மட்டு படுவான்கரையில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று தொடர்சசியாக பெய்த அடை மழை காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், வீதிகள் ஊடான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

குறித்த பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நாற்பதுவட்டை, மாவடிமுன்மாரி பகுதிகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. இதனால் இன்றைய தினம் பாடசாலைக்கு செல்ல முடியாது மாணவர்கள் பலர் திரும்பி சென்றனர்.

மேலும் குழுவினமடு வீதியின் ஊடாக வெள்ள நீர் இன்று காலையில் பாய்ந்து கொண்டிருந்தமையினால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்திலும் சிரமம் ஏற்பட்டிருந்தது.

மண்முனை மேற்கு செயலக பிரிவிற்குட்பட்ட சாமந்தியாறு பாலத்திற்கு முன் உள்ள வீதி உடைந்து வெள்ள நீர் பாய்ந்து கொண்டு இருக்கின்றமையினால் உப்புக்குளம், சில்லிக்கொடியாறு, பன்சேனை போன்ற பகுதிகளுக்கான இவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.