பகவான் ஸ்ரீரமண மகரிஷிகள் ஜயந்தி மஹோற்சவ விழா மட்டக்களப்பு கல்லடியில் நடைபெறும்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷிகள் அவர்களின் 140ஆம் ஆண்;டு ஜயந்தி மஹோற்சவ விழா எதிர்வரும் 11.01.2020 அன்று முற்பகல் 9.00 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஐh சரவணபவான் கலந்து கொள்வார். சிறப்பு அதிதியாக உதவிமாவட்ட செயலாளர் .ஏ.நவேஸ்வரன் கௌரவ அதிதியாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கி.குணநாயகம்; விசேட அதிதியாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மாகாணப் பணிமனை பிரதிநிதி ஏ.ரவீந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பிப்பர்.
இந்த ஜெயந்திவிழாவின் சமயக்கிரிகைகளை கல்லடி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு கிரியாதிலக சிவஸ்ரீ பால சதீஸ்வரக்குருக்கள் நடத்துவார்.
தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பிரதம பூசகர் வண.சக்தி.கே குமாரதாசன் ஆசியுரை நிகழ்த்துவார்.விழாவின் இறுதி நாளில் அன்னதானம் இடம் பெறுமென ஸ்ரீ ரமண மகரிஷி அறப்பனி மன்றத்தின் இலங்கைக் கிளை தலைவர் மா. செல்லத்துரை தெரிவித்தார்.
மனித வாழ்வை உயர்வடையச் செய்யும் பல்வேறு அற்புத செயல்களையும், ஆன்மிக கருத்துகளையும் பரப்பி, முக்தியடைந்த மகான்களுள், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியும் ஒருவர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், டிச.,30, 1879ல் சுந்தரம் அய்யர், அழகம்மை தம்பதியினரின் இரண்டாவது மகனாக அவதரித்தார் ரமண மகரிஷி. அழகம்மை பிரசவ வலியால் துடித்தபோது, அவ்வழியே சென்ற கண் தெரியாத ஒரு மூதாட்டியை, உதவிக்கு அழைத்தார் சுந்தரம் அய்யர். அந்த மூதாட்டியோ, ‘எனக்கு ரெண்டு கண்ணும் தெரியாது; இருப்பினும் முடிந்தவரை பாக்கிறேன்…’ என்று சொல்லி, அழகம்மையின் அறைக்குள் சென்றார்.
அறைக்குள் நுழைந்ததும், அந்த மூதாட்டியின் விழித் திரையில், ஒரு அகல் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போல் நிழலாடியது. நேரம் ஆக ஆக விளக்கின் வெளிச்சம் பிரகாசமாகிக் கொண்டே வந்தது. பிரசவத்தை கவனிப்பதை விட்டு, விளக்கை கவனித்தார் மூதாட்டி. சற்று நேரத்தில் அறை முழுவதும், அகல் விளக்குகளால் நிறைந்து பிரகாசமான வெளிச்சம் தென்பட்டது.
இவ்வெளிச்சத்தில் மூதாட்டிக்கு பார்வையும் தெரிந்தது. அந்த பிரகாசமான வெளிச்சத்திலேயே, குழந்தையாக அவதரித்தார் ரமணர்.
குழந்தையை சுந்தரம் அய்யரிடம் கொடுத்த மூதாட்டி, நடந்தவற்றைக் கூறினார். ஆனால், அவர் அதை நம்பவில்லை. குழந்தையை வாங்கிப் பார்த்த சுந்தரம் அய்யர், குழந்தையை தாய் அருகில் வைத்து விட்டு, மூதாட்டியை தேடிய போது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லை. எங்கிருந்தோ வந்த மூதாட்டி, சில நொடிகளிலேயே மறைந்து விட்டார். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த அக்குழந்தைக்கு, வெங்கட் ராமய்யர் என்று பெயரிட்டனர் பெற்றோர்.
திருச்சுழி சேதுபதி துவக்கப் பள்ளியில், 1891ல் ஆரம்பக் கல்வியை துவங்கிய இவர், 1892 முதல், 1896 வரை மதுரை யு.ஜி.பள்ளியில் படித்தார். பள்ளிப் பருவத்தில் வெங்கட்ராமனுக்கு, அபார ஞாபக சக்தி இருந்தாலும், படிப்பில் நாட்டமில்லை.
அப்போது, வெங்கட்ராமனுக்கு, 16 வயது; மதுரையில் தன் சித்தப்பா வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள், அவருக்கு மரண பயம் தோன்றியது. தான் இறக்கப் போகிறோம் என்ற எண்ணம் தீவிரம் அடையவே, அவர் அதை எதிர்கொள்ளும் வகையில், உடம்பை நீட்டி படுத்து கண்களையும், வாயையும் மூடி, எந்த ஒரு சலனமும் இல்லாமல் பிணம் போல் படுத்து, ‘என் உடம்பு இறந்து விட்டது; உடலை மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்கின்றனர். ஆனாலும், எனக்குள்ளே, நான் நான் என்று ஏதோ ஒன்று ஒலித்துக் கொண்டே இருக்கிறதே… அப்படியென்றால் இறப்பது உடம்பே அன்றி, நான் என்று விளங்கிக் கொண்டிருக்கும் ஆத்மா அல்ல…’ என்று எண்ணியவருக்கு, ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்பது புலப்பட்டது.
அன்று அவருக்கு மரண பயம் ஒழிந்து, ஜீவன் முக்தராக, பூரண ஞானியாக மலர்ந்தார். திருவண்ணாமலைக்கு வந்தவர், அங்கு பல ஆண்டுகளாக தியானத்தில் ஆழ்ந்தார். அவரது தாய், அவரை பலமுறை வீட்டிற்கு அழைத்தும், வர மறுத்து விட்டார். இதையடுத்து, அழகம்மையும் திருவண்ணாமலை சென்று, ரமணருடன் தங்கி ஆன்மிக பணியில் ஈடுபட்டார். விருப்பாச்சி குகையிலும், கந்த ஆசிரமத்திலும் பக்தர்களுக்கு ஓயாது உணவு படைத்தார். அவரது தாய், மே 19, 1922ல் முக்தியடைந்தார்.
அதையடுத்து, தன் அன்னைக்கு, மலையடிவாரத்தில், பாலி தீர்த்தக் கரையில், ஒரு அழகிய ஆலயம் அமைத்தார் ரமணர். அது, இன்று மாபெரும் ஸ்ரீரமண ஆசிரமமாக வளர்ந்துள்ளது. பகவான், பெரும்பாலும் மவுனத்தாலேயே உபதேசம் செய்தார். எல்லா உயிர்களிடத்திலும் சமமான அன்பை காட்டினார். அதற்கு உதாரணமாக, லட்சுமி என்ற பசு, காக்கை, ஜக்கி என்ற நாய் மற்றும் மான் ஆகியவற்றிற்கு சமாதியும் வைத்தார்.
‘மனம் என்பது எண்ணங்களின் குவியல். எண்ணங்கள் இல்லாத போது, மனம் என்ற ஒன்று இல்லை. எண்ணங்கள் அழிய, மனம் தன் பிறப்பிடமான ஆத்மாவில் அடங்கி, ஒடுங்கி விடும். பக்தி வழியில், தான் வணங்கும் இறைவனையோ அல்லது குருவையோ முழுமையாக சரணடைந்து விட்டால், மனம் ஒடுங்கி, எண்ணங்கள் அழிந்து, ஆன்ம சுகம் பெறலாம்…’ என்பது பகவானின் அருள்வாக்கு.
செப்., 1896ல் திருவண்ணாமலைக்கு வந்த ரமணர், 54 ஆண்டுகள் அங்கேயே தங்கி, பக்தர்களுக்கு பார்வை மூலமே அருள்பாலித்து வந்தார்.
இவரிடம் நட்புறவாக இருந்த கணபதி முனிவர், இவரின் ஞான ஆற்றலைக் கண்டு வியந்து, ‘ரமண மகரிஷி’ என அழைக்க, அந்தப் பெயரே நிலை பெற்று விட்டது. ரமண மகரிஷி, ஏப்., 14, 1956ல் ஜீவ சமாதி அடைந்தார்.
அவரது ஜெயந்தி விழா, டிச.,30 என்றாலும், ஜென்ம நட்சத்திரம், புனர்பூசம் என்பதால், ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி என, மூன்று மாதங்களில் எந்த மாதம் புனர்பூசம் வருமோ அன்று, அவரது ஜெயந்தி கொண்டாடப் படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜெயந்தி விழா, ஆங்கில மாதப்படி, டிச.,30 அன்றும், தமிழ் மாதம் புனர்பூசம் நட்சத்திர நாளான ஜன., 6லும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அவரது பிறந்த இடத்தில், சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இரவு, பகவானின் திருவுருவப் படம், சப்பரத்தில் வைத்து வீதியுலா வரும். அவரது ஜீவ சமாதி உள்ள திருவண்ணாமலையில், பெரிய அளவிலான       விழா நடைபெறும். இதற்காக, நாடு முழுவதிலும் உள்ள அவரது பக்தர்கள் திருவண்ணாமலையில் வந்து குவிவர்.
தனக்கென்று யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாமல், கடைசி வரை தனக்குத் தானே குருவாக இருந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தவர் பகவான் ரமண மகரிஷி. விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் அவர் அவதரித்த தலம் போற்றிப் பாதுகாக்கப்பட்டு, தற்போது, தமிழக அரசின் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மன அமைதி பெற்று, மகானின் அருள் பெற, ஒருமுறை இத்தலத்திற்கு வந்து செல்லுங்களேன்.