மண் தின்னிப் பாவிகளா?

மண் தின்னிப் பாவிகளா?

‘பேமிற்’ இல்லை யென்றவுடன்
எங்கடா இருந்து புறப்பட்டிங்க
வரிசை வரிசையா வாகனத்திலேற்றி
புதிசாப் பேரணி போறீங்களே

பேமிற் ரத்து என்பதுவே
பெருத்த அரசியல் நாடகமே
எம்மண்ணைப் பிடுங்க அவர்கள்
போட்ட திட்டமென்றறியோமா?

வெள்ளம் மண்ணை மறுத்ததனால்
வெந்த ஒப்பந்த கொள்ளையர்க்கு
கிழக்கு மண்ணத் தாறோமென்று
கொழும்புக்கு மண்ணை அள்ளி
ஓய்வு உறக்கமின்றி போறிங்களே
மண்ணே பெரும் வளமென்ற
அறிவே அற்ற பாவிகளா

சனியும் ஞாயிறுமேன்
இரவும் பகலும் கூட தடையல்ல
பாய்ந்து பாய்ந்து வலைவீசி
கள்ளமண் பிடித்த பொலிசாரெல்லாம்
பார்த்து கைகட்டி புன்னகைக்க
ஓய்வின்றி ஏத்தும் பாவிகளா
இனியென்ன கிடக்கு முழுவதுமாய்
வழிச்சி வழிச்சி ஏத்துங்கடா

வெயில் காயும் மேனியர் நாங்கள்
மழைகண்டு ஆனந்தித்து
வசந்தம் பாடி நீராடிய ஆற்றில்
மண்ணை வழிச்சி ஏத்தும் பாவிகளா
வாழ வழி பலவிருக்க நீங்க
வரமெடுத்தா பிறந்தீர் மண்ணள்ள

நாம் சிற்றில் புனைந்து மகிழ்வோடு
சிறு சோறாக்கிய முற்றத்து மண்ணும்
வெள்ள நீரிழுக்க அதையும்
கொள்ளைப் பிரியத்தோடள்ளி போறிங்களே
கருணையற்ற பாவிகளா?
இனி முற்றத்துக்கு மண்ணெடுக்க
நாம் எங்கு போவோம் சொல்வீர்களா?

மண்ணுக்காகப் போராடிய மண்ணில்
மண்ணை விற்கும் பாவிகளா
தியாகமும் சினமும் கொண்ட மண்ணே
தின்னுமும்மை விரைவில் பாருங்கடா

கிழக்கப்புடுங்கும் பாவிகளா
கிழக்கு மண் போகுது பாருங்கடா
மனிதத்தை நேசிக்கும் அன்பர்களே
மண்ணைக் காக்க எழுங்களேன்

-மாரிமகன்-