அச்சத்தில் உறைந்துள்ள மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச மக்கள்

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெடியமடு, களிக்குளம் கிராமங்களுக்குள் கடந்த பல நாட்களாக காட்டு யானைகள் ஊடுருவி நடமாடித் திரிவதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவித்தனர்.

கற்புதானை, மதுரங்கண்டடிச்சேனை, நெடியமடு களிக்குளம், ஒளிமடு போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்கள் இந்த அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை சில யானைகள் ஏறி மிதித்துக் கொண்டு விவசாய நிலங்களுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளன.

இதனால் இங்குள்ள விவசாய நிலங்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பதில் இவர்களுக்கு பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

இது பெரும்போக நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய்கைக் காலம் என்பதால் காட்டு யானைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவது இம்மக்களுக்கு உயிர்ப்போராட்டமாக உள்ளது.

காட்டுயானைத் தெல்லையால் தமது தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தமது விவசாய நிலப் பகுதியை அண்டியுள்ள காட்டுப் பகுதியில் தங்கியிருக்கும் யானைகளை வெளி இடங்களுக்கு அப்புறப்படுத்தி தருமாறும் இம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.