கல்முனையில் எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் மாநகர முதல்வராக வரக்கூடிய வாய்ப்புக்கள்

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை கொடுத்துள்ளதால் தமிழர்களுக்குக்தான் கூடுதலான நன்மை கிடைத்துள்ளது. இதனால் கல்முனையில் எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் மாநகர முதல்வராக வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)தெரிவித்தார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக இருந்தவர்கள் எல்லோரும் சாய்ந்தமருது நகரசபையுடன் இணைக்கப்பட்டுள்ளார்களென்றும் குறிப்பிட்டார். களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள், ஆளணி தேவைகள் தொடர்பாக கருணா அம்மான் நேற்று காலை விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன் ஏனைய தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்குத் தமிழர்களையும், கிழக்கு மண்ணையும் பாதுகாக்கவே ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியிருக்கின்றேன். தொடர்ச்சியாக என்னுடன் இணைந்திருந்தால் எம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், பொருளாதார தேவைகள், ஏனைய தேவைகள் என்பனவற்றை நிவர்த்தி செய்து கொடுத்தால் தான் எம் மக்கள் நிம்மதியாக வாழமுடியும்.
அதற்காக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தை பலப்படுத்தி ஒத்துழைக்க வேண்டும். நான் இருக்கும் வரை தமிழர் பகுதிகளில் முழுமையான வசதிகளை ஏற்படுத்துவேன். தமிழ் மக்களை நான் நல்ல நிலைக்கு கொண்டு செல்வேன். கடந்த அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம் பின் தங்கிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்து கல்வியையும், சுகாதாரத்தையும் கிழக்கு மாகாணத்தில் தரமுயர்த்துவதற்கு உழைப்பேன். எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்பிரல் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான சிறப்பான அரசாங்கம் ஆட்சிக்கு வரும். அதனால் இவ் அரசாங்கத்தின் ஆட்சியானது 10, 15ஆண்டுகள் நீடிக்கும். அரசாங்கத்தை முழுமையாக தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய பொறுப்பு இருக்கின்றது