தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல்

விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் தேசியத் தலைவரின் வழிகாட்டலுக்கு முரணானது…

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்)

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல். இதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது விக்னேஸ்வரன் அவர்களும் அவரது சகாக்களும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தமிழர்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்ற தேசியத் தலைவரின் கருத்துக்கு முரணானது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் வாக்குப் பலத்தினை முழுமையாக ஒன்று திரட்ட வேண்டிய இந்த நேரத்திலே இவ்வாறு புதிய கட்சிகள் உருவாவது தமிழர்களுடைய வாக்குகளைச் சிதறடிக்கச் செய்கின்ற, தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது தமிழர் தரப்பில் பல்வேறு கட்சிகள் உதயமாகிக் கெண்டிருக்கினறன. மக்களுக்கு அக்கட்சிகளின் பெயர்களைச் சொல்வதற்கே முடியாமல் இருக்கின்றது. இதனால் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அவர்களின் கட்சி என்றே தான் சொல்லுவார்கள். இவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட கட்சிகள். இவர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குறைக்க நினைக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்பது தமிழர்களின் பலம். இதனை விக்கேனஸ்வரன் அவர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு மிகத் தெளிவாகச் சொன்னார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் தற்போதுள்ள ஒரே ஒரு பலம் அனைவரும் குறிப்பாக புத்திஜீவிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் பலம் கொடுக்கக் கூடிய விதத்தில் செயற்பட வேண்டும் என்றெல்லாம் தெரிவித்திருந்தார். இவ்வாறான அவருடைய முற்போக்கான கருத்துக்கள் எங்கள் பலரைக் கவர்ந்தது. இதன் காரணமாகத்தான் எங்கள் கட்சிக்குள் ஈர்த்து முக்கிய பதவியைக் கொடுத்து அவருக்காக வாக்குக் கேட்டு அவரை வெல்ல வைத்தோம். வடமாகாணசபையின் முதல்வராக்கினோம்.

விக்கினேஸ்வரன் அரசியலுக்குப் பழக்கப்படாதவர். இதனை நான் சொல்லும் போது அவருக்கும் அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் கோவம் வரும். ஆனால் அதுதான் உண்மை. அரசியலிலே மக்களோடு கலந்திருக்க வேண்டும். மக்களின் இன்ப துன்பங்களிலே கலந்துகொள்ள வேண்டும். அவர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.

விக்கினேஸ்வரன் முதலில் சொன்னார் தான் அரசியல் சாராத அமைப்பினை ஏற்படுத்தப் போகின்றேன் என்று தமிழ் மக்கள் பேரவையை ஏற்படுத்தினார். ஆனால் அவ்வாறு சொல்லிவிட்டு அவரின் முழுமையான உருவத்தைக் காட்டி விட்டார். இது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் இப்படித்தான் வருவார் என்று. தற்போது அவ்வழியிலேயே ஒரு அரசியற் கட்சியினுடைய தலைவராக ஆகிவிட்டார். தான் அரசியல்வாதி அல்ல என்று கூறிக்கெண்டு அதற்குள்ளேயே வந்துவிட்டார்.

விக்னேஸ்வரனின் எதிர்பார்ப்புகள் பல வீணாகிப் போய்விட்டன. கஜேந்திரகுமார் தன்னை ஒரு தலைவராக ஏற்று செயற்படுவார் என்று நினைத்திருந்தார். அது கனவாகப் பொய்த்து விட்டது.

சுரேஸ் பிறேமசந்திரன் மிக அரசியல் அனுபவம் கொண்டவர் ஆனால் அவர் பேச்சாளராக இருந்த போது இராஜதந்திரிகள் எந்த எந்த விடயங்களையெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது என்று நினைத்து எங்களிடம் சொன்ன விடயங்களை அவர் வெளியில் சொன்னதன் காரணமாக மக்கள் அவர்மீது அதிருப்தியுற்று அவர் 2015 தோதலில் தோற்றுப் போனார். ஆனால் அதன் பின்னர் அவர் எங்களுடன் சேர்ந்து உழைத்திருக்கலாம். தேசியப் பட்டியல் கேட்டார். உடனடியாக அதை எங்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து எம்முடன் இருந்திருந்தால் காலப் போக்கில் அவ்விடயம் கிடைத்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும்.

தமிழர் அரசியல் என்பது ஈழத்தைப் பொருத்தவரையில் வெறும் அபிவிருத்திக்கான அரசியல் அல்ல. எமது மக்களின் விடுதலைக்கான அரசியல். விடுதலையை அடைவதுதான் எமது முக்கிய இலக்கு. இதில் மிக ஈடுபாடு கொண்டவர் சுரேஸ் பிறேமச்சந்திரன். அவ்வாறான செயற்பாட்டுக்கான தியாகமாகக் கூட அந்தத் தேசியப்பட்டியல் விடயத்தை எடுத்து செயற்பட்டிருக்கலாம். சிவசக்தி ஆனந்தனும் அவ்வாறே. அவரின் அணுகுமுறைகள், விமர்சனங்கள் மக்கள் மத்தியில் அதிக காலங்களுக்கு எடுத்துச் செல்லாது.

பெண்கள் அரசியலுக்குள் வருகின்றமை என்ற காரணத்தை வைத்து அனந்தி சசிதரனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தோம். அவர் வந்த ஆரம்பத்திலே இருந்து வேறு விதமாகச் செயற்படத் தொடங்கினார். தற்போது அவர் தனிவழியாகச் சென்று தனிக் கட்சியை உருவாக்கியிருக்கின்றார்.

ஸ்ரீகாந்தா அவர்களும் சிறந்த அரசியல் ஆழம் கொண்டவர். சட்ட அறிவும் இருக்கின்றவர். டெலே கட்சியை முன்நின்று வழிநடத்தியவர்களில் ஒருவர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் எடுத்துக் கொண்ட முடிவின் காரணமாக அவரின் கட்சியே அவர்களை வெளியேற்றினார்கள். அவரும் தற்போது புதிய கட்சியை ஆரம்பித்திருக்கின்றார். அனந்தி சசிதரனோடு சேர்ந்திருந்த சிவாஜலிங்கம் தற்போது ஸ்ரீகாந்தாவுடன் சேர்ந்திருக்கின்றார்.

தற்போது தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்க பங்காளிக் கட்சியினரைக் கூட்டிப் பார்த்தாலே ஒரு கட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் எல்லோரும் சோர்ந்து கட்சிகளின் கூட்டமைப்பு என்று சொல்லுகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிய வேண்டும் என்று சொன்னவர்களில் சுரேஸ் பிறேமச்சந்திரன் மிக முக்கியமானவர். ஆனால் தற்போது அவர்கள் உருக்கியிருக்கின்ற கட்சி ஒரு கூட்டமைப்பாக இருக்கிறதே தவிர அது ஒன்றாகப் பதிவு செய்த ஒரு தோற்றத்தைப் பெறவில்லை. அதிலே பொதுச் செயலாளர் விக்னேஸ்வரன் அவர்கள்தான் இருப்பார் என்று நிர்ணயிக்கப்பட்ட விதத்திலே தற்போதே சொல்லத் தொடங்கி விட்டார்கள். இவ்விடயம் குறித்து சுரேஸ் பிறேமச்சந்திரன் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த புதிய கட்சியின் உருவாக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கிய தேசியத் தலைவரின் பார்வையில் எவ்வாறு இருக்கும் என்றும் பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கும் போது அரசியற் களத்தில் ஜனநாயக வழிமுறையைக் கையாளுகின்ற விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் என்று அவர் வழிகாட்டி வந்தார். தமிழர் விடுதலைக் கூட்ணியினை அடியாகக் கொண்ட அமைக்கப்பட்டதில் சங்கரி ஐயாவின் நடவடிக்கை காரணமாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரிந்ததும் அடுத்த மார்க்கமாக எந்தக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்நகர்த்தாலம் என்று பார்க்கும் போது பழமை வாய்ந்த கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இருந்தது. தமிழ்க் காங்கிரஸ் ஒற்றையாட்சியை வலியுறுத்தி வந்த காரணத்தால் அதற்கு அந்த முக்கியத்தவத்தைக் கொடுக்க தேசியத் தலைவர் விரும்பவில்லை. தமிழரசுக் கட்சிக்குத்தான் அந்த முக்கியத்துவத்தைக் கொடுத்தார். அந்த அடிப்படையிலே தான் வீட்டுச் சின்னத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கமும், அதனுடைய செயற்பாடும், தேசியத் தலைவரின் வழிகாட்டல் என்பனவெல்லாம் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதைத் தான் காட்டுகின்றது. அப்படியில்லாமல் தற்போது விக்னேஸ்வரன் அவர்களும் அவரது சகாக்களும் எடுக்கின்ற நடவடிககைகள் தமிழர்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்ற தேசியத் தலைவரின் கருத்துக்கு முரணானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தலைமைத்துவம் பிரச்சினை, தனிநபர் பிரச்சினை என்பவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த விடயங்களை உள்ளே இருந்து கையாள வேண்டுமே தவிர வேறொரு கட்சியை ஏற்படுத்துகின்றோம் என்று சொல்வதும் பொருத்தமில்லாத நிகழ்வு.

தற்போதைய ஜனாதிபதி முழுக்க முழுக்க சிங்கள பௌத்த தேசிய வாதத்தைத் தன்னுடைய பரப்புரையாகச் செய்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே. தமிழ் மக்களின் வாக்குப் பலத்தினை முழுமையாக ஒன்று திரட்ட வேண்டிய இந்த நேரத்திலே இவ்வாறு செய்வது தமிழர்களுடைய வாக்குகளைச் சிதறடிக்கச் செய்கின்ற ஒரு நிகழ்ச்சி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்த எடுக்கின்ற முயற்சி. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சி.

இந்த நேரத்திலே தமிழ் மக்கள் ஒரு விடயத்தை கவனமாக விளங்கிக் கொள்வார்கள் என்று நினைக்கின்றேன். விக்னேஸ்வரன் உட்பட அவருடன் இணைந்தவர்களுடன் ஆலோசனை சொல்லி ஒன்றாக இணையுமாறு சொல்வதிலே இனியொரு பயனும் இருக்காது. ஆனால், அவர்களுக்குத் தக்க பாடத்தினைப் புகட்ட வேண்டிய வகையிலே தமிழ் மக்கள் செயற்பட்டு இவ்வாறான முன்மாதிரிகள் பிழையானவை என்று அவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.