கொத்தியாபுலை பாடசாலை முன்பு அதிபர், ஆசிரியர் நீக்ககோரி ஆர்ப்பாட்டம்

0
306

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வவுணதீவு, கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயம் முன்பாக இன்று (12) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபரையும் ஆசிரியர் ஒருவரையும் நீக்குமாறு கோரியும் பாடசாலையில் இயங்கிவரும் உயர்தரப் பிரிவை நீக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையை நிறுத்துமாறும் வலியுறுத்தியுமே, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த அதிபரும் ஆசிரியரும் நீண்டகாலமாக ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும் பாடசாலையின் கணக்கறிக்கைகள் எதுவும் காட்டப்படுவதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், 25 மாணவர்களுடன் பாடசாலையில் உயர்தரப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதிலும், அவற்றை நீக்கிவிட்டு, குறைந்த மாணவர்கள் உயர்தரம் கற்கும் பகுதிக்கு குறித்த உயர்தரப் பிரிவைக் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள் , பழைய மாணவர்கள், கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் ஈடுபட்டனர்.

குறித்த இடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் வருகை தந்திருந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடியதையத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

maddunews