கல்வி கற்பதற்கே விருப்பமில்லாது இருந்த நான் இன்று பல்கலைக்கழக மாணவன்!”

THUSANTHAN VAYIRAMUTHTHU

உண்மையில், கல்வியை சிறு பிள்ளைகள் ஆர்வத்துடன் கற்பதும், வெறுப்பதும் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது வெறும் கண்துடைப்பாக இருந்த காலத்தில் இவ்வாறான அணுகுமுறையில் கற்பித் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்தான்….

கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயம். பாடசாலைக் கட்டிட சுவர்கள் கூட மாணவர்களுக்கு கல்விபுகட்டும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

“கல்வி கற்பதற்கே விருப்பமில்லாது இருந்த என்னை பல்கலைக்கழக மாணவனாக நிறுத்தியது கலையே” என்கிறார் கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவன் மோசஸ் பிரபாத்.
கேகாலை மாவட்டத்தின் கண்டி – கேகாலை எல்லையில் அமைந்துள்ள கிராமம்தான் கந்தலோயாக்கிராமம். இக்கிராமம் நகரில் இருந்து 25 கிலோமீற்றர் தூரத்தில் இருந்தாலும் இது மலையில் இருப்பதனால் என்னவோ போக்குவரத்து வசதியோ, மருத்துவ வசதியோ இங்கு இல்லை. இதனால் இங்கிருந்த மக்களில் பலர் இடம்பெயர்ந்து அருகில் உள்ள நகரான நாவலப்பிட்டிக்கு சென்றுவிட்டனர். இன்று நாவலப்பிட்டியை குட்டி கந்தலோயா என்று கூறுமளவிற்கு கந்தலோயா மக்கள் அங்கு குடியேறியுள்ளனர்.

ஆனாலும், எல்லாவற்றிலும் பின்தங்கியிருக்கும் இந்தக் கிராமத்தில் இன்னும் பலர் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்! அங்கிருந்து ஒலிக்கும் குரல்தான் மோசஸ் பிரபாத்(25வயது). மலை உச்சியில் இருக்கும் கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் 2002இல் மோசஸ் பிரபாத் முதலாம் ஆண்டில் சேர்ந்தபோது ஏலக்காய் சேமித்துவைக்கும் ஒரு சிறு கட்டிடமே பாடசாலையாக இருந்தது.

“பழுதடைந்த ஒரு தேயிலைத்தோட்ட கட்டிடத்திலேயே 1ஆம் வகுப்புத் தொடக்கம் 4ஆம் வகுப்புவரை கற்றேன். நான் சேரும்போது எனக்கு 8வயது.(6வயதில்தான் தரம் 1இல் சேரவேண்டும்) அப்போது தரம் 1 தொடக்கம் 7வரையான வகுப்புக்கள் மட்டுமே கந்தயோ தமிழ் மகாவித்தியாலயத்தில் இருந்தன. அதற்குமேல் பிள்ளைகள் படிப்பது குறைவு. தோட்ட வேலைகளுக்குச் சென்றவிடுவார்கள். அப்படி படிக்க விரும்பும் பிள்ளைகள் நகரத்துக்குதான் போகவேண்டும். படிக்க விரும்பம் இருந்தாலும் நகரத்திற்கு செல்லமுடியாத பிள்ளைகள் தரம்7 உடன் நிறுத்திக்கொண்டு கொழும்பில் உள்ள துணிக்கடைகளுக்கோ ஹோட்டல்களுக்கோ வேலைக்கு சென்றுவிடுவர். இன்னும் சிலர் கல்வி கற்கும் சந்தோசத்தில் ஒரே வகுப்பில் இரண்டு மூன்று தடவைகள் இருந்து (சித்திபெறாமல்) கற்ற வரலாறுகளும் உண்டு.” என்று கூறும் மோசஸ் பிரபாத் தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறார். கந்தலோயா கிராமத்தில் இருந்து பல்கலைக்கழக கல்விவரை உயர்ந்து வந்த முதல் மாணவனாகவும் உள்ளார்.

மோசஸ் பிரபாத்

பொதுவாக ஆரம்ப காலங்களில் தேயிலைத் தோட்டங்களில், தோட்டங்களில் வேலைசெய்பவர்களின் வாழ்விடங்கள்(லயன் அறைகள்) சின்ன சின்ன அறைகளாக தொடராக அமைக்கப்பட்டிருக்கும். அதனைவிட தேயிலை, வாசனைத்திரவியங்களை களஞ்சியப்படுத்தும் இடமும் தேயிலைத் தொழிற்சாலையும்தான் ஓரளவு நிலையாக கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கும். அந்த நிலையான கட்டிடத்தின் ஒரு பகுதியில் பாடசாலை நடக்கும். அப்படி ஆரம்பமானததுதான் இந்த கந்தலோய பாடசாலை. பின்னர் 1980 இல் இலங்கை அரசாங்கம் அரச பாடசாலையாக பொறுப் பேற்றுக்கொண்டது. அப்போதும் கட்டிடம் தனியாக அமைக்கப்படவில்லை. ஒரே ஒரு அதிபர் மட்டுமே கற்பித்தலுக்கும் அலுவலக வேலைகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கிறார்.

“2002இல் நான் பாடசாலையில் சேரும்போது ஒரே ஒரு அதிபர் மட்டுமே எல்hலவற்றுக்கும் பொறுப்பாக இருந்தார். ஆரம்பத்தில் எங்களில் பெரும்பாலோனோருக்கு கல்வி கற்பதற்கு விரும்பமே இல்லை. எனக்கும் அவ்வாறுதான் இருந்தது. அதனால்; அதிபர் எங்களை கலைகளில் ஈடுபடுத்தினார். பாட்டு கூத்து, நாடகம் என நாங்கள் கலையின்பால் ஈர்க்கப்பட்டோம். அதற்காகவே பள்ளிக்கூடம் போவதற்கு ஆசையாக இருந்தது. அப்படியே சின்ன சின்ன கதைகளை வாசிக்கவைத்து மெல்ல மெல்ல வாசிப்பு பழக்கத்தினையும் அதிகரிக்கச் செய்தார். 2003இல்தான் ஆசிரியர்கள் இந்தப்பாடசாலக்கு நியமிக்கப்பட்டனர். அதன்பின் கலைகள் இன்னும் அதிகமாயிற்று. நாட்டார்பாடல் வீதி நாடகங்கள் என நாங்கள் ஆடிப்பாடித்திரிந்தோம். அதிலும் ஒரு வரன்முறையான கற்றல் இருந்தது. நாட்டார் பாடல்களைத் தொகுத்தது, கிராமங்களுக்குள் சென்று விழிப்புணர்வு வீதிநாடகங்களைப் போட்டது, விளையாட்டு, காமன்கூத்து என நிகழ்வுகள் களைகட்டியிருந்தன. அரச பாடத்திட்ட கல்விக்கு ஒதுக்கிய நேரம் குறைவாகத்தான் இருந்தது. ஆனாலும் கற்றல் ஆரோக்கியமாக இருந்தது. இவ்வாறான கலையம்சங்களினூடகத்தான் கற்றலில் ஈடுபட்டோம். அதற்காக உழைத்த எமது அதிபர் ஆசிரியர்கள் என்றும் நினைவுகூரப்படவேண்டியவர்கள்” என்கிறார் மோசஸ் பிரபாத்.
உண்மையில், கல்வியை சிறு பிள்ளைகள் ஆர்வத்துடன் கற்பதும் வெறுப்பதும் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது வெறும் கண்துடைப்பாக இருந்த காலத்தில் இவ்வாறான அணுகுமுறையில் கற்பித் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்தான். அந்த ஆசிரியர்களும் வசதிபடைத்த, மிக சொகுசாக இங்க வந்து போனவர்கள் அல்லர்.

ஆசிரியர்கள் தேயிலை ஏற்றிச்செல்லும் லொறி, தனியார் வான்களிலேயே வருவார்கள். பாடசாலைக்கு வந்து போவதே அவர்களுக்கு ஒரு முழு நாள் பிரயாணம்.

“இங்கு படித்த மாணவர்கள் அருகில் இருந்த லயன்களில் வாழ்பவர்களாக இருப்பர். ஆனால், ஆசிரியர்கள் வேறு இடங்களில் இருந்து வருவர்கள். அவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில்தான்; இங்கு வந்துபோனார்கள். போக்குவரத்து வசதிகள் இன்மையால் தேயிலை ஏற்றிச்செல்லும் லொறி, தனியார் வான்களிலேயே வருவார்கள். பாடசாலைக்கு வந்து போவதே அவர்களுக்கு ஒரு முழு நாள் பிரயாணமாக இருக்கும். பல சமயங்களில் லயன்களில் வாழும் பெற்றோர்களே ஆசிரியர்களுக்கான உணவையும் கொடுத்தனர். இப்பொழுதெல்லாம் இப்பாடசாலைக்கு பல மைல் தூரங்களில் இருந்தும் மாணவர்களும் வரத்தொடங்கிவிட்டனர். இவர்கள் வரும் தூரத்தின் 8 கிலோ மீட்டரைக் குறைத்துக் கொள்வதற்காக மூன்று கிலோமீட்டர் தூரமே உள்ள குறுக்கு வழியை பயன்படுத்துகின்றனர். அந்த வழி மழைக்காலங்களில் மண் சரிவு அபாயம் உள்ள வழியாகும். இந்த அபயாகங்களைக் கடந்துதான்மாணவர்கள் கல்வி கற்கவேண்டியுள்ளது. போக்குவரத்து வசதி சரியாக இருந்தால் பல பிரச்சினைகளை நாம் தீர்த்துக்கொள்ள முடியும்.” என்று கூறுகிறார் மேசஸ் பிரபாத்.
2004ற்குப் பிறகுதான் இப்பாடசாலைக்கென்று கட்டிடங்கள் அமைக்கப்படத்தொடங்கியது. பின்னர் படிப்படியாக அடுத்த கட்டிடமும் வகுப்புகளும் அதிகரிக்க ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். கிதுல்கல கோட்டத்தில் உள்ள35 படசாலைகளுள் 05 பாடசாலைகள் மட்டும் தமிழ் மொழி மூல பாடசாலைகளாகும். அவற்றில் ஒன்றுதான் இந்த கந்தலோய தமிழ் வித்தியாலயம். 2013 இல்தான் முதன்முறையாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு கந்தலோயா பாடசாலையில் இருந்து மாணவர்கள்; தோற்றியுள்ளனர். அதில் சித்தியடைந்தவர்கள் 7பேர். அதில் மோசஸ் பிரபாத்தும் ஒருவர்.
“இங்கு உயர்தரம் இல்லாததினால் எட்டியாந்தோட்டைக்கு;ச செல்லவேண்டியதாயிற்று. அவ்வாறு உயர்தரம் கற்க சென்ற 7பேரில் 6பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு இப்n;பாழுது பல்கலைக்கழகத்திலே கற்றுக்கொண்டிருக்கின்றோம்.” என்கிறார் பெருமிதத்துடன். ஆனாலும் இவர்கள் தமது பாடசாலையை மறக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து லீவுக்கு ஊருக்கு வரும்போதெல்லாம்; பாடசாலையிலேயே அவர்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

பாடசாலைக் கட்டிட சுவர்கள் கூட மாணவர்களுக்கு கல்விபுகட்டும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

“இன்று எங்கள் பிள்ளைகளுக்கு நாங்களே கல்வி கற்பிக்கின்றோம். கல்வியைப் புகட்டுவதற்கு எங்களுக்குள்ளே ஒரு முறைமையை பேணினோம். இரவுநேர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. சனி, ஞாயிறு தினங்களும் வீட்டுக்கு செல்லாது பாடசாலையிலேயே பிள்ளைகள் தங்கினர். இவற்றை சில பெற்றோர் விரும்பவில்லை. ஆனால் பிள்ளைகள் அதற்கு எதிர்மாறாக வீடுகளுக்கு செல்ல மறுத்தனர். பாடசாலையின் மீது பற்றுக்கொண்டனர். கல்வியில் பற்றுக்கொண்டனர். அவர்கள் வரைதலிலும், பழுது பார்த்தல், பாடசாலை வளாகத்தில் ஏதாவது ஒன்றை நிர்மாணித்தல் போன்ற செயற்பாடுகளிலும் பங்கெடுகின்றனர். ஓய்வு நேரங்களில் எல்லாம் படைப்பு வேலை, செயற்பாடுகளுக்கு மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். படிப்பில் மட்டுமல்ல ஏனைய செயற்பாடுகளிலும் முதன்மை மாணவர்களாக மிளிர்கின்றனர். பாடசாலைக் கட்டிட சுவர்கள் கூட மாணவர்களுக்கு கல்விபுகட்டும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்களாலேயே வரையப்பட் ஓவியங்களும் வாசகங்களும் சுவர்களை நிறைத்துள்ளன. அன்று எதிர்த்த பெற்றோர்கள் இன்று எமது பாடசாலையினை தேடி வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பெறுபேற்றில் கிதுல்கலகோட்ட மட்டத்திலேயே முதலாலது இடத்தை இ;ப்பாடசாலை பெற்றது.” என்று கூறும் மேசஸ்பிரபாத், பொருளாதார உதவிகள் இல்லையேல் தாம் இப்போதுள்ள இந்த நிலைக்கு வந்திருக்கவும்முடியாது என்கிறார். தமது கல்விக்காக பொருளாதார உதவிகளை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர்கள் பற்றியும் குறிப்பிடுகிறார்.

“ஒரு தோட்டத் தொழிலாளியின் சம்பளத்தில் மூன்றுவேளை சாப்பிடுவதே பெரும்பாடு. அதில் படிப்தெல்லாம் எட்டாக்கனவுதான். ஆனால், வெளிநாட்டில் இருக்கின்ற ‘உதவி நண்பர்கள் அமைப்பு’ எமது படிப்புக்கு பெரும் உதவியாக நின்றது. எங்களுக்கான கல்விச் செலவுகளை அவர்களே ஈடுசெய்தனர். தோட்டப்புற மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டாமைக்கு குடும்ப வறுமையும் ஒரு முக்கிய காரணம்தான். குடும்ப வறுமையை ஈடுசெய்ய சிறிய வயதில் வேலைக்குச் சென்று நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் நினைக்கின்றனர். அதனால்தான் படிப்பு பாதியில் நிற்கிறது. படிப்பில் ஆர்வமும் இல்லாமல் போகிறது.” என்று வேதனைப்படும் மேசஸ் பிரபாத்தின் ஊரான கந்தலோயா ஒரு காலத்தில் பணப்பயிருக்கு பேர்போன இடமாக இருந்துள்ளது. ஏலம், தேயிலை போன்ற பயிர்ச்செய்கைகள் இப்பகுதியில் அதிகம் செய்கை பண்ணப்பட்டன. 1000ஏக்கர் ஏலம் பயிர்செய்கை பண்ணப்பட்ட இடத்தில் இன்று 5ஏக்கரில் ஏலம் பயிர்செய்யும் நிலையே ஏற்பட்டிருக்கின்றது. தேயிலைப் பயிரும் அவ்வாறே குறைவடைந்துள்ளது.

நன்றி கட்டுமரம்