தகுதியானவர்களை அரச திணைக்களங்களில் நியமிக்க நடவடிக்கை : ஜனாதிபதி

அமைச்சுக்களுக்கான இராஜாங்க அமைச்சர்களையும், அரச திணைக்களங்களுக்கான அதிகாரிகளும் நியமிக்கப்படும் போது தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அரச திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைச்சர்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதை விடுத்து உரிய கல்வி தகைமைகளை உடைய வறுமை நிலையிலிருப்பவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் பதவி பிரமாண நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தாவது,

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். சுபீட்சமான நாட்டை உருவாக்குவதற்காக எமக்கு முதலாவது வாய்ப்பு கிடைத்தவுடன் பொதுத் தேர்தலை நடத்தி அரசாங்கம் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. அதற்காக நாம் மக்கள் ஆணையைக் கோரினோம்.

தற்போது தற்காலிக அரசாங்கமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் எம்மால் மக்களுக்கு வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் 16 பேர் என்ற வரையறுக்கப்பட்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே எமக்கு இந்த வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். எனவே அவற்றை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு எமக்கு காணப்படுகின்றது. அந்த பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பொது மக்களின் எதிர்பார்ப்பை நாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் காணப்பட்ட அரசியல் கலாசாரம் மீது பெரும்பாலான மக்கள் அதிருப்தியடைந்திருந்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

எனவே நாம் அந்த அரசியல் கலாசாரத்திலிருந்து வெளியேறி மக்கள் எதிர்பார்க்கும் புதிய யுகத்திற்கு செல்ல வேண்டும். எனவே இந்த மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றுவதற்கு உத்வேகத்துடன் செயற்படுவதோடு அதற்கு உங்கள் அனைவரதும் முழுமையான ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.

மட்டுப்படுத்தப்பட்ட புதிய அமைச்சுக்களுக்கான இராஜாங்க அமைச்சர்களை எதிர்வரும் நாட்களில் நியமிக்க தீர்மானித்திருக்கின்றோம்.

இவ்வாறு நியமிக்கப்படும் இராஜாங்க அமைச்சர்களை அவர்களது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அமைச்சர்கள் இடமளிப்பதோடு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.

காரணம் கடந்த அரசாங்கத்தில் இருந்த இராஜாங்க அமைச்சர்களுக்கு கையெழுத்திடுவதற்கு மாத்திரமே வாய்ப்பளிக்கப்பட்டது. வேறு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. இதுவே யதார்த்தமாகும். எனவே புதிய அமைச்சர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகக் கூடாது.

மேலும் சில அரச திணைக்களங்கள் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை இலாபம் பெறும் திணைக்களங்களாக மாற்றுவதோடு திறைசேரிக்கு சுமையற்றவையாகவும் உருவாக்க வேண்டும். நிச்சயமாக இதனை செய்ய முடியும். எனினும் இவற்றை நிறைவேற்றக் கூடிய தகுதியானவர்களே இராஜாங்க அமைச்சர்களாகவும், அரச அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட வேண்டும். எனவே இவர்கள் தேர்வு குழுவொன்றினூடாகவே தெரிவு செய்யப்பட வேண்டும். இவர்கள் குறித்த தேர்வு குழுவில் பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும் அரச திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைச்சர்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதை விடுத்து உரிய கல்வி தகைமைகளை உடைய வறுமை நிலையிலிருப்பவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்கள் முன்னெடுக்க வேண்டும்.

இந்த தற்காலிக அமைச்சரவையை நியமிப்பதில் பாரிய சிக்கல் காணப்பட்டது.

19 ஆம் அரசியலமைப்பு திருத்திற்கு ஏற்ப வரையறுக்கப்பட்ட 15 அமைச்சர்களை  கொண்ட அமைச்சரவையையே என்னால் நியமிக்கக் கூடியதாக இருந்தது.

எனினும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பே தற்போது எமக்கு பிரதானமாகக் காணப்படுகின்றமையால் எனக்கும் பிரதமருக்கும் நீங்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கோருகின்றேன்.

அதே போன்று எதிர்காலத்தில் நாம் முகங்கொடுக்கவிருக்கும் தேர்தலிலும் முழுமையான வெற்றி பெற வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.