மட்டு.மேற்கு கல்வி வலயத்திலிருந்து வெளியேறும் ஆசிரியர்கள் : வலயத்தை நோக்கி வருவதற்கு தயங்குவது ஏன்?

-படுவான் பாலகன்-

கிழக்கு மாகாணத்தில் மிகவும் ஆளணிப்பற்றாக்குறையுடன் விளங்கும் வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளது. இவ்வலயம் உருவாக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை ஆரம்பப்பிரிவு, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பிரதான பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனால் இலங்கை அரசினால் வழங்கப்படும் இலவசக்கல்வியைக்கூட ஒழுங்காக பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவர்கள் உள்ளனர். வருடாந்தம் மாகாண சபையினால் இடமாற்றம் செய்யப்படுகின்ற போது, குறித்த வலயத்திலிருந்து அதிகளவானவர்கள் செல்வதும், மிகவும் குறைந்தளவானவர்களே இவ்வலயத்திற்கு வருகைதருவதும் வருடாந்தம் நடந்தேறி வருகின்றமை வேதனைக்குரியதே.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களில் 75வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஏனைய பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களே இப்பிரதேசங்களுக்கு வருகைதந்து கற்பித்தலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் தற்போது கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்திற்கு அமைய மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து வேறு வலயங்களுக்கு 128பேர் இடமாற்றம் பெற்று செல்கின்றனர். ஆனால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு வெறுமனே 3(மூன்று) ஆசிரியர்கள் மாத்திரமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலை மிகவும் பாரதூரமானது, 128பேரின் இடைவெளிகளை வெறும் மூன்று பேரினால் நிரப்பிவிட முடியாது.

ஏற்கனவே ஆரம்பிக்கல்விகூட இன்றி பல மாணவர்கள் எழுத, வாசிக்க தெரியாதவர்களாகவும், கணிதம், விஞ்ஞானப்பாடங்களுக்கு ஆசிரியர் இன்மையினால் உரிய சித்திகளை பெறமுடியாது, உயர்தரம் கற்க தகுதியற்றவர்களாக சென்று கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது. இதனால் அரச வேலைவாய்ப்பைக்கூட பெறமுடியாதவர்களாக உள்ளனர்.

கடந்த முப்பது வருட யுத்தத்தினால் பலவற்றினை இழந்து நிற்கதியாகி நிற்கின்ற படுவான்கரை மக்கள் கல்வித்துறையிலும் உயிர்த்தெழ முடியாது போனால், தற்போதைய யுகத்திற்கு முகம் கொடுக்க முடியாதவர்களாக இன்னமும் தட்டிகழிக்கும் நிலையையே அடைய வேண்டியேற்படும்.
படுவான்கரைப்பிரதேசத்தில் ஆசிரியர் ஆளணி இன்மையினால், அதனை கட்டியெழுப்பும் வரை, ஏனைய பிரதேசத்து ஆசிரியர்களை இன்முகத்துடன் வரவேற்கும் பாங்கினை கொண்டிருக்க வேண்டிய, அவர்களுக்கான சலுகைகளையும், ஆதரவுகளையும் வழங்க வேண்டிய தேவையிருக்கின்றது. எட்டு வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர்கள் என்றவகையில், தங்களுக்கு விரும்பிய வலயங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்கின்றமையை தடுக்க முடியாது. அவர்கள் செய்த காலசேவையை பாராட்டியே ஆகவேண்டும். ஆனாபோதிலும், அவர்களை தக்கவைப்பதற்கான ஏற்பாடுகளை உளரீதியாக ஏற்படுத்த மட்டக்களப்பு மேற்கு சமூகமும் தவறிவருகின்றதா? என்ற வினாவும் எழுகின்றது. சேவை செய்தவர்கள் செல்லுகின்றனர் அதுஒருபுறமிருக்க, இன்னொரு குழுவினர் சேவை செய்வதற்கு வராமல் தயங்கி நிற்கின்றனரா? என்பதைதான் வெறும் மூன்று ஆசிரியர்கள் இவ்வலயத்திற்கு இடமாற்றத்திற்காக விண்ணபித்தமையில் இருந்து நோக்கவேண்டியிருக்கின்றது. அதேவேளை மட்டக்களப்பு மேற்கு சமூகத்திற்கு சேவை செய்யக்கூடாதென நினைக்கின்றனரா?, அல்லது வேறு ஏதும் காரணங்கள் உண்டா? என்பது பற்றி சிந்திக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.

மட்டக்களப்பு மேற்கு சமூகத்தினர் கல்வி ரீதியில் விழிப்படைய வேண்டிய தேவையும் இருக்கின்றது. வளர்ந்துவரும் உலகில் இன்னமும், தாழ்த்தப்படும் சமூகமாக மாற்றப்படுகின்றவேளை பாராமுகமாகவிருந்தால், நமது எதிர்காலத்தினையே அழித்தவர்கள் என்ற நிலையினை அனைவரும் அடைய வேண்டியேற்படும்.
சுயநலங்களுக்காக செயற்படுவதை விடுத்து பொதுநலத்துடன் செயற்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது. இடமாற்றம் செய்யப்படுவது அது தொடர்பிலான கொள்கைகளின் அடிப்படையில், அதுஅவ்வாறிருக்க, இவ்வலயத்தில் இருந்து செல்லும் ஆசிரியர்களின் மனதில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இருந்து இன்னும் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தினை உண்டுபண்ணுவதற்கான முயற்சிகளை உடனடியாக மட்டக்களப்பு மேற்கு சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள், கல்விசார் உத்தியோகத்தர்கள் சிந்திக்க வேண்டும்.

பெரும்நிலப்பகுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பகுதியிருந்தும், அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாகவும், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாவும் செயற்பட்டுக்கொண்டிருந்தும், எத்தனை தொண்டு நிறுவனங்கள், சமயத்தலங்கள், கல்வி அமைப்புக்கள் இருந்தும் இப்பகுதியின் கல்வி நிலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படுகின்றனரா? என்கின்ற எண்ணமும் தோன்றி நிற்கின்றது. பிரதேசத்தில் கல்விக்கான ஆசிரியர்கள் இல்லாமல் சென்றால் பாதிக்கப்படுவது, ஆசிரியர், அதிபர், ஆசிரிய ஆலோசகர்கள், கல்வி அதிகாரிகள் அல்ல. இப்பிரதேசத்தில் உள்ள சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே. எனவே இதுதொடர்பில் உடனடியாக மட்டக்களப்பு மேற்கு சமூகம் விழித்தெழ வேண்டும்.

ஒவ்வொருவருக்குள்ளிருக்கும் கருத்து முரண்பாடுகளையும், சுயநலப்போக்குகளையும் புறந்தள்ளி, நமது பிரதேசத்தினை நாமே கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலையெண்ணத்தைக் கொண்டு உடனடியாக ஆசிரியர்களின் மனங்களை அறிந்து, அவர்களை செல்லாமல் தக்கவைப்பதற்கான பணியினையோ, வேறு வலயங்களில் இருந்து இவ்வலயத்திற்கு ஆசிரியர்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளையோ உடன் செய்ய வேண்டும். இல்லாது போனால், படுவான்கரையில் உள்ள மாணவர்களின் கல்வியை குழிதோண்டி புதைத்தவர்கள் என்ற வரையறைக்குள் பலரும் அடங்குவதை தவிர்க்க முடியாது.