இன்று பாலையடி வாலவிக்னேஸ்வரருக்கு மகாகும்பாபிசேகம்!

அலையெறிகடலை ஆடையாய் உடுத்த இலங்காதீவின் கீழ்கரையதனில் மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநரின் தென்திசையதனில் 27கல்தொலையில்நெய்தலும் மருதமும் நிலவி எஞ்ஞான்றும் பல்வளம் பெருக்கும் காரேறுமூதூராம் காரைதீவு பழம்பெரும்பதியதனில் தொன்மையான ஆலயங்களில் பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயமும் ஒன்று.


முத்தமிழ்வித்தகன் சுவாமி விபுலானந்த அடிகளாரையும் சேவையின்சின்னமாம் சுவாமி நடராஜானந்த அடிகளாரையும் ஈன்று புறந்தந்த திருவிடம். அன்றியும் சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளும் துறவிகளும் நடமாடிய திருமண். இவ்வூரின் திரையெழுகடலின் மருங்கே வெண்மணற் பரப்பில் கிழக்குத்திசைநோக்கி எழுந்தருளியிருப்பவரே பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆவார்.

16ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எதிர்மன்னசிங்கன் ஆட்சிக்காலத்தில் கொங்குநாட்டிலிருந்து வைசியகுலத்து தாதன் என்பாரின் வருகையுடன் இவ்வாலயத்தின் வரலாறு ஆரம்பமாகிறது என ஆலயமுன்னாள் தர்மகர்த்தா வைசநன்மணி ச.வேற்பிள்ளை(இ.அதிபர்) குறிப்பிடுகிறார்.

எனினும் நிரந்தரமான ஆலயத்தின்தோற்றம் என்பது சுமார் 250ஆண்டுகளுக்கு முன்னரானது. 1815இல் இலங்கைமுழுவதும் ஆங்கிலேயர் ஆட்சி நிலவியகாலத்தில் ஓ கிறேடி எனும் வெள்ளைக்காரப்பிரபு காரைதீவின் தென்கோடியிலுள்ள கரடிடித்தோட்டம் என்றபிரதேசத்தை ஆட்சிசெய்ய அங்கிருந்த 150ஏக்கர் நிலப்பரப்பை காடழித்து தோட்டமாக்க சிந்தித்தான்.
அதன்படி காடழிப்புவேலைகள் பரவலாக இடம்பெற்றன. அதற்கு சாஸ்தி;ரி சிற்றம்பலம் பொன்னம்பலம் என்பார் கண்காணியாக பொறுப்பாக்கப்பட்டார். அவ்வேளையில் தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பாரிய பாலைமரமொன்று இருந்தது. அதனைத்தறிக்க முற்பட்டவேளையில் அனைவரும் அறிவுகெட்டுமூர்ச்சையாகினர். 

ஊரிலே ஒரே பரபரப்பு.  வெள்ளைக்காரத்துரையும் அதிர்ச்சியடைந்தான்.மக்கள் பீதியடைந்தார்கள். ஊரவரின் ஆலோசனைப்படி அங்கு கிராமியவழிபாடுமுறைப்படி பேயாட்டம் ஆடி பலிகொடுக்கப்பட்டது. அதன்பின்னர் தறிக்கலாம் என வாக்குக்கிடைத்தது.
பின்பு அப்பாரிய மரத்தை தறித்தபோது அதன்பொந்திலிருந்து பிள்ளையார் சிலையொன்று வெளிப்பட்டது. முன்னோர்கள் இதனை வழிபட்டிருக்கலாம் என்றெண்ணி அவர்கள் அவ்விடத்திலேயே ஒரு கொட்டிலை அமைத்து வழிபடத்தொடங்கினர். பொன்னம்பலம் தனதுகாணியினை வழங்க  துரையும் பூரணமாக உதவினார்.அதன்காரணமாக ஒரு கர்ப்பக்கிரகமும் இரண்டு மண்டபங்களும் கட்டப்பட்டு மக்கள் வழிபடத்தொடங்கினர்.
இந்தியாவிலிருந்துவந்த தென்மதுரைவேளாளர் குடியினரே இவ்வாலயத்தை பராமரிக்கும் உரிமையுடையவர்கள் என்று சாசனத்தில்குறிபபிடப்பட்டுள்ளது. 05பாகைகளுடனான இக்குடிவழியினரே இன்;றும் ஆலயத்தை இ.அதிபர் இ.தங்கராசா தலைமையில் வழிநடாத்திவருகின்றனர்.

வித்துவான் புலோலியுர் பொ. வைத்திலிங்க தேசிகர் ஆலயத்தின் நிரந்தர அர்ச்சகராக இருந்தவர். இவர்தான் இன்று உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் என்ற மகுடத்துடன் தன்னிகரில்லா விளங்கும் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தருக்கு ஆரம்பக்கல்வி ஊட்டியவர். அவிட்ட அத்திவாரமே சுவாமிகள் தன்னிகரில்லா கல்விமானாகவிளங்கக்காரணமாயிற்று.
பிற்காலத்தில் யாழ்.மண்ணைச்சேர்ந்த பூரணபிராமண வம்சத்தில்வந்த சிவஸ்ரீ இ.சண்முகரெத்தினக்குருக்கள் ஆலயபிரதமகுருவாக பலகாலமிருந்து இறைபணியாற்றினார். பின்னர் அவரதுவழித்தோன்றலான  மூத்தபுதல்வன்  பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக. மகேஸ்வரக்குருக்கள் மிகவும் சிறப்பாக கிரியைகளை நடாத்திவருகிறார்.

கும்பாபிசேக வரலாறு!
முதன்முதலில் 1904இல் கும்பாபிசேகம் நடைபெற்றது. 40வருடங்களுக்குப்பின் 1944இல்  மறுகும்பாபிசேகம் நடைபெற்றது. அதன்பின்னர் ஆலயத்திற்னெ இராசகோபுரம் நிருமாணிக்கப்பட்டு சுற்றுமதில் அமைக்கப்பட்டு 1972இல் மகா கும்பாபிசேம் மீண்டும் நடைபெற்றது.


இவ்வாறு அழகுற சிறப்பாக அருள்பாலித்துவந்த இவ்வாலயம் சமயப்பற்றற்ற இனவாதிகளினால் 1985இல் காரைதீவு கபளீகரம் செய்யப்பட்டபோது அழிக்கப்பட்டது.
பின்பு சந்தானத்தாரினதும் ஊராரின் உதவியுடனும் மீண்டும் 19.08.1994இல் கும்பாபிசேகம் நடைபெற்றது. அஞ்ஞான்று ச.வேற்பிள்ளை இ.வினாயகமூர்த்தி சி.தட்சணாமூர்த்தி செ.சந்திரமோகன் த.சகாதேவராஜா ச.கணபதிப்பிள்ளை சா.மாணிக்கவாசகர் தெ.செல்லத்துரை ஆகிய சந்தானத்து அறிஞர்களைக்கொண்ட மலர்க்குழுவால் சிறப்புமலரொன்றும் பலவரலாற்றுத்தகவல்களுடன் வெளியிடப்பட்டது.

அதன்பின்பு பத்துவருடங்களின் பின்பு 2004.05.02 ஆம் திகதியன்று கும்பாபிசேகம் இடம்பெற்றது. சுனாமியில் இவ்வாலயம் பாதிக்கப்பட்டிருந்தது. பின்பு பலமுயற்சிகள் ஆலயத்தலைவர் இ.தங்கராசா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு 16வருடங்களின்பின்னர் இன்று வனப்புற ஆலயம் பொலிப்புடன் மிகச்சிறப்பாக இன்று (2020.02.07- வெள்ளிக்கிழமை) ஆறாவது மகாகும்பாபிசேகம் நடைபெறுகிறது.

இன்றைய மகாகும்பாபிசேகம் விநாயகப்பெருமான் அருளால் சிறப்புற வாழ்த்துகிறோம்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா (காரைதீவு  நிருபர்)
ஆலயத்தின் இரண்டாம்பாகைப் பிரதி