கொக்கட்டிச்சோலையிலும் பொருட்கள் வாங்க மக்கள் முண்டியடிப்பு : சுகாதார அறிவிப்புகளை பேணுவதை கண்காணிப்பதிலும் தீவிரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6மணியிலிருந்து பிற்பகல் 2மணி வரை தளர்த்தப்பட்ட நிலையில், கொக்கட்டிச்சோலை பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் முண்டியடித்துக்கொண்டனர்.

இதன்போது, குறித்த மக்கள் சுகாதார திணைக்களத்தினாலும், அரசாங்கத்தினாலும் கூறப்பட்டிருக்கின்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றனரா? என்பதனை கண்காணிப்பதில் மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும், மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்தியர் உள்ளிட்ட ஊழியர்களும், காவல்துறையினரும், இராணுவத்தினரும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், உரிய இடங்களில் அவ்வவ்போது சுகாதார விழிப்புணர்வுகளையும் சுகாதார உத்தியோகத்தர்கள் மக்களுக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மரக்கறி விற்பனை நிலையம், பல்பொருள் வாணிப நிலையங்களிலேயே அதிகளவில் மக்கள் குழுமியிருந்தனர். வீட்டில் இருந்துகொண்டே ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலங்களில் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு, குறித்த பிரதேசத்திற்குட்பட்ட வர்த்தக நிலையங்களின் தொலைபேசி இலக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாட்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வேறுபிரதேசத்தினைச் சேர்;ந்த நபர்கள் இருவர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தபோதிலும் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்படாத நிலையில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில், குறித்த இருநபர்களும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலுக்காக அனுமதிக்கப்பட்ட சம்வமொன்றும் நேற்று பதிவாகியுள்ளது.