தமிழர்களை அசைக்கமுடியாது என்ற செய்தியை தேர்தல் கூறியுள்ளது – கோடீஸ்வரன்.

இந்தநாட்டில் மாறிமாறிவந்த பேரினவாத அரசுகள் தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றியே வந்துள்ளன. தமிழ்மக்களுக்காக எந்த பேரினவாதகட்சியும் குரல்கொடுக்கப்போவதுமில்லை. எனவே உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தமிழ்மக்களுக்காக குரல்கொடுக்கக்கூடிய ஒரேயொரு கட்சி எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரமே என்பதை ஒவ்வொரு தமிழனும் மனதில்வைத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் மல்வத்தையில் நடைபெற்ற புலமையாளர் கௌரவிப்புவிழாவில் பேசுகையில் தெரிவித்தார்.
மல்வத்தை அப்பிள் கல்வி சமுகமேம்பாட்டு அமைப்பினர் சம்மாந்துறைக்கோட்ட தமிழ்ப்பாடசாலைகளில் இம்முறை தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் 13பேரையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டுக் கௌரவிக்கும் நிகழ்வை நேற்று நடாத்தினர்.

அவ்விழா அப்பிள் அமைய தலைவர் கே.பாலகிருஸ்ணன் காந்தன் தலைமையில் புதுநகர் அ.த.க.பாடசாலையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விழாவில் கௌரவஅதிதிகளாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

அங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்:
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வடக்கு கிழக்குவாழ் தமிழ்மக்கள் ஒற்றுமையாக ஒன்றாக இருக்கிறார்கள் என்ற செய்தியை பேரினவாதக்கட்சிகளுக்கும் சர்வதேசத்திற்கும் ஆணித்தரமாக எடுத்துச்சொல்லியுள்ளனர்.
அதாவது அற்பசொற்ப சலுகைகளுக்காக அடிபணியாதவன் தமிழன் எதற்கும் சோரம்போகாதவன் தமிழன் என்ற செய்தியை சொல்லியுள்ளது.
வடக்குகிழக்குவாழ்தமிழ்மக்கள் 75வீதம் எதிராக வாக்களித்து எதிரணியை வெல்லவைத்தது. தேர்தல் முடிவை இலங்கைவரைபடத்தில் காட்டினாhர்கள். எதிரணியினர் அதிர்ந்துபோனார்கள்.
வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதியாகிய த.தே.கூட்டமைப்பு தமிழ்மக்களுக்காக தொடர்ந்தும் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் குரல்கொடுத்துக்கொண்டேயிருக்கும்.

ஜ.தே.கட்சி தமிழ்மக்களை ஏமாற்றியது!

கடந்த காலங்களில் ஜ.தே.கட்சி பல வாக்குறுதிகளை தமிழ்மக்களுக்கு வழங்கியது.ஆனால் எதனையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் விடயத்தில் எதுவுமே செய்யவில்லை.
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தொடர்பில் பலதடவைகள் உரிய தலைமைகள் அமைச்சர்களுடன் பேசினோம்.எதுவுமே நடக்கவில்லை.இறுதியாக முன்னாள் பிரதமர் ரணிலுடன் கதைத்தோம்.
ஒன்றுமே செய்யவில்லை. ஜ.தே.கட்சி தமிழ்மக்களை ஏமாற்றியுள்ளது.பொதுஜனபெரமுனவும் ஏமாற்றியது!

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொதுஜனபெரமுன ஸ்தாபகர் பசில்ராஜபக்ச கல்முனையில் வைத்து கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை 3நாட்களில் தரமுயர்த்துவோம் என்றார். பிரதமர் மஹிந்த மட்டக்களப்பில் வைத்து கல்முனையை தரமுயர்த்துவோம் என்றார்.
நடந்தது என்ன?இன்று தேர்தல் முடிந்து பலநாட்கள் கடந்துவிட்டன.  ஜ.தே.கட்சியைப்போலவே பொதுஜனபெரமுனவும் அம்பாறைத்தமிழ்மக்களை ஏமாற்றியுள்ளது.
எது எப்படியிருந்தாலும் நாம் த.தே.கூட்டமைப்பு தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டேயிருப்போம்.பிரிந்தால் இருப்பை இழக்கநேரிடும்!

எனவே அம்பாறை மாவட்டத்தமி;ழர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றாக த.தே.கூட்டமைப்புடன் பயணிப்போமானால் ஏதாவதைப் பெற்றுக்கொள்ளமுடியும். மாறாக பிரிந்துநின்றால் பல விளைவுகளையும் சவால்களையும் சந்திக்கவேண்டிவரும். தமிழ்மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.
நாம் பிரிந்துநின்று சுயேச்சையாகவோ ஜ.தே.க. மொட்டு என்று தேர்தலில் பிரிந்தோ கேட்டால் நிச்சயமாக பிரதிநிதித்துவத்தை இழக்கவேண்டிவரும். அதுமட்டுமல்ல பல அதாவுல்லாக்களையும் ஹரிசுகளையும் உருவாக்கநேரிடும். பிரிந்துநின்றால் எந்தவொரு தமிழ் எம்.பியும் வரப்போவதில்லை என்பதை மட்டும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
எனவே நிதானமாக சிந்திக்கவேண்டிய தருணம் இது. நாம் எமது உரிமை கிடைக்கும்வரை போராடுவோம். சமுகத்தை மாற்றும் கல்வி!

ஒரு சமுகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது கல்வியே.

உலகமாற்றங்களுக்கேற்ப எமது மாணவர்களும் பழகத்தயாராகவேண்டும். எனவே கல்வியை வழங்குவதில் இந்த  அப்பிள் கல்வி முன்னேற்ற அமைப்பு முனைப்பாக செயற்படுவதனைபாராட்டுகிறேன்.

மேலும்பின்தங்கிய பிரதேசங்களில் இவ்வாறு சாதனை படைத்த 13மாணவர்களும் மகா கெட்டிக்காரர்கள் எனலாம். வசதியீனங்களுக்கு மத்தியில் இவர்கள் இச்சாதனை படைத்திருப்பதையிட்டு வாழ்த்துகிறேன்.
கல்வியால் மாத்திரமே எமது சமுகத்தை முன்னேற்றலாம். இல்லாவிட்டால் சமகால புறக்கணிப்புகளும் அடக்குமுறைகளும் தொடரும்.
நாம் தமிழர்கள் தமிழையும் தமிழ்த்தேசியத்தையும் நேசிக்கவேண்டும். அப்போதுதான் எமது அடையாளத்தைப்பேணமுடியும்.  செம்மொழியாகிய தமிழ்மொழியை பேசுவதையிட்டு நாம் பெருமையடையலாம். என்றார்.
விழாவில் புதுநகர் பாடசாலை அதிபர் ந.சுந்தரநாதன் சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர் திருமதி கே. இன்பவல்லி உள்ளி;ட்ட பலரும் கலந்துகொண்டனர்.