தமிழ் தலைமைகள் இந்திய அரசுடனும், இலங்கை அரசுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் – இ.துரைரெத்தினம்

இலங்கையில் முதற்கட்டமாக 13வது திருத்தச்சட்டம் மாகாணசபை

முறைமையூடாக அமுல்படுத்தப்பட்டுள்ளதை தமிழ்த் தலைமைகள் ஏற்றுக் கொண்டு இதை முழுமையாக அமுல்படுத்த இந்திய அரசுடனும், இலங்கை அரசுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் எனமுன்னாள் கிழக்குமாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இன்று(06) வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

என்னைப் பொறுத்தவரையில் 1988ம், 2008, 2012 ஆண்டுகளில் மூன்று தடவைகளிலும் மாகாணசபையில் மக்கள் பிரதிநிதியாக இருந்தவன் என்ற அடிப்படையில் மாகாணசபை முறைமையை முதற்படியாக அமுல்படுத்துவதற்கான செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடவேண்டும். இது தொடர்பாக நல்ல சந்தர்ப்பசூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு இதில் உள்ள அமுல் படுத்தப்பட்டுள்ள விடயங்கள், அமுல்படுத்தப்படாத விடயங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து எதிர்வருகின்ற மாகாணசபையில் 13இல் உள்ள அமுல் படுத்தப்படாத விடயங்களை அமுல்படுத்த முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் முன்னுதாரணமாக செயற்படவேண்டும். இதில் இருந்து கொண்டு இனிமேல் தேவையான அதிகாரப்பங்கீட்டை கேட்பதற்கு மாகாணசபை முறைமை முன்னுதாரணமாக அமையும்.

பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் என்பது கையில் உள்ள விடயமாகும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு திருத்தச் சட்டமாகும். இவ் விடயத்தை அமுல்படுத்துவதற்கு எந்தத் தடையும் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. நாட்டிலுள்ள எல்லா மாகாணசபைகளும் ஓத்துழைப்பு வழங்கும். அபிவிருத்தி தொடர்பாகவும் சிறுபான்மையினரின் உரிமை தொடர்பாகவும் ஆரம்பக் கட்டத்தை பூர்த்தி செய்யமுடியும். கையில் உள்ளதை அமுல் படுத்துவதன் ஊடாகவே அடுத்தகட்டத்திற்கு நாங்கள் செல்லமுடியும்.

மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாகவரும் பிரதிநிதிகள் கடமைகளையும், பொறுப்புக்களையும் அமுல்படுத்தினால் மட்டுமே தமிழர்களுக்கான உரிமைகளை பெறமுடியும். அப்படி அல்லாமல் கடந்தகாலங்களைப் போல மாகாணசபை முறையிலுள்ள அதிகாரப்பங்கீட்டை அமுல்படுத்தாமல் பார்வையாளர்களாக இருப்போமேயானால் மக்கள் எங்களை நிராகரிப்பார்கள்.

எதிர்காலத்தில் உள்ளதை அமுல்படுத்துவதற்கு தமிழ்க்கட்சிகள் ஒருபுரிந்துணர்வுடன் கடந்தகாலத்தில் நல்ல விடயங்களுக்கு இணக்கப்பாடுகளுடன் நடந்துகொண்டதைப்போல் இந்தவிடயத்திலும் ஓரணி நின்று பதின்மூன்றை அமுல்படுத்த ஒன்றிணைவதே இன்றையகாலத்தின் தேவையும் என்றார்.