மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார அடிப்படையில் நான்கு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தமிழ்மக்கள் முன்வர வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார அடிப்படையில் நான்கு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தமிழ்மக்களை தயாராகுமாறு மு.கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் அறைகூவல் விடுத்துள்ளார்.

இம்மாவட்டத்தில் 74வீதம் தமிழர்களும், 25வீதம் முஸ்லிம்களும், 01வீதத்திற்கு மேல் சிங்களவர்களும் வாழ்கின்றனர். இதில் கற்குடாத்தொகுதியில் ஒரு இலட்சத்திதி பத்தொன்பதாயிரத்திதொள்ளாயிரத்து இருபத்தெட்டு வாக்குகளும், மட்டக்களப்புத் தொகுதியில் ஒருஇலட்சத்தி தொண்ணூற்றிஇரண்டாயிரத்தி எண்ணூற்றி ஒன்பது வாக்குகளும், பட்டிருப்புத் தொகுதியில் தொன்னூற்றி ஏழாயிரத்தி எழுபத்தொரு வாக்குகளும் மொத்தமாக மாவட்டத்தில் 409808 வாக்ககளும் உள்ளன.

யுத்த காலத்தில் எமது மக்கள் உரிமை தான் வேண்டும், அபிவிருத்தி வேண்டாமென கூறியதன் காரணமாகவும், ஜனநாயகத் தேர்தலில் நம்பிக்கையின்மை காரணமாகவும், பாராளுமன்றத்தேர்தல், மாகாணசபை, உள்ளூராட்சி,ஏனைய அமைப்புத் தேர்தல்களில் ஓத்துழைக்கவில்லை. இதனால் ஒருவகையில் தமிழர்கள் பலவீனம் அடைந்ததும் உண்மையாகும்.

இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் பாராளுமன்றத் தேர்தலில் நான்கு பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதைத்தவிர பலதடவைகளுக்கு மேற்பட்ட தேர்தல்களில் நாம் விகிதாசாரத்திற்கு ஏற்றாவாறு தமிழ் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இம் மாவட்டத்திற்கென ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப் படவேண்டும். இதில் 74வீதம் தமிழர்கள் உள்ள நிலையில் நான்கு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை கடந்த காலத்தில் தெரிவு செய்திருக்க வேண்டும். இதேபோல 25வீதமுள்ள முஸ்லிம்கள் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை தெரிவு செய்யப்படுவதே விகிதாசார முறையில் உள்ள முறமையாகும்.

விகிதாசார முறமைகள் இப்படியிருக்க ஒருசில பாராளுமன்றத் தேர்தல்களைத் தவிர தமிழர்கள் மூன்று பிரதிநிதிகளையும், முஸ்லிம்கள் இரண்டு பிரதி நிதிகளையும் தெரிவு செய்வதோடு, தேசியப்பட்டியல் ஊடாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டதே வரலாறாகும். முஸ்லிம் மக்களின் விகிதாசார அடிப்படையில் ஒரு பிரதிநிதியை அவர்கள் பெற்றேயாக வேண்டும். தமிழர்களைப் பொறுத்தவரையில் விகிதாசார அடிப்படையில் நான்கு பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் வாக்களிப்பு வீதம் குறைவாக அளிப்பதாலும்
தமிழர்கள் குறைவாக வாக்களிக்கக் கூடிய ஒரு பொறிமுறை மறைமுகமாக உள்ளனவா?
இனவாத அரசின் கைக் கூலிகள் வாக்குகளைப் பிரிப்பதற்காக தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கி தமிழ் வாக்குகளை பிரிப்பதனாலுமே தமிழர்களுடைய நான்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை. இதற்கான முழுப்பொறுப்பும் மாவட்டத்திலுள்ள தமிழ் வாக்காளர் அனைவரிடமும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பாராளுமன்றத்தேர்தலிலாவது 74வீதம் உள்ள தமிழர்களாகிய நாங்கள் நான்கு பாராளுமன்ற தமிழ்பிரதிநிதிகளை பெறவேண்டுமாயின் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இத் தேர்தலிலும் விட்டுவிடக் கூடாது. முதலில் ஒற்றுமையாகத் தேர்தலில் களமிறங்க வேண்டும். தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்காகவும். பட்டம். பதவிகளுக்காகவும்,சின்னத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும், தேசியப் பட்டியலுக்காகவும், ஆத்திரத்திற்காகவும் தேர்தலில் போட்டியிடுவது நிறுத்தப்பட வேண்டும். ஆத்திரத்தை, தனிப்பட்ட குரோதத்ததை பலம் பார்ப்பது தமிழ் பிரதிநிதித்துவத்தில் இருக்கக் கூடாது. அதை மீறி இத்தேர்தலில் களம் இறக்கப்பட்டால் அவர்களுக்கெதிராக ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு மக்களை தயாராகுமாறும் அறைகூவல் விடுப்பதோடு, நான்கு தமிழ் பிரதி நிதித்துவத்தைப் பெறுவதற்கு ஒன்றாகுமாறும், விட்டுக்கொடுத்துப் போகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.