமை பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அதிபர்கள், ஆசிரியர்கள் முன்வந்து செய்கின்ற உதவும் பணிகளை மதித்து அவர்களின் சம்மதத்துடன் ஒருநாள் வேதனம் பெறப்பட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.