இருதேசத்து கோயில்கள் படுவான்கரை மக்களுக்கு நிவாரண உதவி!

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரு தேசத்து ஆலயங்கள் படுவான்கரையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக அத்தியாவசியப் பொதிகளின் ஒருதொகுதியினை இன்று(29) ஞாயிற்றுக்கிழமை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம், தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயங்கள் இணைந்தே இந்நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தனர். இதனை குறித்த ஆலயங்களின் பிரதமகுரு, ஆலய பரிபாலன சபையின் உறுப்பினர்கள் கையளித்தனர்.

அரிசி, பருப்பு, கோதுமை மா, சீனி, சவர்க்காரம் போன்ற பல அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய, ஒவ்வொன்றும் 1000 ரூபா பெறுமதியான 1050 பொதிகள் இதன்போது வழக்கிவைக்கப்பட்டன.
இதேபோன்று, நாளைய தினம் ((30)) வவுணதீவு பிரதேச செயலாளரிடமும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக, அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற ஊரடங்கு சட்டத்தினால், அன்றாடம் கூலிவேலை செய்து வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இந்நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.