கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கண்டன அறிக்கை

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நிலையிலும் தம்மை அர்ப்பணித்து 24மணி நேரமும் வேலை செய்கின்ற கிராம சேவையாளர்களின் சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலையே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

தமது வேலைகளுக்கும் அப்பால் ஏனைய அரச திணைக்களங்கள் செய்ய வேண்டிய வேலையையும் கிராம சேவையாளர்கள் மக்களுக்காக அடிமட்டத்தில் இருந்து கொண்டு வேலை செய்கின்றனர் அவ்வாறானவர்களின் சேவைக்கு இடையூறு வழங்குவது மிகவும் கண்டிக்கதக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவின் கல்லாறு 2 கிராமத்தில் சேவையாற்றும் கிராம சேவையாளரின் சேவைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்  அரச உத்தியோகம் வகிக்கும் நபரொருபர் செயற்பட்டிருக்கின்றார்.

அவ்வாறு செயற்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை எமது சங்கம் மேற்கொண்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அறிவித்துள்ளோம்.

மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கின்ற போது அவர்களுக்காக சேவை செய்யும் எம்மை இவ்வாறு இடையூறு செய்து துன்புறுத்துவது மனக்கிலேசத்தினை ஏற்படுத்துகின்றது.

எதிர்வரும் காலங்களில் எமது சேவைக்கு இவ்வாறான இடையூறுகள் விளைவிக்கப்படுமாக இருந்தால் எந்த காலம் என்றுகூட பாராது எமது சேவையினை கைவிட்டு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் மக்களுக்கு கூறிக்கொள்ளுகின்றோம்.

ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம், மட்டக்களப்பு.