அவசரநிலைகளில் கல்வி ( Education in emergencies)

கொரோனா பரவல் தொடர்பான பாதிப்பை குறைக்கும் முகமாக அரசு பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் முதலாவது நடவடிக்கையே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியமையாகும். March 13 தொடக்கம் April 20 வரையான காலப்பகுதில், ஆறு (6) பாடசாலை நாட்கள் தவறவிடப்பட்டுள்ளதுடன், மீண்டும் பாடசாலை எதிர்வரும் May 11ல் தான் பாடசாலை தொடங்க உள்ளதால், மேலும் 12 நாட்கள் உள்ளடங்கலாக 18 நாட்களின் அதாவது ஒரு மாத கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்று வரை கல்விப் புலத்தில் உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள், வலயக் கல்விப் பதிப்பாளர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் ஆலோசனையுடன் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இதில் குறிப்பாக A/L, O/L, மற்றும் scholarship மாணவர்களுக்கு அதிகளவு செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.

இச் செயற்திட்டங்கள் பெரும்பாலும் Whatsapp, Viber_Group ஊடாக செயலட்டைகளை அனுப்புதல் சார்ந்தே அமைகிறது. எமது நாட்டுச் சூழலில் இருக்கின்ற தொழிநுட்பங்களை கொண்டு இதற்கு மேலதிகமாக சிறந்த ஒரு செயற்பாடே செய்ய முடியாது என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இதற்கு மேலதிகமாக அரச கல்வி இணையதளமாக e thaksalawa மற்றும் guru.lk போன்ற சில தனியார் வலைதளங்கள் ஊடாகவும் பிள்ளைகளுக்கு உதவும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

20.04.2020 வரை விடுமுறை காலம் தானே? இவ்விடுமுறை காலத்தில் பிள்ளைகளை 6 நாட்களுக்குரிய கல்வியை தானே இழந்துள்ளனர்? 20.04.2020 இற்கு பின்னர் மத்திய கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தானே? பின்னர் ஏன் இவ்வாறான செயற்பாடுகள் அவசியம் என்ற ஒரு விமர்சனம் ஒருசில நலன்விரும்பிகளால் எழுப்பப்படுகின்றது. இவர்கள் முன்வைக்கும் காரணம் போர் சூழ்ந்த, இதனைவிட வசதியற்ற காலங்களில் மாணவர்கள் சாதனைகள் நிகழ்த்தினர் தானே? என்பதாகும். போரை கொரோனாவுடன் ஒப்பிடுதல் என்பது அரசியல்வாதிகளின் முட்டாள் தனத்திற்கு ஒப்பானதாகும். இப்போது உள்ள நிலமை பக்கத்து வீட்டுக்கே போடமுடியாமல் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடும் நிலையாகும். இருந்தாலும் இக்காலப்பகுதியில் Whatsapp, Viber_Group ஊடான கல்வி அவசியமில்லை என்பதை முற்றிலும் மறுதலிக்க முடியாது.

இருப்பினும் நடைமுறையில் பார்க்கும் போது பிள்ளைகள் பாடசாலைப் படிப்பை மாத்திரம் நம்பி இல்லை. பாடசாலை படிப்பு மட்டும் போதும் என நீங்கள் தலைகீழாக நின்று சொன்னாலும் இன்றைய பெற்றோர்கள் இதை நம்பப்போவதும் இல்லை.

எனவே விடுமுறை காலத்தில் பிள்ளைகள் வீட்டில் ஓய்வாக இருப்பதில்லை. சும்மா இருக்க பெற்றோர்கள் விடப்போவதுமில்லை. இக்காலத்தில் தான் தனியார் கல்வி நிலையங்களின் வியாபார செயற்பாடு உச்ச நிலையில் களைகட்டும். தனியார் கல்வி நிலையங்கள் கல்விக்கு பங்களிப்பு செய்யவில்லை என்பது இங்கு வாதமல்ல ஆனால் பெரும்பாலும் அவை இலாப நோக்கையே கொண்டு இயங்குகின்றன. ஆனால் பெரும்பாலும் கிராமப்புற பாடசாலைகளில் எந்தவித கொடுப்பனவும் பெறாமல் ஆசிரியர்களின் விடுமுறைகால செயல்பட்டு இடம்பெறுவதையும் மறக்க முடியாது. ஆக மொத்தத்தில் விடுமுறை காலத்தில் கல்வி நடவடிக்கை பாதிக்கடுவது மிகவும் குறைவு. எனவே தற்போது பாடசாலைக் கல்வியோ தனியார் கல்வியோ இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுருக்கமாக வழமையாக விடுமுறை காலத்திலும் பிள்ளைகளுக்கு கல்வி செயற்பாடு இடம் பெறுகிறது அது அவசியமானதுமாகும்.. “ஆறுநாள் ஓதல் ஒருநாள் விடக்கெடும் ” என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். எனவே நீண்ட நாட்களுக்கு இடைவெளி விடும் போது நிச்சயமாய் அவர்கள் படித்ததை மறந்து விடுவார்கள். அதிலும் மீத்திறன் குறைந்த அல்லது இடர்படும் மாணவர்களின் நிலமை இன்னும் மோசமாக இருக்கும்.

யுனெஸ்கோவின் (26 மார்ச் 2020) அறிக்கைப்படி, 165 க்கும் மேற்பட்ட நாடுகள் நாடு தழுவிய அல்லது பகுதியளவில் பாடசாலை மூடல்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இது 1.5 பில்லியன் கற்பவர்களை பாதிக்கிறது, உலகின் மாணவர் தொகையில் இது 87% ஆகும். உலகெங்கிலும் உள்ள முன்பள்ளிகள் மற்றும் ஈ.சி.டி மையங்களும் மூடப்பட்டுள்ளன, இது குழந்தைகளின் ஆரம்பகால கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பராமரிப்பாளர்கள் வீட்டின் எல்லைக்குள் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியை ஏற்படுத்த போராட வேண்டியுள்ளதனால் குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளின் தரமான ஆரம்பகால பிள்ளைப் பருவ வளர்ச்சி (ஈசிடி) வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

அவசரநிலைகளில் கல்வி ( Education in emergencies) செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது குறிப்பாக அவசர கால நிலைகளில் கல்விக்கான நிறுவனங்களுக்கு இடையிலான வலையமைப்பினால் (INEE) வழங்கப்பட்ட கல்விக்கான அடிப்படைத் தரங்கள் கருத்தில் கொள்வது அவசியமாகும். (Inter-agency Network for Education in Emergencies (INEE) Minimum Standards;) இது 5 களங்கள் (Domains) மற்றும் 19 தரநிலைகளையும் (Standards) கொண்டுள்ளது. சிறிய ஒரு விளக்கத்துக்காக கீழே சுருக்கமாக இவை தரப்பட்டுள்ளன. கல்விக்கான அடிப்படைத் தரங்கள்: முன்னாயத்தம், பதிலளிப்பு, மீட்சி என்பது, சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பராயத்தினர் என அனைவரும் கல்விக்கான உரிமையைக் கொண்டுள்ளனர் என்ற உறுதிமொழியை வெளிப்படுத்துகின்றது. கல்வி தரத்தின் அடிப்படை மட்டம் மற்றும் மீட்சியின் ஊடாக அவசர கால நிலைகளில் அணுகும் வசதி என்பவற்றை தரங்கள் விளக்குகின்றன.

1. ஆரம்ப தரங்கள் (களம் 1): Foundational Standards
1. சமுதாய பங்கேற்பு தரங்கள்:
• தரம் 1: பங்கேற்பு,
• தரம் 2: வளங்கள்
2. ஒருங்கிணைப்பு தரங்கள்:
• தரம் 1: ஒருங்கிணைப்பு
3. பகுப்பாய்வ தரங்கள்:
• தரம் 1: மதிப்பீடு,
• தரம் 2: மறுசீரமைப்பு உபாயங்கள்,
• தரம் 3: கண்காணித்தல்,
• தரம் 4: மதிப்பீடு

2. அணுகும் வசதி மற்றும் கற்றல் சூழல் (களம் 2): Access and Learning Environment
• தரம் 1: சமமான அணுகும் வசதி
• தரம் 2: பாதுகாப்பு மற்றும் நலன்
• தரம் 3: வசதிகள் மற்றும் சேவைகள்

3. கற்பித்தல் மற்றும் கற்றல் (களம் 3): Teaching and Learning
• தரம் 1: பாடவிதானம்
• தரம் 2: பயிற்சி, தொழில்சார் அபிவிருத்தி மற்றும் ஆதரவு
• தரம் 3: அறிவுறுத்தல் மற்றும் கற்றல் செயற்பாடு
• தரம் 4: கற்றல் வெளியீடுகளின் மதிப்பீடு

4. கற்பிப்பவர்கள் மற்றும் வேறு கல்வியியலாளர்கள் (தளம் 4): Teachers and Other Educational Personnel
• தரம் 1: ஆட்சேர்ப்பு மற்றும் தெரிவு
• தரம் 2: தொழில் நிபந்தனைகள்
• தரம் 3: ஆதரவு மற்றும் மேற்பார்வை

5. கல்வி கொள்கை (களம் 5): Education Policy
• தரம் 1: சட்டம் மற்றும் கொள்கை உருவாக்கம்
• தரம் 2: திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல்

மேலதிகமாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து கற்றுக் கொள்ளலாம்.
https://inee.org/system/files/resources/INEE_MS_Contextualized_Sri_Lanka_English_2013.pdf
https://inee.org/system/files/resources/INEE_Minimum_Standards_Reference_Tool_TAMIL.pdf
எனவே ஒரு அவசரநிலைகளில் கல்வியை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, மேலே குறிப்பிட்ட தரங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். முதலில் சூழ்நிலையை ஆய்வு செய்து பின்னர் குறிப்பிட்ட தரங்களில் எந்த விடயங்கள் பாதிக்கப்பட்டள்ளது என அறிந்து கொண்டு இத்தரங்களை அடையும் முகமாக செயற்பாடுகள் இடம்பெற வேண்டும். இருப்பினும் அனைத்து தரநிலைகளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவசியமில்லாவிட்டாலும் கூடுமானவரையிலும் பொருத்தமான எல்லா தரங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

எனவே இப்போது நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி தற்போது இடம் பெறும் செயற்திட்டங்கள் அனைத்தும் இத்தரங்களை அடிப்படையாக கொண்டு இடம்பெறுகின்றதா என்பதாகும்? ஆகவே இனி திட்டமிடும் செயற்பாடுகள் அனைத்தும் இவற்றைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட வேண்டும்.

அரசு மற்றும் அரசுசார்பற்ற நிறுவனங்களுக்கான சில கவனத்தில் கொள்ளப்படக்கூடிய பரிந்துரைகள்.

1. நழைவுரிமையை உறுதிப்படுத்தல்: Ensure access
அனைத்து பிள்ளைகளுக்கும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
உதாரணமாக : தொலைவு / தொலைநிலை (distance/remote) கற்றல் தெரிவு உட்பட கற்றல் மற்றும் விளையாட்டை ஊக்குவிப்பதற்கான புத்தாக்க தீர்வுகள். தொலை தூர இலத்திரணியல் (Digital) பாகுபாடு மற்றும் சமமற்ற இலத்திரணியல் கற்றல் செயற்திட்டங்களை குறைத்தல் (5 கிராமங்களில் (மட்டக்களப்பு,-3 அம்பாறை-1 மற்றும் திருகோணமலை-1) மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வொன்றின் படி 47% பிள்ளைகளே இலத்திரணியல் (Smart Phone) சாதனத்தின் பயன்பாட்டை பெறக்கூடிய வசதியை கொண்டுள்ளர்)

2. பெற்றோர்களை ஆயத்தப்படுத்தல்:
பிள்ளைகளை உடல், சமூக, உணர்வு, அறிவாற்றல் மற்றும் ஆன்மீக ரீதியில் ஆதரிக்க குடும்பங்களை ஆயத்தப்படுத்தல் வேண்டும்.
உதாரணமாக : வயதுக்கு ஏற்ற, உள்ளூரில் கிடைக்கக்கூடிய பிள்ளைகளுக்கு உதவக்கூடிய மாற்று திட்டங்களான வயதுக்கு ஏற்ற செயல்பாட்டு வழிகாட்டிகள், வழிகாட்டப்பட்ட பாடங்கள் மற்றும் செயல்பாடுகள் (அச்சுப்பிரதி, வானொலி, தொலைக்காட்சி அல்லது டிஜிட்டல்) போன்ற பொருத்தமான வளங்களைப் பயன்படுத்துவதில் பெற்றோர் /பாதுகாவலர்களை இணைத்தல்
கல்வி செயற்பாட்டுடன் மன ஆரோக்கிய மற்றும் உளவியல் ஆதரவு செயற்பாடுகளை ஒன்றினைத்தல். பிரார்த்தனை மற்றும் சமய கற்றல் போன்ற ஆன்மீக நடைமுறைகளுக்கு பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் வழங்குதல்

3. சமூகங்களை வலுப்படுத்தல்
பாதுகாவலர் குழுக்கள், பாலர்பாடசாலை மற்றும் பாடசாலை சமூகங்களை கடப்பாட்டில் ஈடுபடுத்த சமூக ஒத்திசைவு மற்றும் பாதுகாப்பான வழிமுறைகளை ஊக்குவித்தல்.
உதாரணமாக : வீட்டில் கற்றல் மற்றும் உணர்வூபூர்வமான ஆதரவை வழங்குவதை ஊக்குவிப்பதற்காக பெற்றோர் / பாதுகாவலர்களுக்கு ரேடியோ, டிவி, பேஸ்புக், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ், பொது விளம்பர பலகைகளைப் பயன்படுத்தல். வீட்டில் கற்றல் முயற்சிகளை மேற்கொள்ள பெற்றோர்/ குடும்பங்களுக்கு ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் சமய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுதல் மற்றும் தொடர்ச்சியாக கல்வியில் ஈடுபடுவதின் முக்கியத்துவதை உணரும் விதமான செய்திகளை சமய தலைவர்களுடன் இணைந்து தயாரித்தல்.

4. பாலர்பாடசாலை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தை வலுப்படுத்தல்
பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கு கொவிட்-19 தொடர்பான பயங்கள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்யக்கூடியவாறு பாடசாலை சமூகம் தயாராக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தல்.
கொவிட்-19 பரவுவதை நிறுத்த / மெதுவாக்குவதற்கான தடுப்பு நடத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல் வேண்டும்.
கட்டாயப்படுத்தப்பட்ட தனிமை / நடமாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் சுய விழிப்புணர்வு, சுய முகாமைத்துவம், சமூக விழிப்புணர்வு, தொடர்பாடல் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை கட்டியெழுப்பக்கூடிய பிள்ளைகளுக்கான நிகழ்ச்சிகளை உருவாக்குதல் வேண்டும்.
வீட்டில் நிகழக்கூடிய அனைத்து வகையான வன்முறை, சுரண்டல், துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
அடுத்த மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் கற்றலுக்கான டிஜிட்டல் (வாட்ஸ்அப், வைபர் குழு உட்பட) தளங்களை ஊக்குவிக்கும் போது பிள்ளைகளை பாதுகாத்தல் மற்றும் தரவு பாதுகாப்புத் தேவைகள் குறித்து கவனமாக இருப்பதுடன் இணையதளத்தின் மூலமான அபாயங்களைக் குறைக்க அல்லது அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக வலய கல்வி பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில் நகரப்புறத்தைப் பார்க்கிலும் கிராமப் புறங்களில் ஸ்மாட் போன் பாவனை அதிகமுள்ளதாக தெரியவருகிறது. ஏற்கனவே இணையதள, ஸ்மாட் போன் பாவனை மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதால் அதற்கெதிரான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்போது கற்றலுக்கு உதவுவதற்காக நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் நாமே (கட்டற்ற) இணைய வெளிக்குள் பிரவேசிக்க அனுமதிப்பதும் ஸ்மாட் போன் பாவனையும் அவர்களுக்கு ஆபத்தானதாக மாறுவதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
ஆகவே இயலுமானவரை இணைய வழிகற்றலை குறைப்பதுடன் மாற்று வழியூடாக பிள்ளைகளுக்கான தொலைகல்வி செயற்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். ஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று 40 -45% பிள்ளைகளே டிஜிட்டல் வசதியை கொண்டிருப்பதனால் எல்லா பிள்ளைகளும் பயனடையக்கூடிய செயற்திட்டங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இச் செயற்திட்டங்கள் அனைத்தும் பிள்ளைகள் தவறவிட்ட ஒருமாத காலத்துக்கு தேவையானதை மட்டும் திட்டமிட்டு வழங்குவதுடன் சூழ்நிலையை அவதானித்து தொடர்வதைக்குறித்து தீர்மானிக்கவும் வேண்டும்.

N. Sabesan
[email protected]