கொரோனாவின் கொடூரமும் குடும்பபெண்களின் தலைப்பாரமும்

 

கொரோனாவின் கொடூரமும் குடும்பபெண்களின் தலைப்பாரமும்
மனிதனின் கற்பனைக்கு கூட எட்டாத வகையில் உலகில் அனைவருக்கும் உயிர் அச்சத்தை ஏற்படுத்திய கொடிய நோயே கொரோனாவாகும். தன் உயிரை காப்பாற்ற அனைவரையும் தன்நம்பிக்கையுடனும் தன்னடக்கத்துடனும் வீட்டில் தானாக மனிதனை வாழ வைத்த அதிபதியாக இது திகழ்கின்றது. முழு உலகையும் உளுக்குகின்ற ஒரு கொடூரமான தொற்று நோயாகவும் கொரோனா நோய் உலகை வலம் வருகின்றது. இக்காலத்தில் வல்லரசுகளும் சிற்றரசுகளும் தன் வல்லமையை பாதுகாக்க தத்தளிக்கின்ற வேலையில் இந்து சமூத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் இலங்கையிலும் இக்கொரோனா நோய் தாக்கம் செலுத்தியுள்ளது. இங்கு பல்லின மற்றும் பல்கலாசார மக்கள் வாழ்கின்ற போதிலும் எவ்விதமான வேறுபாடுகளும் காட்டாமல் அனைவரிடமும் தொற்றிக்கொள்ள வந்தது தான் இக்கொடிய கொரோனா நோயாகும்.
இலங்கை அரசாங்கம்; மக்களுக்கு பல வழிமுறைகளில் சேவைகளையும் சிறப்பான பணிகளையும் அரசநிர்வாக கட்டமைப்புகளுடன் இணைந்த வகையில் சுகாதார துறை மற்றும் முப்படை ஊடாக மேற்க்கொண்டு வருகின்றது இருப்பினும் அவை முழுமையாக மக்களை சென்றடைவதில் பாரிய சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன. குறிப்பாக ஊரடங்கு சட்டகாலம் அனைவருக்கும் ஒரு ஓய்வுக்காலமாக உள்ளது. ஆனால் பெண்களுக்கு மாத்திரம் இயந்திர சக்தி கொண்ட வேலைப்பளு அதிகரித்துள்ள காலமாகும். இச்சூழலில் நாட்டின் பல பாகங்களில் சமூககட்டமைப்பின் ஆரம்ப மட்டமான குடும்பங்கள் சிதைவுகளை எதிர்நோக்கி கொண்டு இருக்கின்றன. வீடு; என்பது வெறும் கற்களால்ளான கட்டிடம் மாத்திரம் அல்ல, அன்பு, அமைதி, ஆனந்தம் நிறைந்து வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அரணாகும். இதில் அனைவரும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும், ஆனால் தற்காலத்தில் அனைவரும் கொரோனாவின் பக்கம் கவனம் செலுத்தி உள்ளனர். இதனால் குடும்ப வாழக்கையில் உள்ள மகிழ்ச்சியின் பக்கம் கவனமின்றி பல குடும்ப வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள். தற்போது மிகவும் பாரிய சவால்களின் ஒரு வடிவமான குடும்ப வன்முறை எனும் சவாலில் பெண்களே அதிகளவு தாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அனைவரும் ஓய்வுவெடுக்கும் இக்காலத்தில் வீட்டில் உள்ள பெண்களுக்கு மாத்திரம் வேலைப்பளு அதிகரித்துள்ளது என்பது நிதர்சனம். முன்பு எம்நாட்டவர்களில் பெரும்பான்மையானனோர் வெளியிடங்களில் தான் அதிகளவு நேரங்களை செலவழித்தனர். ஆனால் இன்று வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள். இதனால் பெண்களுக்கான உடல் சுமையுடன் உளசுமையும் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் தேவையான உணவுகளை செய்தல், வீட்டில் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்து இருத்தல், அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு மத்தியில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எவ்வித தொற்று நோய்களும் தொற்றாத வகையில் அனைவரையும் பாதுகாக்க வேண்டிய மிகமுக்கியமான குடும்ப சுகாதார சேவைகளையும் பெண்களே அதிகளவு மேற்க்கொள்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளுக்கு மத்தியிலும் அவர்கள் அதிகளவு குடும்ப வன்முறைகள் மூலம் தாக்கப்படுகின்றனர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்களை கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க சுகாதாரதுறையினர் போராடுகின்ற வேலையில் தற்காலத்தில் அவர்களுக்கு மற்றுமொரு சவால் மிக்கவிடயமாக இங்கு அதிகளவு இடம்பெறும் குடும்பவன்முறை செயற்பாடுகளால் மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என இலங்கை சுகாதாரதுறையினர் சமூக வலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதே வேலை இவற்றுக்கான காரணங்களாக அத்தியாவசிய உணவு பற்றாக்குறை, பொருளாதார பற்றாக்குறைகள் மற்றும் போதைபொருள் இன்மை போன்றனவாக இனங்காணப்பட்டுள்ளது. இங்கு பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பது வெளிப்படை விடயமாகும்.
சமூக ஆர்வலர்களால் மனிதாபிமான அடிப்படையில் நிவாரணபொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற போதும் அவை உரிய முறையில் அனைவரையும் சென்றடையவில்லை. எனவே உதவிகளை மேற்க்கொள்வோர் கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உதவிகளை வழங்கினால் நிச்சயமாக முழு சமூகமும் பயன் பெறலாம். அவை மட்டும் இன்றி மக்களுக்கான அத்தியாவசிய உணவு பொருட்கள் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகளும் நிச்சயமாக கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.
குடும்பங்களில் உள்ளவர்கள் கொரோனாவின் பிடியில் இருந்து தப்புவது எனக்கூறிக்கொண்டு குடும்பத்தில் கொடூராமான மனிதனாக மாறாமல் இருக்க வேண்டும். தற்போது போதைப்பொருட்பாவனையின்மை தான் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது இவற்றை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம் மற்றும் பணப்பற்றாக்குறை போன்றவற்றின் மூலமே வன்முறை இடம் பெறுகின்றது மற்றும் அதிகளவு வேலைப்பளு காரணமாக வீட்டில் ஏற்படுகின்ற சிறு சர்சைகளுக்கு கூட கூரிய ஆயுதங்களால் தாக்குதல், அனைத்து வேலைகளையும் தனித்து பெண்களை செய்ய அனுமதித்தல், வீண்கோபங்களை காட்டுதல், தவறான வார்த்தை பிரயோகங்களை உபயோகித்தல், பெரியவர்களுக்குள் காணப்படும் பிரச்சனைகளை சிறுபிள்ளைகளில் காண்பித்தல் போன்றனவே இவ்வன்முறையை துண்டக்கூடிய காரணிகளாகும்
போதை பொருட்களுக்கு அடிமையாக வாழ்ந்தவர்கள் அதில் இருந்து மீண்டு வருவதற்க்கான ஒரு சந்தர்ப்பமாக இக்காலத்தை எடுத்து கொண்டு வீட்டில் இருக்கும் இக்காலத்தில் முடித்தவரை பெண்களுக்கு சிறு கை உதவிகளை மேற்க்கொள்ளுதல் மிகசிறந்த விடயமாகும். சமையல் மற்றும் வீட்டு சுகாதார சேவைகளுக்கு உதவிகளை வீட்டில் உள்ள இருபாலரும் செய்தால் அதிகளவான ஓய்வை பெண்களும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான ஓய்வு நேரங்களில் குடும்பமாக மகிழ்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபடலாம். இவை உடல் உள ஆரோக்கியத்திற்க்கு மிகவும் உகந்தாக அமையும். பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவிகளை மேற்க்கொள்ளலாம். சிறு வீட்டு தோட்டங்களை அமைத்தல், வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்க்கு உரிய நூல்களை படித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடலாம்.. அத்தோடு இக்காலத்தில் கல்விகற்கும் பிள்ளைகள் அனைவரும் வீட்டில் விடுமுறையில் உள்ளதால் பெற்றோர் தங்கள் நடத்தைகளில் வன்முறை செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும். வீண் வாக்குவாதங்கள் மற்றும் சர்சைகள் பிள்ளைகள் முன் மேற்க்கொள்வது ஒரு ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கு எதிரானது.
இவ்வளவு நாட்களும் உயர் அதிகாரிகளுக்கும் ஏனைய பொது சேவைக்காகவும் தம்மை அர்பணித்த ஆண்கள் அனைவரும் இக்குறுகிய காலத்தில் தன் வீட்டில் உள்ள பெண்களுக்காக சிறிது சேவைகளை மேற்க்கொள்ளலாம். இதன் மூலம் இல்லத்தில் உள்ள தலைமைத்துவத்தில் சமபங்கேற்பை இருபாலரும் பெற்றுக்கொள்வதுடன் குடும்பவாழ்கையில் பெண்களிடம் உள்ள சவால்களை அறிந்து அவற்றை வெற்றி கொள்வதன் மூலம் ஒரு ஆளுமைமிக்க குடும்ப தலைவானாக வாழலாம் அத்தோடு அனைவரும் இவ்வுலக ஓய்வுகாலத்தில் தம் பணிகளை தாமே உரிய முறையில் மேற்க்கொள்வதுடன், வீட்டில் உள்ள பெண்களுக்கான உடல், உள சுமைகளை குறைத்து பெண்களின் உணர்வுகள் மற்றும் முக்கியத்துவத்திற்க்கு மதிப்பளித்து குடும்ப வாழ்க்கையிலும் சமத்துவம், சுதந்திரம், உரிமை என்பவற்றை பெற்றுக்கொடுத்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என்பதை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.

பே.பானுஜா ,
கிழக்குப்பல்கலைகழகம்,
இலங்கை.