சரியாக பின்பற்றாவிட்டால் எண்ணிக்கை அதிகமாகும்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் சரியாக பின்பற்றாவிட்டால், எதிர்வரும் நாள்களில், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2,500ஆல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், களுத்துறை மாவட்டத்தில் காணப்படும் சுகாதார நெருக்கடி தொட்பாக, அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக கவனமெடுக்கத் தவறினால், அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் கொவிட்-19 பரவும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகப்பூர்வ அவதானிப்புக்களின் அடிப்படையில், கொவிட் -19, இம்மாதக் கடைசி வரையில் பரவுவதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுவதாகவும் எனவே, கொவிட் -19  அறிகுறிகள் காணப்படும் நபர்கள், உடனடியாகவே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள், கொவிட்-19 தொற்று உண்டா இல்லையா என்பது தொடர்பாக சரியான பரிசோதனை முடிவு வரும் வரையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்றும் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அடுத்த வாரங்களில் குறித்த வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்றும் அச்சங்கம் மேலும் கூறியுள்ளது.