மட்டக்களப்பு மக்கள் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் : எச்சரிக்கிறார் வைத்திய நிபுணர்

0
186

மட்டக்களப்பு மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்திய நிபுணர் எஸ். மதனழகன் எச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் எனவும் மாவட்டத்தை மூடி தனிமைப்படுத்தாவிட்டால் இவ்வாறு பாரிய விளைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மட்டு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் இந்த முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர். ஏப்ரலில் காலநிலை மாறும்போது பிரச்சினை பெரிதாகத்தான் போகும். எனவே தனிமைப்படுத்தல் இல்லாமல் நெருக்கமாக இருந்தால் ஓட்டு மொத்தமாக ஒரு நாட்டை அழிக்கும்போது 45 தொடக்கம் 75 வீதம் அதன் பாதிப்பு இருக்கும்.

குறைந்தபட்சம் 40 வீதம் கொரோனா தொற்றுக்கு இந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் 5 இலட்சம் பொதுமக்கள் வாழுகின்ற இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள்.

இதைத் தடுக்கமால் போனால் இந்த 2 இலட்சம் பேரில் 80 வீதமான 1 இலட்சத்து 60 ஆயிரம் பேர் பேசாமல் இருப்பார்கள். மிச்சம் 40 ஆயிரம் பேருக்கு வைத்தியசாலையிலை விடுதி வசதி வேண்டும். இப்போது இருக்கின்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆயிரம் கட்டில் அல்லது மிஞ்சிப் போனால் 2 ஆயிரம் கட்டில்களைத்தான் ஒழுங்குசெய்ய முடியும்.

இந்த 40 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு நாங்கள் அவசர சிகிச்சை ஒட்சிசன் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். ஆனால் இன்றைய நிலைவரத்தின்படி மட்டக்களப்பில் 55 பேருக்குத்தான் அவசர சிகிச்சை ஒட்சிசன் வழங்க முடியும்.

இதன் தீவிரம் எந்தளவுக்கு இருக்கப் போகின்றது என ஆராயாமல் கல்யாண வீடு, சாவு வீடு போன்ற மற்றைய விடயங்களைக் யோசித்துக்கொண்டு கதைத்துவிட்டு தனிமைப்படுத்தல் இல்லாமல் இருந்தால் இந்த தொடர் சங்கிலித் தொற்றுநோயை நிறுத்தமுடியாமல் போகும்.

இந்த 6 மணித்தியால ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தி பொதுமக்களை பொருட்கள் வாங்க விடுவது கூட இந்தப் பாதிப்பைக் கொண்டுவரப் போகின்றது. அதேவேளை, நீங்கள் முகக் கவசம் அணிவதோ கையுறை போடுவதோ எதுவுமே 100 வீதம் இந்த தொற்றை கட்டுப்படுத்தப் போவதில்லை. இது பாதிப்பை கொண்டுவரப் போகின்றது.

எனவே முடியுமாயின் வீட்டுக்கு வீடு பொருட்களைக் கொண்டு சென்று வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும். அதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் இந்த மாவட்டத்தை ஒரு 14 நாட்கள் மூட முடியுமாக இருந்தால் அது இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் ஒரு நல்ல செயலாக இருக்கும். ஆனால் இந்தத் தொற்று வந்தால் நிறுத்த முடியாமல் போகும்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 100 எனக் காட்டப்படுவது 100 அல்ல. 20 ஆயிரம் பேருக்கு இந்தத் தொற்று இருக்கின்றது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக அதைவிடக் கூடுதலாகத்தான் இருக்கும்.

கண்டபடி தைக்கின்ற எந்தவெரு முகக் கவசமும் வேலைக்காகாது. எந்த விதமான துணியைப் போட்டாலும் அதில் மூக்கில் வருகின்ற ஈரப்பதன் படிந்ததும் அதில் வைரஸ் படியும். எனவே வெளிப்பக்கம் தண்ணீரை உறுஞ்சாததும் உட்பக்கம் எமது ஈரத்தை உறுஞ்சுவதுமான பொருத்தமான தரமான முகக் கவசத்தை பாவிக்கவேண்டும். அது இல்லாது எதைக் கட்டினாலும் வைரஸ் அதனூடாக உட்செல்லத்தான் போகின்றது.

எனவே அறிவுறுத்தலாக முகக் கவசம், கையுறை போன்றவைகளை அணிந்துகொண்டு சென்றால் வைரஸ் தொற்றாது என்ற எண்ணத்தை விடுத்து தனிமைப்படுத்தலை முறையாக முன்னெடுத்தால் மட்டுமே இந்தத் தொற்றைத் தடுக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.