மட்டக்களப்பு சிறைச்சாலையில் கொறோணா தொற்று நீக்கி மருந்து விசிறல்

சிறைக் கைதிகளும் சமூகத்தில் ஒரு அங்கமே விரைவில் அவர்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கபடுவர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிகளின் சுகாதார நலன்கருதி மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினரால் இன்று (04) கொவிட் 19 கொறோணா தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டது.

மட்டக்களப்புச் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல். விஜயசேகரவின் ஆலோசனைக்கிணங்க கைதிகளின் சிறைக் கூடங்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் தங்குமிடங்கள் உள்ளிட்ட முழு வளாகமே கிருமியகற்றப்பட்டன.

இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொரோணா தொற்றுன்னவர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கோடு நோயாளர்களைக் காவி வரும் அம்பியுலன்ஸ் வண்டிகள் மத்திஸ் வீதியூடாக வைத்தியசாலையினுள் செல்வதனால் குறித்த பாதையின் இரு மருங்கிலும் உள்ள மதிள் சுவர்கள் உள்ளிட்ட இடங்கள் தொற்று நீக்கப்பட்டன.

அத்தோடு மட்டக்களப்பு பிரதம பொலிஸ் நிலையத்திற்கு எதிரேயுள்ள அத்தியாவசிப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நகரில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்கள் உள்ள இடங்களிலும் கிருமியகற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகரமுதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், தீயணைப்புப் பிரிவின் பொறுப்பாளர் வி. பிரதீபன், பதில் பிரதம ஜெயிலர் எஸ்.மோகன்ராஜ், புனர்வாழ்வு உத்தியோகத்தர் வி.சுசிதரன் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் பி.ஜி.டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.