மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்ககளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலைக்கான விசாரணைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படல் வேண்டுமென தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களின் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று(04) மட்டக்களப்பில் இடம் பெற்றது.

இதன் போது இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் எனவும் தெரிவித்த ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டு பிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கருகில் ஒன்று சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் பேரணியாக மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவை சென்றடைந்தனர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்ட மொன்றிலும் ஈடுப்ப்பட்டனர்.

கையில் சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவிணர்கள் இதுவரை எங்கே என கோசம் எழுப்பினர்.

இனப்படுகொலைக்கான விசாரணைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படல் வேண்டுமென வலியுறுத்தியதுடன் தமிழர்களின் தேசங்கள் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.