சுரவணையடியூற்று கிராமத்தில் யானை தாக்குதல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், நேற்று (13) காலை காட்டு யானை கிராமத்துக்குள் நுழைந்து மூவரைத் தாக்கியுள்ளது.

இதில் 72 வயதுடைய கா.தாமோதரம்பிள்ளை, 52 வயதுடைய சி.நாகசோதி ஆகியோர் குறித்த யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, மயக்கமுற்ற நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். மற்றயயவர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

அத்தோடு, யானையின் தாக்குதலில் உடைமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாமோதரம்பிள்ளை, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த கிராம சேவை உத்தியோகத்தர் கோபாலசிங்கம், பிரதேச வனஜீவராசிகள் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தார்.

எனினும், குறிப்பிட்ட இடத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்துக்கு சமூகமளிக்காததனால் பிரதேசவாசிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

பின்னர் காட்டு யானையை மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு ஒருவாறு கிராமத்தை விட்டு விரட்டியுள்ளனர். அதன்பின்னர்தான் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்து பார்த்துவிட்டுச் சென்றுள்ளனரென, அக்கிராமத்து மக்கள் தெரிவித்தனர்.