மட்டக்களப்பு மாவட்டத்தினை இணைத்த இராம நாடகம்

— படுவான் பாலகன் —

25 வருடங்களுக்கு பிற்பாடு நமது ஊரில் அரங்கேற்றப்பட்ட கூத்தினைப் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி என்கிறார் சீனித்தம்பி. படுவானில்தான் தமிழர்களின் அடையாளங்கள், பண்பாடுகள் பேணிப்பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய கலைகளுக்கு முன்னுரிமையளித்து அதனை இளம் சந்ததியினருக்கு வழங்குகின்ற செயற்பாட்டினை முன்னெடுப்பவர்களும் இவர்கள்தான். நேரமின்றி, சமுக அக்கறையின்றி செயற்படும் பலர் மத்தியில், கலைக்காக தம்மை அர்பணித்து, வீட்டுப்பொறுப்புக்களையும் தாண்டி,  நேரம் ஒதுக்கி அதனை வளர்த்தெடுக்கின்ற, வரலாற்றைப் பேணுகின்ற கலைஞர்களையும், கலையார்வலர்களையும், செயற்பாட்டாளர்களையும் மறந்துவிடவும் முடியாது, பாராட்டாமல் இருந்துவிடவும் இயலாது.

பரந்துவிரிந்திருக்கும் படுவான் மண்ணில் ஆண்டுதோறும் கூத்துக்கள், கரகங்கள், வசந்தந் கூத்துக்கள்  என பலகலையும் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை சிறப்புக்குரியது. ஆலய உற்சவங்கள் தோறும் அவை ஆற்றுகை செய்யப்படுவதும் காணக்கூடியதே.

அண்மையில் நடைபெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது, கூத்துக்கலையைத் தவிர வேறு எந்தக் கலைகளும் வெளிவீதியை அலங்கரிக்கவில்லை. கூத்துக்களே ஆற்றுகை செய்யப்பட்டமை மிகவும் சிறப்புக்குரியதும் மகிழ்ச்சிக்குரியதுமாகும். ஆனாலும் இங்கு வேதனைப்பட வேண்டிய விடயமும் இருக்கத்தான் செய்கின்றது. இசைநிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்ற போது ஒன்றுசேருகின்ற இளைஞர், யுவதிகள் கூத்துக்கலையைப் பார்ப்பதற்கு ஒன்றுசேராமையே வேதனையளிக்கின்றது. ஆனாலும் இசைநிகழ்ச்சிகளின் போது இடப்படும் கூச்சல்களும், கும்மாளங்களும், ஏச்சுக்களும், பேச்சுக்களும், சண்டைகளும், சச்சரவுகளும் கூத்துக்கலையை பார்ப்பவர்களிடத்தில் இல்லை. குந்தியிருந்து விழிவெட்டாது, முடியும் வரை அமைதியாகவிருந்து, உணர்வுடன் பார்த்துச் செல்லும் கலைஞர்கள் இதற்காக ஒன்றுசேருகின்றமை சந்தோசமே. என அம்பிளாந்துறை சந்தியில் நின்று சீனித்தம்பி கதிர்காமதம்பியிடம் கூறிக்கொண்டிருந்தான்.

இவ்வேளையில்தான், அம்பிளாந்துறையில் அரங்கேற்றப்பட்ட கூத்தினைப் பற்றி தனது மனதில்பட்டதை கூற ஆரம்பித்தான் கதிர்காத்தம்பி. ‘அம்பிளாந்துறை கிராமத்தில் பல்வேறு கலைச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் கடந்த 25வருடங்களாக கூத்து ஆடி அரங்கேற்றப்படவில்லை. இந்நிலையில்தான் இதே கிராமத்தில் பிறந்து, தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையின் தலைவராக இருக்கின்ற சு.சந்திரகுமார் கூத்தொன்றினை ஆற்றுகை செய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். நீண்ட இடைவெளியை தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது கிராமத்தில் கூத்தினை ஆற்றுகை செய்ய வேண்டும் என எண்ணினாரோ தெரியவில்லை. ஆனால் அவ்வாறான இடைவெளியை தகர்த்தெறிந்தமை பாராட்டுக்குரியதே. இராமாயணக்கதையினைக் கொண்டு எழுதப்பட்ட ‘இராமநாடகம்’ எனும் வடமோடிக்கூத்தினையே ஆற்றுகை செய்துள்ளனர். இம்முயற்சியை கடந்த வருடமே இவர்கள், ஆரம்பித்திருந்தாலும், அதே ஆண்டு இக்கூத்தினை அரங்கேற்ற முடியாமல் போயிருக்கின்றது. ஆனாலும் முயற்சியை தளரவிடவில்லை.

இந்தவருடம் இக்கூத்தினை அரங்கேற்றியே ஆக வேண்டும் என்ற முயற்சியின் பலனாக, குறுகிய காலப்பகுதிக்குள் அவற்றினை ஆடி, அம்பிளாந்துறை கிராமத்தின் வேளாண்மை வயலொன்றில், இயற்சூழலோடு இணைந்த வகையில் களரியினை அமைத்து அரங்கேற்றியுள்ளனர். கூத்து ஆடுவதென்பது ஒருவிடயமாகவிருந்தாலும், கூத்தினை ஆடுவதற்கான கலைஞர்களை தெரிவுசெய்வது, அவர்களை இணைப்பது, எல்லோருக்கும் உரிய நேரத்தினை ஒழுங்குபடுத்தியெடுப்பது, அவர்களை முகாமை செய்வது என பல விடயங்களில் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரே ஊரினைச்சேர்ந்தவர்களை இணைப்பதென்பது மிகக்கஸ்டமான சூழலாகவிருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலைகளை இணைத்து இராமநாடக கூத்தினை அரங்கேற்றியிருக்கின்றமை மிகமிக பாராட்டுக்குரியதே. மண்முனை தென்மேற்கு பிரதேசம், மண்முனை மேற்கு பிரதேசம், மட்டக்களப்பு, சீலாமுனை, வந்தாறுமூலை என பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த கலைஞர்கள் இக்கூத்தில் பாத்திரமேற்றிருந்தனர். இச்செயற்பாடு மாவட்டத்தின் பதிவும் கூட.

எங்கோ, பரந்து விரிந்து நின்றவர்களை ஒரே நேரத்தில் இணைத்து கூத்தினை பழகி அரங்கேற்றியமையென்பது இலகுவானகாரியமுமல்ல. இதற்கு இணைப்பாக்கமாக செயற்பட்டவர்களின் சிறந்த திட்டமிடலும் இதில் பிரதிபலித்திருக்கின்றதென்பதும் இங்கு புலப்பட்டு நிற்கின்றது. கலைஞர்களை தெரிவு செய்த விதம்தான் இவ்வெற்றிக்கு காரணமும் எனக்கூட சிந்திக்ககூடும். குறிப்பாக இதில் ஈடுபட்ட கலைஞர்கள் கலை மீது அதீத பற்றுக்கொண்டவர்கள் என எண்ண முடியும். கலைப்பற்று இல்லாதுபோயிருந்தால் நீண்ட தூர இடைவெளியில் இருந்தவர்களை ஒன்று சேர்த்திருக்க முடியாமல் போயிருக்கும். ஒரு துறையில் ஆர்வமுள்ளவர்கள் அத்துறைசார்ந்து எங்கு என்ன நடந்தாலும் அங்கு நிற்பார்கள் இதைத்தான் இவ்விணைப்பும் ஏற்படுத்தி நிற்கலாம் எனவும் கருதமுடியும்.

பல பாத்திரங்களை கொண்ட இக்கூத்தில் 18 பேர் ஆடியிருக்கின்றனர். இக்கூத்திலே, பெண்பாத்திரம் ஏற்று நடித்த இருவரைத் தவிர ஏனையோர்கள் அனைவரும் இளைஞர்களே பாத்திரமே நடித்திருந்தமை இன்னமும் சிறப்புக்குரியது என்கிறார் கதிராமத்தம்பி. இக்கலைஞர்களில் எல்லோரும் இதற்கு முதல் கூத்துக்களில் ஆடியவர்கள் அல்ல. இதற்கு முதல் கூத்து ஆடிய கலைஞர்களையும், இதுவரை கூத்து ஆடாத கலைஞர்களையும் இணைத்து ஆடியதென்பதும் பாராட்டப்பட வேண்டியது. கலைகளை வளர்க்க கலைஞர்களை காகித துண்டுகளை வைத்து மதிப்பிட்டு கௌரவங்களையும், விருதுகளையும் வழங்கும் சூழலில் உண்மையான செயற்பாட்டு கலைஞர்கள் எங்கு இருக்கின்றனர் எனத்தேடி அவர்களுக்கு கௌரவங்களையும், விருதுகளையும் வழங்குகின்ற போது, அவர்கள் உண்மையில் மகிழ்ச்சி கொள்வர். பல கலைஞர்கள் பல செயற்பாடுகள் செய்துவிட்டு காகித துண்டுகள் இல்லாது இருக்கின்றனர். அவ்வாறானவர்களை கௌரவிப்பும் வழங்கும் திணைக்களங்களோ, அமைப்புகளோ கண்டுகொள்வதில்லை என்ற பார்வைகளும் இருக்கதான் செய்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் திணைக்களங்கள், சில அமைப்புக்களின் மத்தியில் கிராமங்களில் உள்ள கலையார்வலர்களையும், கலைஞர்களையும்; கொண்டு தேடி, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள வளர்ந்துவரும் இளம்கலைஞர்களையும், வளர்ந்து பெயர்பெற்று நிற்கின்ற அண்ணாவிமார்களையும் இக்கூத்துக்களிரியில் கௌரவித்திருந்தமையும் சிறப்புதான்.

நிறைந்த கலை ரசிகர்களின் முன்னிலையிலும், அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல மட்ட அரச உத்தியோகத்தர்களையும், சமயத்தலைவர்களையும், அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், கலைஞர்களையும், கலையார்வலர்களையும் இந்நிகழ்வுக்கு அழைப்புவிடுத்திருந்தமையுடன், பலர் இதில் பங்கேற்றிருந்தனர். இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் நடைபெற்ற கூத்தினை பல்கலைக்கழகத்தில் உள்ள விரிவுரையாளர்கள் முன்னின்று சமுகமட்டத்தில் நடத்தியிருக்கின்றமைதான் இன்னமும் சிறப்புதரு விடயமாகவுள்ளது.

எதிர்காலத்தில் மாணவர்களின் பாடத்திட்டத்தில் உண்மையான தொன்றுதொட்டு ஆற்றுகை செய்யப்பட்ட கூத்துக்களை மாணவர்கள் ஆடுவதற்கும், பழகுவதற்குமான சூழலை ஏற்படுத்த வேண்டும் இதற்கு பல்கலைகழக மட்டத்தினரின் சேவையும் தேவை. எனக்கூறியவனாக கதிராமத்தம்பியும் அவ்விடம் விட்டு அகன்றான்.