மட்டக்களப்பில் மக்களோடு மக்களாக ஶ்ரீநேசன் எம்.பி

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 10738 குடும்பங்களைச் சேர்ந்த 35756 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் இதில்  775 குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் 18 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெருமாவெளி மற்றும் இலுக்குப் பொத்தானை கிராமங்கள் வெள்ளத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டதோடு அக்கிராமங்களுக்குச் செல்லும் தரைவளிப் பாதையும் துண்டிக்கப்பட்டதால் அங்குள்ள மக்களிற்குத் தேவையான உணவு உட்பட அத்தியவசியப் பொருட்களை அனுப்புவதில் பெரும்சிரமத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

இந்நிலையில் படகு மற்றும் உளவு இயந்திரங்களின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசனால் குறித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் இடம்பெயர்ந்து வசிக்கும் மக்களுக்கான அத்தியவசியத் தேவைகளை நிவர்த்தி செய்ததோடு உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.

வெள்ள அனர்த்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாகவும் நலிவுற்றுள்ள தமக்கு பெரும் சிரமத்தின் மத்தியில் இத்தகைய உதவிகளை செய்து தந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

மேற்படி விஜயத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னனியின் உறுப்பினர்களும் பிரதேச இணைப்பாளர்களும் இணைந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.