தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மேலும் 04 உறுப்பினர்களின் உள்ளுராட்சி உறுப்புரிமை பறிப்பதற்கான நடவடிக்கை

0
292

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்குப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலரை அப்பதவிகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான யூ.பிலிப், இரா.அசோக் மற்றும் மண்முனைப் பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான தோ.சுரேந்தர், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான சி.சிவாநந்தன் ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி உறுப்பினர்கள், கட்சி ஒழுக்கவிதிகளை மீறிச் செயற்பட்டமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிக்கும் நபர்களுடன் இணைந்து கட்சிக்கு எதிராகச் செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பலதடவைகள் இவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதுடன், அறிவுரை வழங்கியதன் பின்னர் அவர்கள் ஏற்கனவே நடந்துகொண்டதை விட அதிகரித்த முறையில் கட்சிக்கு எதிரானவர்களுடன் சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைகளின் வேண்டுகோள்கள் மற்றும் அனுமதியின் அடிப்படையில் இவர்கள் மீது இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல், புதிய உறுப்பினர்களை பிரேரிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்குப் பிரதேசசபை உறுப்பினர் பா.முரளிதரன் என்பவர் இவ்வாறு கட்சி ஒழுக்கவிதிகளை மீறிச் செயற்பட்டமை தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமையும் அவர் சார்பில் புதிய உறுப்பினர் நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.