வதைபட்டு, வாழ்விற்காகப் போராடும் தமிழினம் வாழ்வுபெற போராடிய மனிதவுரிமைக் காவலன் அமரர் ஜோசப் பரராஜசிங்கம்

வே. தவராஜா,

“என் அன்புக்குரிய தமிழ் மக்களே! உங்களுக்கு எந்த இடத்தில், எப்போதெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதற்கான நீதி கிடைக்கப் போராடுகிறேன். உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் உலக நாடுகள் அறியும் வண்ணம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறேன். இப்பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன்.”

அவ்வாறு தமிழ் மக்களின் மனிதவுரிமைக் காவலனாகவும் தமிழினத்தின் உரிமைக்காகவும் பல ஆண்டுகளாக எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உழைத்த உன்னதம் நிறைந்த தலைவன் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள்.

அந்தக் குரல் ஓய்ந்து இன்றுடன் பதினான்கு ஆண்டுகளாகின்றன. நத்தார் பெருவிழா நெருங்குகின்ற போதெல்லாம் அந்தநாள் நினைவுக்கு வருகின்றது. அந்தக் கொடூரம் காட்சியாகக் கண்ணுக்குள் விரிகின்றது.

2005ம் ஆண்டு மார்கழித் திங்கள் 25ம் நாள், மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயம், நடுநிசி நேரம், நத்தார் நல்லாராதனைகள் நடைபெறுகின்றன. மனித மீட்புக்காக மனுவுரு எடுத்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா வழிபாட்டில் பயபக்தியுடன் மக்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆராதனைகள் நிறைவு பெறுகின்றன. அப்பம் பகிரப்படுகின்றது. கரங்களிலேந்தி அந்த அப்பத்தினை உண்பதற்காக கரத்தினை உயர்த்திய வேளையில் பதுங்கியிருந்த பாதகர்கள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்க்கிறார்கள். தேவனின் திருவடியில் குருதி பாய்கிறது. தேவன் சந்நிதானத்தில் ஐயா ஜோசப் பரராஜசிங்கம் குற்றுயிராய் வீழ்கிறார். கூடவே குண்டடிபட்டு அவரது அன்புத் துணைவியார் ஜோசப் சுகுணம் அவர்களும் கூடவே வீழ்கிறார். வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வேளையில் ஐயா ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் ஆவண்டவருக்குள் ஐக்கியமாகிறார். அவரது மனைவியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ஆமாம்! சாய்ந்தது ஒரு சரித்திரம்! சர்வதேசமே அதிர்ச்சியில் உறைந்தது! தமிழர் தேசம் துயரத்தில் தோய்ந்தது!

ஏன் அவரைக் கொன்று தீர்த்தார்கள்? வதைபட்டு, வாழ்விற்காகப் போராடும் தமிழினம் வாழ்வுபெற அவர் போராடினார். அந்தப் பாதகத்தைப் புரிந்தவர்களுக்கு அது பாதகமாய்த் தெரிந்தது. நிலைகுலைந்த மக்களின் நீதிக்காகப் போராடிய தலைவனின் கொலைக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ தமிழ்த் தேசிய வரலாற்றில் அவரது தியாகம் பெரும் அத்தியாயமாகப் பதிவாகிப் போனது.

1934ம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 26ம் நாள் இந்த மண்ணில் அவர் பிறந்தார். பள்ளிக் காலத்திலே தமிழ்த் தேசியப் பற்று அவர் நெஞ்சிலே கருக்கொண்டது. கருக்கொண்ட உணர்வு உருக்கொண்டு அவரது 18 ஆவது அகவையில் அவரைத் தந்தை செல்வாவின் பாசறையில் கொண்டு சேர்த்தது.
அப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி மூன்றாவது ஆண்டில் கால்பதித்த காலம். மட்டக்களப்பில் அதனைக் காலூன்ற வைக்க அவர் அயராதுழைத்தார். தந்தை செல்வா திறந்த அத்தனை அறவழிப் போர்க் களங்களிலும் களமாடி மகிழ்ந்தார்.

1956ம் ஆண்டு தனிச் சிங்களமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நேரம் தந்தை செல்வா அதனை எதிர்த்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை அறிவித்தார்.

அன்றைய நாள் ஐயா ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திருமணம் முதல் நாளன்று ஐயா தன் மனைவியுடன் போர்க்களம் புகுந்தார். அவர் கொண்டிருந்த தமிழ்த் தேசிய பற்றுக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். அந்த சுபவேளையில் கணவனோடு களமாடியதனாலோ என்னவோ கடைசிவரை அவரது அரசியல் வாழ்விலும் தக்க துணையாயிருந்தார்.

1972ம் ஆண்டு தமிழ்த் தேசிய வரலாற்றிலொரு திருப்புமுனை தன்னுடைய ஆறு அம்சக் கோரிக்கைகளும் சிறிமாவோ அம்மையாரின் அரசியல் யாப்பு நிர்ணய சபையால் நிராகரிக்கப்பட்டு தந்தை செல்வா அதிலிருந்து வெளியேறி தன் பாராளுமன்றப் பதவியைத் துறந்த நேரம்.

தமிழ்த் தேசிய உணர்வு கொழுந்து விட்டெரிந்த காலம். தமிழ் இளைஞர்கள் தந்தை செல்வா அணியில் அலையலையாகத் திரண்டனர். மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் பேரவையை ஏற்படுத்தி அதன் தலைவரானார் ஐயா ஜோசப் பரராஜசிங்கம்.

தந்தை மூட்டிய அரசியல் தீயின் வெக்கை தாங்க முடியாத அப்போதைய சிறிமாவோ அவர்களின் அரசியல் அதிகாரி மட்டக்களப்புக் கச்சேரியில் படவரைஞராக அரச பதவி வகித்த ஐயா ஜோசப் அவர்களை நுவரெலியா மாவட்டத்திற்குத் தூக்கி எறிந்தார்.

ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோ அப்பதவியைத் தூக்கியெறிந்து முழுநேர அரசியலில் தீவிரமானார்.

தமிழர்களையெல்லாம் ஒன்று சேர்த்து தந்தை செல்வா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியெனும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். தீவிரமானது அகிம்சைப்போர். அந்த வேளையில் துயரமானது தந்தையின் இழப்பு.

யாருமே எதிர்பார்த்திராத ஒரு நிலையில் தமிழர் அரசியல் வேறு திசையெடுத்தது அகிம்சைப்போர் ஆயுதப் போரானது. சொல்ல முடியாத இழப்புக்களால் தமிழர் வாழ்வு துயரம் நிறைந்தது.

கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலையென பல படுகொலைகள் அடுத்தடுத்து நிகழ்ந்த வண்ணமிருந்தன.

அத்தனை அநியாயங்களையும் அந்திய நாடுகள் அறிய வைத்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினை இங்கு வரவழைத்து தன்னில்லத்திலேயே முதலாவது கூட்டத்தினை நடாத்தினார்.

அவரது ஓயாத ஒலிப்பினால் கொக்கட்டிச்சோலை படுகொலையை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இவையத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல் மத்திய முகாம், நமது எல்லைப் பகுதி அங்கு கோணேஸ்வரி என்ற தமிழ்ப் பெண் விபரிக்க முடியாத கொடூரத்திற்கு உள்ளானாள். மனிதவுலகம் மன்னிக்க முடியாத கொடூரத்தை இழைத்ததோடல்லாமல் அந்தப் பெண்ணைக் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். இந்தச் செய்தியறிந்து சீற்றம் கொண்டார். நாலா திசையெங்கும் அறிவித்தார். அதன் நிமிர்த்தம் அந்த விசாரணை நடைபெற்ற கல்முனை நீதிமன்ற சாட்சிக் கூண்டில் அவர் மண்ணுக்கு விடைகொடுக்கும் வரை ஏறியிறங்கினார்.

1989இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டாலும் இடையிலேற்பட்ட வெற்றிடத்தில் அவர் தெரிவானார்.

அவர் தொடர்ந்த அளப்பரிய சேவையினால் 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மிக அதிகப்படியான வாக்குகளால் தெரிவானார். தன்னுயிரை ஈகம் செய்யும் வரை பாராளுமன்றப் பிரதிநிதியாகவிருந்து சேவையாற்றினார்.

தந்தை செல்வா அவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவராகப் பணியாற்றியதுடன், பாராளுமன்றத்தில் அக்கட்சியின் பிரதம கொறடாவாகவும் சேவையாற்றினார். மூன்று மொழிகளிலும் பரீட்சயமிக்கவராய் மொழி ஆளுமை கொண்டு விளங்கினார் அவர் பேச்சை முழுப் பாராளுமன்றமே அவதானமாகக் கேட்டது. அனைவரிடத்தும் மிக்க மரியாதை கொண்டவராகவே விளங்கினார். அவரது இறுதி நிகழ்வு அதற்கான சான்றெனலாம்.

அவரொரு சிறந்த பத்திரிகையாளர். சுகுனம் ஜோசப் என்ற பெயரில் அப்போதியங்கிய தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் பத்திகள் புனைந்தார். ஆய்வுகள் நிறைந்த அவரது கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அத்தோடல்லாமல் கிழக்கிலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் நிறுவி அதன் தலைவராக இதழியல் சேவைக்குப் பெரும் பங்காற்றினார். 71 ஆண்டுகள் இந்த மண்ணில் தமிழர்க்காய் வாழ்ந்து அந்த மண்ணைத் தன் குருதியால் சிவப்பாக்கி வீழ்ந்தார்.

நெருநல் உள ஒருவன் இன்றில்லை என்று மட்டக்களப்பு கவலையோடு வாழ்கிறது.

மீண்டும் சொல்கிறேன்
சாய்ந்தது ஒரு சரித்திரம் சாகாவரம் பெற்றது வாழ்கிறது.

வே. தவராஜா,
இல. 35, ஜயந்தி வீதி,
மட்டக்களப்பு
077 0070617