சமூகத்தின் மனோநிலை 

   இளைஞனாக உள்ள எம்மைப் போன்ற ஒவ்வொருவனும் தனது வாழ்க்கையை இன்னவாறு தான் வாழவேண்டும் என்கின்ற ஒரு எண்ணப்பாடுகளுடன் இருந்திட நினைக்கும் ஆழ்மன என் உணர்வுகளை நசுக்கி சுக்கு நூறாக உடைக்கின்ற மனோநிலை எம் சமூகத்திற்கு மாத்திரமே உண்டு என்கின்றேன் நான். இன்று சமூகத்தின் திணிப்பின் நிமிர்த்தமே  தன்னை நல்லவனாக காட்டவேண்டும் என்ற மனோநிலையில் தம்மைத்தாமே அழித்துவிட்டு வாழ்பவர்கள் பலர் …ஆம் இன்று எவன் ஒருவன் தனது விருப்பின் பெயரினால் தன்னுடைய வாழ்க்கையினை கட்டமைத்து உள்ளான் என்று ஒருவரையாவது உங்களால் காட்ட முடியுமா? முடியாது முடியவே முடியாது ஏன் இதற்கு காரணம் தான் என்ன? ஏன் எம்மால் நாம் விரும்பியபடி வாழவே முடியாதா? என்ற கேள்வி எழுகின்றது அல்லவா ?

    ஆம் இக் கேள்வியினை என்னை நோக்கி நானே கேட்டு பார்த்தேன் இதற்கு விடை இல்லை ..இல்லை.. இல்லை.. என்றவாறே எழுந்தது காரணம் சமூகத்தின் மனோ நிலையோ அன்றி வேறு என்னவாகதான் இருக்க முடியும் அவ்வாறுதான் ஒருவன் இருக்க வேண்டும், இன்னவாறு தான் ஒருவன் நடக்கவேண்டும், இப்படித்தான் ஒருவன் ஆடை அணியவேண்டும், இப்படித்தான் ஒருவன் தலை மயிர் வெட்ட வேண்டும் என்றவாறான இன்னோரன்ன பல தரப்பட்ட விடயங்களை எமது சமூகம் வடிவமைத்து வைத்துவிட்டன இதுவே சமூகத்தின் மனோநிலை இந்நிலையினை விடுத்து அவ் கட்டுக் கோப்பினை உடைத்தெறிய தயாராக நிற்க்கின்ற என்னைப் போன்ற இளைஞர்களை கட்டாக்காலிகள் , உதவாக்கரைகள், விதன்டாவாதிகள் …. என்ற பல வண்ணமான பெயர்களை கொண்டு எனது காதுகளுக்கு கேளா வகையில் அழைப்பதும் சமூகத்தின் மனோநிலையோ? இதனை எல்லாம் பார்க்கின்ற வேளைகளில்  என்னை போன்ற இளைஞர்கள் தான் இக் காலத்திற்கு தகுந்தவர்கள் என எண்ணத்தோன்றுகின்றது. “காலம் மாறும் போது மனுசாளும் மாற வேண்டும்…” என்கின்ற என்றோ ஒருநாள் படித்த கூற்று இச்சந்தர்ப்பத்தில் என் மனதில் எழுகின்றது.

        ஒரு உயிர் தன்னுடைய பிறவியில் இவ் வாழ்வினை தன்னுடைய எண்ணப்படி வாழ நினைப்பது ஓர் தவறான விடயமாகுமா? ஒருவன் பிறப்பின் அடிமட்டத்திலிருந்து பலதரப்பட்ட இடர்பாடுகளைக் எல்லாம் கடந்து சிறிய ஓர் உயர்நிலைக்கு வருகின்ற சந்தர்ப்பத்தில் மாத்திரமே சமூகத்தின் மனோநிலை எழுகின்றனவா? அப்படியாயின் அவ் மனோநிலை உருவாவதற்கு காரணம் தான் என்ன?  படித்த ஒருவன் தன்னுடைய படிப்பறிவில்லாத ,பணமில்லாத ,சிறு வயதில் திருமணம் செய்து கொண்டு இன்னல்படுகின்ற ….என பலதரப்பட்டவர்கள் உடன் பழகுவது தண்டனைக்குரிய ஒரு விடயமாகுமா? இதுவும் ஓர் சமூகத்தின் மனோநிலையோ?   

      முன்னைய  காலங்களில் சாதி ,இனம், மதம்… என்கின்ற அடிப்படையில் இளைஞர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட சமூகத்தின் மனநிலை இன்று அதனையும் தாண்டி அவனது சுய விருப்பின் பெயரில் செயற்படாத நிலையில் அவனை அடக்கி ஒடுக்கி ஒரு நடைப்பிணமாக வைத்துக் கொண்டிருப்பதும் சமூகத்தின்  மனநிலை அன்றி  வேறு  என்னவாக தான் இருக்க முடியும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில செயற்பாடுகளை மாத்திரமே செய்பவன் சமூகத்தின் உயர் நிலையில் வைத்து போற்றப்படுகின்றான் மாற்று வழியில் புதுவிதமாக சிந்திப்பவன் சமூகத்தின்  இழிவுப் பெயருக்கு ஆழாகின்றான் இதனை எல்லாம் வடிவமைத்த சமூகத்தின் மனநிலை எதனைத்தான் எதிர்பார்க்கின்றன “ குறுகிய வட்டத்தினுள் சுற்றித்திரியும் கிணற்றுத் தவளை போல என்னையும் வடிவமைப்பது வா? …” இதுவும் சமூகத்தின் மனோநிலையாகத்தானே இருந்து வருகின்றன. சிறுவனான காலப்பகுதியில் இருந்து ஏதோ ஒரு உயர் நிலையினை அடைந்தே தீர வேண்டும் என்ற மனநிலை படைத்த எத்தனையோ உயிர்கள் போராடிக்கொண்டு உள்ள சமூகத்தில் அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏன் இவ்வாறான கேலிக்கை மிக்க, நகைப்பு மிக்க ,மனவேதனையை தூண்டக்கூடிய வகையில்  இழிவான வேலையை இவ் சமூகத்தின் மனநிலை செய்கின்றன. இது தான் மூத்த சமூக அங்கத்தவர்கள் விட்டுச் சென்ற சமூகத்தில் உயர்ந்தவை எனப் போற்றப்படுகின்ற சமூகத்தின் மனநிலை.

   ஒருவன் ஒரு செயற்பாட்டை செயல் படுத்துகிறான் என்றால் அதனை நீங்கள் வரவேற்க விடினும் அவ் விடயத்தினை இழிவுபடுத்தாமல் இருந்துவிட வேண்டும் .போட்டி ,பொறாமை ,எரிச்சல் தன்மையின் உச்சத்தில் நின்று கொண்டு அவ் செயற்பாட்டையும் அவனையும் எந்த வகையிலாவது புறம்தள்ளியே ஆக வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் பல விதமான சூழ்ச்சிகளை செய்து  அவ் விடையத்தினை மட்டம் தட்டினால் அந்த நொடிப்பொழுதில் நீங்கள் வெற்றி பெற்றவராக உணர்வீர்கள் ஆனால் அவனுக்கு என்றோ ஒருநாள் இதனையும் விட பெரிதான ஒரு மேடை அவனுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள் .இப்படியான நாடகங்களை வாழ்வினில் நடாத்துவதும் சமூகத்தின் மனநிலை யாகத்தான் இழந்து விடுகின்றது.இருப்பினும் இன்று இவ்வளவு தூரம்  இருத்தி என்னையும் எழுத வைத்த உயரிய மனோநிலையும் சமூகத்தின் மனோநிலையின் தார்ப்பரியமாகவே தான் நான் கொள்கின்றேன். இறுதியாக”எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப் படுகிறீர்கள் ….”என்று என்றோ ஒரு நாள் (குடியரசு 11 .10 1931) பெரியார் எடுத்து வைத்துரைத்ததை இன்று என் சார்பிலும் சமூகத்தின் மனநிலை என்ற அடிப்படையில் கூற திணிக்கப்பட்டேன்.

 

கு.மதுசாந்

நுண்கலைத்துறை

கிழக்குப்பல்கலைக்கழகம்