தனிமைப்படுத்தலிலும் எம்மவர் ஒற்றுமை

0
228

இன்று உலகளாவிய ரீதியில் நாம் அனைவரும் எதிநோக்கும் ஓர் பிரச்சினை கொரோனா வைரஸ் ஆகும். சீனாவில் உஹான் மாநிலத்தில் உருவான இந்த வைரஸ் சீனாவை மாத்திரம் அன்றி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்த விடயமே இந்த வைரஸானது பல்வேறு வழிமுறைகள் மூலமாக ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுகின்றது,அவ் வழிமுறைகளில் தொடுகையே பிரதானமானதாகும். இதன் அடிப்படையில் இன்று உலகமே தனிமையாக இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

மனித நாகரிகம் அறியப்படும் காலம் தொட்டு குழுமமாக வாழுகின்ற பண்பையே கொண்டிருகின்றனர். இவ்வாறான பல்வேறு படிமுறைகளின் அடிப்படையாக தற்போது காணப்படுகின்ற குடும்ப அமைப்பு முறையினைக் குறிப்பிட முடியும். எனவே எவ் நிலையிலும் தனிமை என்பதை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை அனால் இன்றைய சூழலில் பரவுகின்ற வைரஸை வருமுன் காப்போம் என்பதற்கிணங்க இன்று பரிந்துரைக்கப்படும் ஒரு முதன்மையான விடயம் “தனிமைப்பட்டிருத்தல்” என்பதாகும். இதுவே குறுங்கால தீர்வுக்கான தேவையாகவும் உள்ளது.

தற்காலத்தில் நம்மில் அநேகர் ஒரு இயந்திர மயமான வாழ்வில் சிக்கித் திணறுகின்றோம். அதாவது தனது வேலை, தனது குடும்பம் என்றவாறான சுயநல மனப்பாங்குடனே, நம்மைச் சுற்றி வேலி அமைத்து வாழ்ந்து வருகின்றோம். இங்கே நாம் குடும்பமாக வாழுகின்ற போதும் எம்மை நாம் தனிமையாகவே வைத்துக் கொள்ளுகின்றோம், குடும்பத்திலுள்ள அனைவரும் சேர்ந்து பேசிக்கொள்ளல் என்பது கூட வாரத்தில் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி அமைதல் அரிதாகவே காணப்படுகின்றது. இதுவரை காலமும் பிறர் வறுமை, பிறரின் கண்ணீர், பிறரின் வாழ்தல் பற்றி அவ்வளவாக அறிந்திருக்க முயலவில்லை. உறவுகளுடனான எமது தொடர்புகளும் மட்டுப் படுத்தியதான, எமது மதில்கள் தாண்டியதாக இருந்ததில்லை.

இன்று உலகமே அச்சத்தில் உறைந்துள்ளது. பொருள், சொத்து சேர்க்க ஓடிய நாட்களை மறந்து இன்று உயிரைக் காப்பற்ற ஓரிடத்தில் தனித்துஉறைந்திருக்கின்றோம். எம் உயிர் மட்டுமின்றி சகலரின் உயிர்களுக்காகவும் இறைவனிடம் பிராத்திக்கின்றோம். மதில்களைக் கடந்தும் அயலவர்களுடன் உதவி பகிர்கின்றோம். தொலைந்து போன மனிதாபிமானம் துளிர்விட ஆரம்பித்திருப்பதை உணர முடிகின்றது. உறவுகளுடன் ஒட்டி உறவாடுவது, பாரபட்சமின்றி பகிர்துண்பது யாவுமே நம்மிடம் இருந்ததுதான், அது சுயநலப் போக்கான நம்மிடம் சில காலம் ஒளிந்திருந்தது அவற்றை வெளிகொணர்ந்து விட்டது இன்றைய அசாதாரண சூழல்.

இவ்வாறான நிலைமையில் மதங்களை அடிப்படையாகக் கொண்ட சண்டைகள் என்றுமே எமக்கு எவ் வழிகளிலும் உதவிகள் புரியாது, பல் இனம், பல் மதம் கொண்ட அழகிய நாட்டில் வாழ்கின்றோம். இங்கே விரும்பும் மதத்தினைப் பின்பற்றுகின்ற பூரண சுகந்திரம் யாவர்க்கும் உண்டு. கஷ்டம் வருகையில் கடவுளை வணங்குதல் என்பது எம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமே. அவைகள் தனி மனித சுகந்திரம் சார்ந்ததே அவற்றை பிறர்மீது தெளித்தலும், பிறர் அதைத் தடுத்தலும், பிறர் அதை அவமதித்தலும் மனிதப் பண்புகளுள் அடங்காதவையே, நாம் ஒருமித்து வெற்றி கொள்ள வேண்டிய இத் தருணத்தில் மதப்போதகம் செய்கின்றது ஒரு சில மனிதக் கூட்டம், உன்னால் பரவியது, என்னால் பரவியது என முகப்புத்தகங்களில் பதிவேற்றம் செய்து வன்முறைகளைத் தூண்டி வேடிக்கை பார்க்கின்றது ஒரு கூட்டம். இவைகளைக் கவனத்தே எடுக்காது அல்லும் பகலும் ஓய்வின்றி பலரைக் காக்க அயராது உழைகின்றது இதே சூழலில் வாழ்கின்ற இன்னுமொரு மனிதப் பிரிவு.

இன்றைய காலகட்டத்தில் உதவிகளாவன இன,மத,அரசியல்,சுய விளம்பரம் சார்ந்த அடையாளப்படுத்தல்களுக்கான அடிப்படைகளாக அமைகின்றன, இவை எப்போதுமே எமக்கு நீடிய வாழ்விற்கான நிரந்தர தீர்வாகாது. அடிப்படையில் நாம் சுயபூர்த்தி பொருளாதாரத்தைத் தொடர்ந்து பண்டமாற்று முறை மூலமே எம் வாழ்வினைக் கழித்து வந்தோம். எம்மிடம் அதிகம் உள்ளதை அருகில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளல் என்பது வழமையான ஒன்றே. கடந்த காலங்களில் மேலதிகமாக எம்மிடம் இருந்த தேங்காய்களை பக்கத்துக்கு வீட்டு மீன் பிடிபவர்களுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களும் உண்டு, இவை அவர்கள் மீன் பிடிக்காத காலங்களில் கூட கடன்கள் அற்ற ஒரு பக்க கொடுப்பனவாய் எம்மிடையே தொடர்ந்து நிகழும். இவைதான் இன்றைய காலத்திற்கும் தேவையாகின்றது எம்மிடம் மேலதிகமாக இல்லை என்றாலும் இருப்பதில் மீதம் பிடித்து அயலவர்களுடன் பகிர்ந்துண்ணக் கடமைப்பட்டுள்ளோம், இவை மனிதப் பண்புகள் என்ற பொது அடையாளத்திற்குள் அமைதல் அழகு.

நமக்குள் மத, இன, சாதி பேதங்கள் எதற்காக? அத்தனையும் உதறித் தள்ளி உறவுகளோடு ஒற்றுமையாய் வாழ்ந்த எம் வாழ்க்கை தொடர வேண்டும். பயத்தால், பட்டினியால், பரிதவிப்பால் வந்திருக்கும் இவ் ஒற்றுமை என்றுமே எம் வாழ்வியலோடு இணைய வேண்டும். இவை அசாதாரண சூழ் நிலைகளைக் கடந்தும் எம் வாழ்வின் அங்கங்களாக என்றுமே வாழ வேண்டும்.

ச.றொசானி