வேட்பாளராக முண்டியடிப்பு : மட்டக்களப்பு மக்கள் செய்ய வேண்டியதென்ன?

இலங்கை நாட்டிலே பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து, பல்வேறு நபர்களும் தேர்தலில் பல்வேறு கட்சிகளிலும், சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுவதற்காக முண்டியடித்துக்கொண்டு திரிவதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணமுடிகின்றது.

இன்னமும் ஒவ்வொரு கட்சிகளும், போட்டியிடவுள்ள உறுப்பினர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவித்தல்களை முழுமையாக இதுவரை வழங்கவில்லை.

ஆனாலும் 5பேரை தெரிவு செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் போட்டியிடவுள்ளமை தெளிவு.

கடந்த பொதுத்தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்குளின் மூலமாக மூன்று தமிழர்களும், இரண்டு முஸ்லிம்களும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தனர்.

இதேவேளை இன்னுமொரு முஸ்லிம் அங்கத்தவர் தேசியபட்டியிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவிருந்தனர்.

தற்போது தேர்தல் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பலருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசை ஏற்பட்டிருக்கின்றது. இதில் யாரை தெரிவு செய்வதென்பது மக்கள் கையிலேயே உள்ளது. மக்கள் அளிக்கும் விருப்பு வாக்குகளே யார் என்பதனை வெளிப்படுத்தும்.

இதற்காக மக்கள் நன்கு சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு தமிழ்கட்சிகளும், ஒவ்வொரு தமிழ்கட்சிகளையும் விமர்சித்தே வாக்குகளை பெற்றுவந்தமை வரலாறு. தற்போதும் அது நடைபெறாது என்பதிற்கில்லை.

 

இப்பொழுதே சமூகவலைத்தளங்களில் ஒவ்வொரு கட்சிகளையும், கட்சியில் உள்ளவர்களையும் விமர்சிக்கும் சுயலாப அரசியல் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. இவ்வாறான விமர்சிப்பு இல்லாமல் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சிகளும், வேட்பாளர்களும் தங்களால் முன்னெடுக்க கூடிய செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சாத்தியமானதையே குறிப்பிட வேண்டும். தமது ஐந்து வருட காலத்தில் முன்னெடுக்ககூடிய செயற்பாடுகளை திட்டமிட்டு வெளிப்படுத்தி மக்கள் முன் வைக்கவேண்டும்.

அவ்வாறனவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்துவிட்டு ஏன்? தெரிவு செய்தேன் என்று கவலையுறுவதற்கு முன், சரியானவர்களை தெரிவுசெய்வதற்கே மக்கள் முன்வர வேண்டும்.

வாக்குகள் அளிக்காமல் ஒதுங்கி நிற்பதனை நிறுத்தி, 100வீதமான வாக்குகளை பதிவுசெய்வதற்கு மக்கள் முன்வர வேண்டும்.
நாளாந்த திட்டமும், மக்களின் நிலையை அறியாதவர்களை புறந்தள்ள வேண்டும். மாலைக்கும், கௌரவத்துக்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்படுவர்களை நீக்கி மக்களோடு மக்களாக மக்களுக்கு சேவையாற்றும் சேவையாளர்களை தேர்வு செய்ய வேண்டும். நீண்டு நிலைக்க கூடிய, நீண்ட கால சிந்தனையும், திட்டத்தினையும் கொண்டவர்களே மட்டக்களப்பு மண்ணுக்கு தேவை. இதற்கு மக்கள் சிந்தினை வாக்கே பலமாகும்.