180நாளும் ஒரே சீருடையை அணியும் அவலம்

– படுவான் பாலகன் –

அங்கு உதவி செய்யிறாங்க, இங்க உதவி செய்யிறாங்க என பேசிக்கொள்கின்றார்கள்தான். ஆனால் படுவான்கரைப்பகுதியில் இன்னமும் எவ்வளவோ அபிவிருத்திகள் செய்ய வேண்டியிருக்கின்றன. படுவான்கரையில் இப்போது செய்யப்படுகின்ற அபிவிருத்தியின் வேகத்தினை பார்த்தால் இன்னும் ஐம்;பது வருடங்கள் சென்றாலும் தற்போதிருக்கின்ற எழுவான்கரையை எட்டமுடியாது போலத்தான் இருக்கின்றதென நிசாந்தனிடம் காந்தன் கவலையோடு பேசிக்கொண்;டிருந்தான்.

எழுவான்கரைப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் கற்று சாதிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலனவர்கள் படுவான்கரைப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களே. இப்பகுதியில் உரிய வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையினாலையே எழுவான்கரையை நாடவேண்டியவர்களாக இருக்கின்றனர். அதேவேளை தேசிய ரீதியாக சாதிக்ககூடிய பல மாணவர்கள் இருக்கின்றபோதிலும், சாதனையை நிலைநாட்டுவதற்கான வசதி, வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் சாதனைகளை வெளிக்காட்ட முடியாதவர்களாக உள்ளனர். குடும்பத்தில் காணப்படுகின்ற வறுமை நிலையின் காரணமாக இலவசக்கல்வியைக்கூட திருப்திகரமாக கொண்டு செல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர் என்ற கருத்தினையும் நிசாந்தன் முன்வைத்தான்.

படுவான்கரைப் பகுதியில் இல்லாத வசதிகள் குறித்து அங்கலாய்த்து கொண்டிருந்த போதும், ஒருவிடயத்தினை இன்னமும் அழுத்திக் கூறிக்கொண்டிருந்தான். அந்தவிடயம் காந்தனின் மனதில் நன்கு பதிந்துகொண்டது. அவ்வாறு எதுபற்றி பேசிக்கொண்டான் என்ற ஆவால் எல்லோருக்கும் ஏற்படலாம், அவன் பேசிக்கொண்டது, பாடசாலை சீருடை தொடர்பில்தான், பாடசாலை சீருடை என்றால் அரசாங்கம் வழங்குகின்றது தானே? என பலர் யோசிக்ககூடும். அவர்கள் யோசிப்பதில் தவறில்லை. அரசாங்கம் பிள்ளைகளுக்கு இலவச சீருடைகளை வழங்குகின்றது. ஒரு வருடத்திற்கு ஒரு சீருடையையே வழங்குகின்றது.

வருடம் பூராகவும் ஒரு உடையைதான் நாம் வீட்டில் அணிகின்றோமா? இல்லை, ஒரு வருடத்தில் எத்தனையோ உடைகளை வாங்குகின்றோம் அணிகின்றோம். மாதத்திற்கு நான்கு ஐந்து ஆடைகளை வாங்குகின்றவர்களும் உள்ளனர். அதற்கு மேல் வாங்குபவர்களும் உள்ளனர். அவ்வாறான நிலையில் அரசினால் வழங்கப்படும் ஒரு உடையை ஒருவருடம் முழுவதும் அணியலாமா? அவை சாத்தியமாகுமா? என பலர் சிந்திப்பதில்லை. ஆனாலும் ஒரு உடையுடனேயே ஒரு வருடத்தினை கழிக்கின்ற மாணவர்களும் படுவான்கரைப்பகுதியில் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலை மிகவும் வேதனையானதும், துர்;ப்பாக்கியமானதுமாகும்.
அன்றாடம் கூலி வேலை செய்யும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் சிலர், இன்னொரு புதிய பாடசாலை சீருடையை கடையில் பணம்செலுத்தி வாங்கமுடியதளவு வறியவர்களாக உள்ளனர். இதனால்தான் அரசாங்கம் கொடுக்கின்ற ஒரு சீருடையை ஒருவருடம் முழுவதும் ஒவ்வொரு பாடசாலை நாட்களிலும் அணிந்து வருகின்றனர். அண்ணளவாக 180க்கு மேற்பட்ட நாங்கள் ஒரு பிள்ளை ஒரு உடையையே அணிகின்றது. அவ்வுடையை ஒவ்வொரு நாளும் கழுவி, காயவைத்து மறுநாள் அணிய வேண்டும். ஒருநாள் அவ்வுடையை கழுவமுடியாத சந்தர்ப்பம் ஏற்;பட்டால்; அடுத்த நாள் அப்பிள்ளை பாடசாலைக்கு செல்லமுடியாது. அன்று அப்பிள்ளை விடுமுறையையே எடுத்துக்கொள்ள வேண்டியேற்படும். பாடசாலை விட்டு பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற்றால் அவ்வகுப்பில் நின்று வீடு செல்கின்ற போது மாலைப்பொழுதாக சென்றுவிடும். அதன்பின் தனது பாடசாலை சீருடையை கழுவமுடியாத நிலையினை அடைகின்றனர். இதனாலும் மறுநாள் பாடசாலைக்கு சமூகம் கொடுக்க முடியாதவர்களாக மாறுகின்றனர். மழை காலங்கள் ஏற்பட்டால் பிள்ளை பாடசாலைக்கு தொடர்;ச்சியாக செல்வதற்கும் சீருடை பெரும் பிரச்சினையாக அமைகின்றது. சீருடையில் தற்செயலாக கழுவியும் செல்லமுடியாத கறைகள் படிந்தால் அதே உடையுடனே ஒருவருடத்தினை கழிக்க வேண்டி ஏற்படும்.

சீருடை என்பது பாடசாலை மாணவர்களுக்கு அவசியமாக இருக்கின்ற போதும், அரசினால் வழங்கப்படுகின்ற ஒரு சீருடை ஒருவருடத்திற்கு போதுமானதல்ல. வசதிகள் படைத்தவர்கள் தமக்கு தேவையான எத்தனை சீருடைகளையும் கொள்வனவு செய்துகொள்வர். ஆனால் அரசாங்கத்தினையும், இலவசக் கல்வியையும் மாத்திரம் நம்பி வாழ்கின்ற மாணவர்களின் நிலை அவலமே. சீருடையின்றி பாடசாலையைக் கல்வியையும் இழக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும், வர்த்தகர்களும் முன்வர வேண்டும். எல்லோரும் செய்கின்ற வேலைகளில் முகத்தினை காட்டி, உதவிசெய்வதாக தம்மையும் இனங்காட்டி செல்ல நினைப்பதனை நிறுத்தி பாதிக்கப்பட்டிருக்கின்ற, வசதி, வாய்ப்பின்றி தவிர்க்கின்ற படுவான்கரைப் பகுதிபோன்ற பிரதேசத்தில் வாழ்கின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் உதவி கரங்கள் நீட்டப்பட வேண்டும் என்பதே நிசாந்தனின் வேண்டுகோளுமாகும்.

நிசாந்தன் கூறிய இவ்விடயங்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த காந்தன் நமது படுவான்கரைக்கு எப்போ விடிவு பிறக்குமோ! என்று முணுமுணுத்தவனாக இருள்சூழ்ந்த வானத்தினை அவதானித்து ஒரு ஒளிகிடைக்காதா வீதியால் செல்வதற்கு என்று நினைத்தவனாக சில்லிக்கொடியாறு நோக்கி சென்றான்.

 

arangam