உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது – கல்வி அமைச்சு

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதைப் போன்று கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் கடந்த டிசம்பர் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும் என்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்துகின்றது.

முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு முகங்கொடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வகையிலான போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு கேட்டுக் கொள்கிறது. அத்தோடு இவ்வாறான போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசாங்கத்தால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வமான செய்திகளை மாத்திரமே நம்புமாறும் அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

அத்தோடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.